அன்பின் வெம்மையில் உருகிடுவோம்

உயரும் இமயச் சிகரத்தில் – கொலு
அமரும் சோகத் தொழிலரசீ!
துயரம் துளும்பும் கடிதத்தால் – உளம்
தொட்டு விட்டாய் அடீ கட்டழகி

நத்தை வயிற்றுள் கடல்மடியில்
நாளும் துயிலும் முத்துக்கள் போல்
சித்தம் குளித்து விழிக்கடையால்
சிதறிய முத்துக்கள் இவ்வரிகள்.

நெஞ்சின் நெடிய புழுக்கத்தால்
நினைவுகள் வேர்த்துக் கொட்டியதில்
கொஞ்சம் சுமந்து வந்த இதில்
கோடி யுகங்கள் தெரிகிறது.
எனில்

வேதனை வேண்டாம் வடிவழகீ!
– நல்ல
வேளை வந்திடும் சீக்கிரமே;
சோதனை யாவும் வென்றிடுவோம்
– புது
சோபிதம் அன்று வாழ்வுபெறும்.
அதுவரை
தும்பிகள் காதல் இசைக்கட்டும்;
– பிறைத்
தோணியில் நிலவு மிதக்கட்டும்;
அம்புவி மீதினில் நாமிருவர்
– நிறை
அன்பின் வெம்மையில் உருகிடுவோம்.

loading...

About The Author

1 Comment

  1. suriya, saras

    வணக்கம்.தங்களின் அன்பில் வெம்மையில் உருகிடுவோம் என்ற கவிதையைப் படித்து இன்புற்றேன்.இனிய நல் வாழ்த்துக்கள்

Comments are closed.