கருவறையில் நடக்க விரும்புகிறேன்…

துண்டு பிரசுரத்தில் கவிதை
படிக்க அலைந்த நாளொன்றில்
கவி புத்தகமொன்றில்
நட்பு கவிதை பகிர்ந்தது..!

எழுத்தில்…
எழுத்தால்..!

உன் குறிப்பு
புதுமையென்றும்..
உன் நட்பே
போதுமென்றும்..!

நான் தொலைக்க விரும்பவில்லை
கருவறையில் நடக்க விரும்பினேன்!

காணாமல் போனவர்கள் பட்டியலில்
நான் முதலிடத்தில்..!
பலரது நட்பில்… நட்பால்..!

கடைகோடியிலிருந்தும்
கார்மேகங்களுக்கிடையே
கண்டு கொண்ட
நட்பு இது..!

வித்து விதைத்து
ஆ(ள)ழ விரும்பியவளே
வேரறுத்து தரிசாகிப் போன
இந்நிலத்தில்..
கங்கை, காவிரி
நீர் தெளித்து
கடவுள் எடுத்தாய்
ஊர் காண…!

கண்டதில்லை கண்கள்
குலுக்கிக் கொண்டதில்லை
கைகள்.!
ஆனாலும்..
நட்பு பாராட்டுகின்றோம்
கவி நட்பில்
கவித்துவமான நட்பில்..!

காதலால் கவினாகவில்லை
கண்களால்…
விழிகளின் மொழிகளினால்…!

என் கவிதை இரசித்தவர்கள்
இதயம் படிக்க விரும்பவில்லை
உன்னைத் தவிர..!

விவரமறிந்து யாருமே விழித்திடாத
மாப்பிள்ளை…..!
வித்தியாசமாகத்தான் இருந்தது
ஆரம்பத்தில்..
மின்னஞ்சலின் ஆதியில்
இப்போது
அலங்கரிக்கவில்லையென்றால்
அடுத்தநாள் வரை
அடுக்கடுக்கான
ஆயுத எழுத்துகளின் கேள்விக் குறிகள்…!

அன்னை தவிர யாரும்
அமுது படைத்ததில்லை..
அன்பான உன் குடும்பத்துடன்
பௌர்ணமி நிலவில்
நிலாச்சோறு….!
மூன்றாம் பிடி
உருண்டை சோறு
என் கையில்…
ஒரு கடி அப்பளத்தோடு..!

அமைதியான
அந்திமாலையில்
என் வருகை பதிவுக்காக வாசலில்
காத்திருந்து பூத்த மலர்களுக்கிடையே
பகிர்ந்து கொண்ட
மொழிகள் இவையாவும்..!

இறுதியில் ஒன்றும்…

ஜென்மங்கள் நிஜமானால்..
உன் நட்பின் கருவறையில்
நான் நானாக நிலைத்திட வேண்டும்…

என்றும்…
என்றென்றும்…

About The Author