விரல் தொட்ட வானம் (16) -என்ன செய்தாய்

என்ன செய்தாய்

எல்லோரிடமும்
யாசிப்பதாய்க் கேள்விப் பட்டேன்.
பாகுபாடு பார்ப்பதில்லை எனவும்.
உன் நலம் கருதி
பங்களிப்பு செய்தேன்
என்னிடம் இருந்ததையும்.
தேவை தீர்ந்தும்
திருவோடு ஏந்துகிறாய்.
தெரியாமல்தான் கேட்கிறேன்
ஊருக்கே
ஒளி தரும் வெளிச்சம்
உன்னிடம் இருந்ததே
என்ன செய்தாய்…?

*****

வாகனங்கள் மோத

புழுக்கத்தில் கிடக்கும்
சருகுகளின் வேதனை துடைக்க
காடுகளில் புகுந்தது காற்று.
கொட்டும் அருவியில் மோதிய போது
பாறைகளும் அந்தச் சாரலில்
நீராடிக் கொள்கின்றன.
பாறையிடுக்கில் கிடந்து வெடித்த விதைகள்
சாரல் குடித்துத் தயார் ஆகின்றன
துளிர்ப்பதற்கு.
பனியில் குளித்த தாவரங்களின்
தலை துவட்டிப் போகும்
வாழ வைக்கும் காற்று.
செத்துப் போகிறது
நகரங்களில் நுழைகிறபோது
வாகனங்கள் மோத.

–தொட்டுத் தொடரும்…

loading...

About The Author