செய்திகள் அலசல்

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்புக்கான ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதில் முன்னணி மென்பொருள் கம்பெனிகள் கலந்து கொண்டிருக்கின்றன. ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு தேடி வந்த இந்த நிகழ்ச்சிக்கு, ஒவ்வொரு மாணவரிடமும் 750 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளார்கள். மொத்த வசூல் 7.5 லட்சம் ரூபாய்.

ஒரு நாள் நிகழ்ச்சிக்கு அப்படி என்ன செலவு என்று பத்திரிகைக்காரர்கள் கேட்டதற்கு, துணைவேந்தர் சொன்ன பதில்: நிகழ்ச்சி ஏற்பாடு செலவு, அன்று வேலை பார்த்த பத்து பணியாளர்களுக்கு சம்பளம், வந்திருந்த கம்பெனி பிரதிநிதிகளுக்கு கவனிப்பு, வேலை பார்த்தவர்களுக்கு டீ, காப்பி செலவு இவ்வளவு ஆயிற்றே என்கிறார். இது போன்ற செலவுகளை வேலையில்லாத பட்டதாரிகள் தலையில்தான் கட்ட வேண்டுமா? அப்படியே 7.5 லட்சம் ரூபாய் செலவானாலும், அதைப் பணியாளர்களைத் தேடி வந்த கம்பெனிகள் ஏற்றுக்கொள்ளக்கூடாதா என்ற கேள்விகள் மேலெழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட கணக்குகளை வெளியிடுவதும் நிர்வாகத்தின் தார்மீகக் கடமையென்று கருதுகிறோம்.

*****

இப்படி ஒரு எஸ்.எம்.எஸ்.

லூஸ் டாக் கல்யாணராமன் : அமெரிக்காவில் ஒசாமா பின் லேடன் ஜனாதிபதியாகி விடுவார் போலிருக்கே? ஹில்லாரி கிளிண்டனை எதிர்த்து ஆரம்பக் கட்டத் தேர்தலிலே முன்னணியில் இருக்காராமே?

விஷயம் தெரிந்த விஜயகுமார் : அட, மண்டூ! அது ஒசாமா இல்லேடா! ஒபாமா!

ஒசாமா என்றதும் நினைவுக்கு வருகிறது. ஒசாமாவின் மகன் அமைதியான பேச்சு வார்த்தைகளின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்கிறாராமே? நெச(i)மா?

*****

சிரித்து வாழவேண்டும்

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பது பழைய மொழி. நியூயார்க்கில் உள்ள மனோதத்துவ அகடமியின் பேராசிரியர் மெலிசா வான்சர் தலைமையில் சிரிப்பு பற்றி ஆராய்ந்த குழுவின் அறிக்கை நம்மைச் சிந்திக்க வைக்கிறது. ‘சிறியவர் பெரியவர் யாராயிருந்தாலும் சிரிப்புதான் ஆரோக்கியத்தின் அடித்தளம். மன அழுத்தத்தைப் போக்கிக் கொள்ள சிரிப்புதான் உதவுகிறது. மனதில் எதையும் அடக்கி வைக்காமல் சிரித்து வாழக் கற்றுக்கொண்டால் உடல் நலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. வகுப்பறை, காரியாலயம் எதுவானாலும் ஒரு சிறு புன்னகைகூட பல பிரச்சினைகளைத் தீர்க்குமென்று’ இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ‘நரசிம்மராவ்’கள் கவனிக்கவும்!

*****

வீட்டில் எப்போ பார்த்தாலும் மனைவியுடன் சண்டையா? நிம்மதி போகிறதே என்று கவலைப்படாதீர்கள்! அடிக்கடி சண்டைபோடும் தம்பதிகளின் ஆயுட்காலம் அதிகரிக்கிறதாம். கோபத்தை வெளிப்படுத்திப் பரிமாறிக்கொள்வதால் அழுத்தம் நீங்கி நீண்ட ஆயுளுடன் இருப்பதாகவும் கோபத்தை அடக்குபவர்கள் சீக்கிரம் இறந்துவிடுவதாகவும் ஆராய்ச்சியாளர் ஹார்பர்க் கூறுகிறார் (சொந்த அனுபவமோ?!). சண்டை போட்டுக்கொண்டு நீண்டகாலம் வாழ்வதற்கு, சண்டை போடாமல் மனைவி
சொல்மிக்க மந்திரமில்லை என்று தலையை ஆட்டிவிட்டு நிம்மதியாகப் போய்ச் சேரலாம், சிறிது காலம் வாழ்ந்தாலும் போதும்’ என்கிறார் ஒரு அனுபவஸ்தர். இறந்தும் உயிர் வாழ்கிறான்!

*****

ஹைதராபாதைச் சேர்ந்த தம்பதிகளான் வேணுகோபாலன் வேதம் மற்றும் ஸ்வாதி இவர்களின் 18 மாதக் குழந்தை இஷான் மூளைப் புற்றுநோய் தாக்கி அறுவை சிகிச்சை செய்து பலனில்லாமல் கோமா நிலைக்குச் சென்றுவிட்டான். ‘இனி மகன் பிழைக்கமாட்டான்’ என்ற நிலையில் வேணுகோபால் தம்பதியினர் தனது மகனின் உறுப்புகளை தானமாகக் கொடுக்க முடிவு செய்தனர். இப்போது அந்த 18 மாதக் குழந்தையின் கண்களால் இருவர் பார்வை பெற்றிருக்கிறார்கள். அவனது சிறுநீரகம் ஒரு பெண்ணுக்கு மறுவாழ்வு தந்திருக்கிறது. இதேபோலத்தான் சில மாதங்களுக்கு முன் ஒரு ராணுவ ஜெனரல் தனது மகனின் உடலுறுப்புகளை தானம் செய்தார். மனிதம் மரித்துவிடவில்லை என்பதற்குச் சான்றுகள் இவை.

*****

சீதைக்கு ராமன் சிஸ்டர்

இதுதான் மலேசிய ராமாயணம். இதன்படி ராமனின் தந்தை தசரதன், மண்டோதரியைத் திருமணம் செய்கிறார். மண்டோதரி தன்னைப்போலவே ஒருபெண்னை உருவாக்கி (க்ளோனிங்?) ராவணனிடம் அனுப்புகிறார். அவர்களுக்குப் பிறந்த மகள்தான் சீதா. அவரைத்தான் ராமன் மணம் புரிகிறார். வனவாசத்தின்போது ஒரு மந்திரசக்தி நிறைந்த குளத்தில் ராமனும் சீதையும் குளிக்க அவர்கள் குரங்காக மாறுகிறார்கள். அப்போது கருத்தரிக்கும் சீதா கருவை வாந்தியெடுத்து வெளியேற்றுகிறார். அதை ஒரு மீன் தின்றுவிட அனுமான் பிறக்கிறார்.

ஏதோ ரீமிக்ஸ் மாதிரி இல்லை?!

*****

ஒரே பிரச்சினையை பல்வேறு நபர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள்?

இதோ ஒரு குட்டிக் கதை:

கடவுள் மூன்று பக்தர்களை அழைத்து ‘இன்னும் ஒருவாரத்தில் உலகம் அழிந்துவிடும்’ என்று சொன்னார்.

உடனே அமெரிக்கர் தனது நாட்டு டி.வியில் சொன்னார், "உங்களுக்கு ஒரு நல்ல சேதியும், கெட்ட சேதியும். கடவுள் இருக்கிறார் என்பது நல்ல சேதி, இன்னும் ஒரு வாரத்தில் உலகம் அழிந்துவிடும் என்பது கெட்ட சேதி".

ரஷ்ய நாட்டுக்காரர் தன் மக்களிடம் சொன்னார், "உங்களுக்கு ஒரு கெட்டசேதியும், இன்னொரு ரொம்ப கெட்ட சேதியும். முதல் சேதி கடவுள் இருக்கிறார் என்பது, இரண்டாவது இன்னும் ஒருவாரத்தில் உலகம் அழியப்போவது என்பது".

மூன்றாவது நபர் பில் கேட்ஸ், "நான் ஒரு நல்ல சேதி, இன்னொரு ரொம்ப நல்ல சேதி சொல்லப்போகிறேன். இதில் நல்ல சேதி என்பது, இன்று கடவுள் மூன்று பேர்களிடம் பேசினார், அதில் நானும் ஒருவன். இன்னொரு மிக நல்ல சேதி என்பது, இன்னும்
ஒரு வாரத்தில் உலகம் அழிந்துவிடும். இனிமேல் கம்ப்யூட்டரில் ‘விண்டோசு’டன் போராட வேண்டியதில்லை".

ஒரு ஆண்டுவிழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராம சுப்ரமணியம் கூறியது.

***** 

குரங்கு பிடிக்கப் பிள்ளையார்

எப்படியோ ஒரு வழியாக ஹர்பஜன், சைமன்ட்ஸ் தகராறு சுமூகமாக முடிந்து விட்டது. ஹர்பஜனுக்கு வழங்கப்பட்ட மூன்று பந்தயங்களிலிருந்து நீக்குவதான தண்டனை திரும்பப் பெறப்பட்டது. இப்போது அவரது ஒரு டெஸ்ட் சம்பளத்தில் ஐம்பது சதவிகித அபராதம். ஹர்பஜன் சைமன்ட்ஸைத் திட்டினதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால் இனவெறியைத் தூண்டும் வார்த்தைகளை, குரங்கு என்ற வார்த்தையைப் பிரயோகப்படுத்தவில்லை என்று சொல்கிறார்கள். எப்படியோ குரங்கு பிடிக்க பிள்ளையாராக முடிந்தவரை மகிழ்ச்சிதான்!

*****

About The Author