எங்கே போகிறது?

எங்கே போகிறது எனது நாடு?

சமத்துவம் இல்லாத நான் பிறந்த இந்த நாட்டை
என்னவென்று அழைப்பேன்?

கணவனுக்கு உரிமை வேறு, மனைவியென்றால் அவளுக்கு வேறு!
பெண்ணுக்கும் ஆணுக்கும் வித்தியாசம்;
சகோதரனுக்கும் சகோதரிக்கும் வேற்றுமை பாராட்டும்
இந்த நாட்டை என்னவென்று அழைப்பேன்!
சொல்லுங்கள் உங்கள் மனசாட்சி தொட்டு
நீங்களும் அப்படித்தானா?
வெட்கப்படவேண்டிய இந்த மனிதர்களில்
நீங்களும் ஒருவரா?
பெண்கள், சமூகத்தில் தாழ்வானவர்கள் எனும் பார்வை
என் இருதயத்தில் வலியைத் தருகிறது.
நாம் எங்கே போகிறோம்?
இன்று நாம் விதைக்கும் வினைகள்
நாளை என்னவாகும்?
என் மண்டை பிளக்கிறது!
பெண்களின் உரிமையைப் பறித்து
இரும்புக்கரங்களால் நசுக்கி எறிகிறோம்!
அவர்களது
அழுகைக்கு நீதி கிடைக்கவில்லை.
நாம் நம் பெண்தெய்வங்களை அவமதித்து விட்டோம்!
அவர்களுக்கு நாம் கொடுத்த உறுதிமொழிகளை மறந்துவிட்டோம்!
நமது மனசாட்சிக்கு விடை கொடுத்துவிட்டு
ஆணாதிக்கச் சமூகம் படைத்துவிட்டோம்!
நான் என் பெண்ணுக்கு என்ன சொல்லப் போகிறேன்,
‘நாளைக்கு நீ பலிகொடுக்கப்படும் ஆடு’ என்றா?
நான் வாழும் இந்த நாட்டைப் பற்றி என்னவென்று சொல்வேன்?

மாறவேண்டும்! மாற்ற வேண்டும்!
புது உலகம் படைக்க வேண்டும்!
துயரங்கள் உன்னைத் துரத்தினாலும்
தளராது
திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இரு!
நான் வாழும் நாடு எங்கே போகிறது என்று.

(தில்லியில் ஒரு பெண் பலரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்ட துயரமான சம்பவம் பற்றிப் படத்தயாரிப்பாளர் ஃபர்ஹான் அக்தார் எழுதிய ஆதங்கக் கவிதையின் மொழிபெயர்ப்பு!)

About The Author