காற்று -11

30. விளக்கம் தேவைப்படாத
வார்த்தையாய்
காற்று

31. எட்டிப் பார்த்துப் போகிற
உறவின் மத்தியில்
கூடவே வாழ்கிற
நட்பாய்..
உச்சத்தில் நிறுத்தி
கை தட்டல்
வாங்கிக் கொடுக்கும்
உள் மூச்சாய்..
சாதனைகளைச் செய்ய வைத்து
சிறு பிள்ளையாய்
அருகில் நின்று
இயங்குவதே தெரியாத
கண்ணாமூச்சியாய்..
கண்ணீர் வரும் நேரம்
ஈரம் காய வைத்து
துடைத்தெறியும் அன்பாய்..
மீண்டும் உயிர்த்தெழ வைக்கும்
ஜீவனாய்
எனக்கே எனக்காக
காற்று!

32. உன் முகத்திரையை
விலக்கப்
போராடுகிறது
காற்று
அதன் முயற்சி
என் பொருட்டு என்று
அறியாமல்
மீண்டும் மீண்டும்
மூடிக் கொள்கிறாய் நீ!

33. காற்றின் கரங்களை உதறி
அருவி நீர்
கொட்டுகிறது..
வழியில் தலை நீட்டிப் பார்க்கும்
பூக்களின் கூச்சல்
கொட்டும் நீரைத்
தடுக்க முடிவதில்லை..
உதறிப் போகும்
சில பூக்கள் மட்டும்
சொல்லும்..
நீரோடு சேர்ந்த
பயணத்தின் அழகை!

loading...

About The Author