எண்ணங்கள்

சூரியன்
உன்னை மொழிபெயர்ப்பான்;
சுடச்சுட எண்ணு!

நிலா
உன்னை நெட்ருச் செய்துகொள்ளும்
ஈரமாக எண்ணு!

மனிதனே!
எண்ணங்களின் மடியில் படு!
எண்ணங்கள்
உன் மடியில் படுக்க எழு!

உன்
தூக்கம் கூடப்
பூக்கத் துடிக்கும்
ஓர் எண்ணமாய் இருக்கட்டும்.

மரணத்தையும்
உன் கடைசிச் சிந்தனையாக
விட்டுவிட்டுப்போ!

எண்ணு மனிதனே
எண்ணு!
விண்ணையும் மண்ணையும்
விரிவுபடுத்தும்
விசாலப் பரப்பிலிருந்து எண்ணு!

பரிணாமம்
விலங்குகளை உரித்து
வெளியே உன்னை எடுத்தது…
உன் முகம் பார்க்க அல்ல..
உன் அகம் பார்க்க..

ஞாபகம் வை!
வீணையின் ஆன்மாவில்
இசை இருப்பதுபோல்…
இசை மட்டுமே இருப்பதுபோல்
இருக்கட்டும் உன்
எண்ணங்களில் தூய்மை.

காய்கள்
தவம் செய்கின்றன;
வரங்களில்
கனிகளாகின்றன.
வரம் என்பது
அடையப்படுவதல்ல..
ஆவது!

இருட்டின் தியானம்
விடியலைப் பெறுவதல்ல..
விடியல் ஆவது!

பாட்டாக மாற முடியாதவன்
பாடமுடியாது தெரியுமா?
பாடமாக இல்லாதவன்
எப்படிப் பாடம் நடத்துவான்?

வெளிச்சத்தின் புதல்வ!
சிந்தி .. சிந்தித்து
வெளிச்சமாகி விடு!
உயர்ந்ததை எண்ணு!

மலைகள்
மாலை சூட்டட்டும் உனக்கு!
ஆழமாய் –
வெகு ஆழமாய்ச் சிந்தி!

ஆழங்களைத்
தட்டில் வைத்துக் கடல்கள்
ஆரத்தி எடுக்கும் உனக்கு!

பொட்டுப் பனித்துளியை
எண்ணு!
அதை மழையாய்ப் பூரணப்படுத்து!

ஓர்
ஒல்லி அரும்பை நினை!
அதன்
கருவில் இருந்து நீயே
வனங்களைப் பிரசவம் செய்!

மின்மினிகளோடு
நீ பேசு!
வார்த்தைகளுக்கு அர்த்தங்களாய்
வரவழைத்துக் கொடு
நட்சத்திரங்களை!

ஆனால்,
மலட்டு வாமனங்களில்
மாட்டிக் கொள்ளாதே!

ஓர்
அலையாய் இருப்பது
பிழையாய் விடாது
அது
கடலின் விதையாய் இருந்தால்!

விக்கல் விழாத தூக்கங்களில்
நீ ஒரு கல்…
வெறி இரவுகளில்
நீ ஒரு விலங்கு!
எண்ணும்போது மட்டுமே
நீ ஒரு மனிதன்!

நீ தெய்வமாக வேண்டாம்;
மிருகமாகவும் வேண்டாம்;
மனிதனாக இரு!

நீ
அமுதமாக வேண்டாம்!
ஆலகாலமாகவும் வேண்டாம்;
தண்ணீராக இரு!

ஏன்?

இது சுவர்க்கமாக வேண்டாம்;
நரகமாகவும் வேண்டாம்;
பூமியாக இருக்கட்டும்..

போதும்!

உன்
சிந்தனை நாளங்களில்
மானுட இரத்தம்
சிந்திசைத்து ஓடட்டும்!
வாழ்க்கையின் உதடுகள்
உன்னைப்
புகழால் உச்சரிக்கட்டும்!

உன்
கபாலத்தில் எதற்குக்
கணக்கற்ற இரகசிய அறைகள்?
திறப்புகளைக் கருது!
மரங்களும் உன் மரியாதையும்
விடுதலை பெறட்டும்!

நேர்மையை நேசி!
பூட்டுகளிலிருந்து நிச்சயம்
இரும்பும் தப்பும்
நீயும் தப்புவாய்!

உண்மை நதியாக
நீ இரு!
இல்லாவிட்டால்
உண்மை நதியோரம்
நீ குடியிரு!

நல்லதை நோக்கிய
பாதையாய் இருந்தால் என்ன?
பாதங்களாய் இருந்தால் என்ன?
நியாயத்தின்
கன்னத்தில் நீ முத்தமிடு!
இல்லாவிட்டால்
நியாயம்
உன் கன்னத்தில் முத்தமிடவிடு!

பார்த்தீனியப் பாத்திகளில்
மேயவிடாதே உன் சிந்தனைகளை!
முன்னுரையில்
சுகம் எழுதும் எல்.எஸ்டி.கள்
முடிவுரையில்
சோகங்களையே எழுதும்!

மாசு முகாம்களில்
மயக்கும் விருந்துகள் இருக்கலாம்!
மனத்தை அனுப்பி வைக்காதே!

காமத்தின்
உறக்கம் கூடப் பத்துப்பேர்
கற்பைச் சூறையாடிவிடும்!

நடக்க முடியாத
பொய் கூட, நான்கு உண்மைகள்மேல்
கற்களை விட்டெறியும்!

நனைய
விருப்பம் இருந்தால் அன்பு
நதிகளோடு நட்புக்கொள்!

எரிந்துவிடத் தீர்மானித்தால்
என்னிடம் கேட்காதே
வெகுளிக்கு இடம் கொடு!

கண்களில்
கோடாரிகளோடு உன்வீட்டுச்
சன்னலைத் திறக்காதே!

செடி கொடிகளின் இதயங்கள்
இரத்தம் கொட்டும்!

துப்பாக்கிக் காடுகளில்
சுற்றிவரும்
மனத்தில்
கொலைவாடை இல்லாமல்
வேறென்ன இருக்கும்?

உன்
வயிற்றில் பசி இருப்பது
நியாயம்!
ஆனால் தட்டில்
மற்றவன் உணவிருப்பது?

உன் உள்ளம்
தூய்மை பெற ஒவ்வொரு நாளும்
புனலாடட்டும்
அதற்காக ‘அழுக்காறு’ தேடி ஓடாதே!

வண்ணங்கள்
தேவையெனில் வானவில்லிடம்
கேள்!

பச்சோந்திகள்
பரிசாகத் தந்தாலும் வேண்டாம்!

கூர்மைகள்
வேண்டுமெனில் எழுதுகோல்கள்
முனைகளில் உட்கார்ந்து யோசி!
ஓநாய்களின்
பற்களிடம் பழகப் போய்விடாதே!

எத்தனைப்
பொத்தல்கள் விழுந்தால் என்ன?
உன் மனம்
புல்லாங்குழலாகட்டும்!
இசை
பொங்கிப் பெருகட்டும்!

காயம்பட்ட
எண்ணங்களுக்கு
மறதி மருந்து போடு!
வாழ்க்கைச் சிறகெழுப்பி
வானத்தை வலம் வா!

loading...

About The Author

1 Comment

  1. manuventhan(theebam.com)

    மனிதத்தை தேடும் எம்மை கவர்ந்த வரிகள்.
    நீ தெய்வமாக வேண்டாம்;
    மிருகமாகவும் வேண்டாம்;
    மனிதனாக இரு!

Comments are closed.