காலைக் காவியத்தில் புதுக் காண்டம் (2)

அறூபது ஆண்டுகள் – தமிழ்
அடையாளம் இல்லாப் பூண்டுகள்
அவை
வள்ளுவ நிலத்தில்
வேர்வைத்த வேதனையில்லாமல்
சித்திரை முகத்தில் – ’96
புன்னகை சித்திரமானது!

வராத
வைகாசியும் புத்தாண்டுக்கு
மாலை தொடுத்து
வாழ்த்து வழங்கும் வேளை இது…

உங்களுக்கென்ன
ஊழலும் இலஞ்சமும் இல்லாத
இயற்கை அரசாங்கத்தில்
இனிது வாழ்கிறீர்
சிறகுச் செல்வங்களே!

குரலைப் பிறமொழிக்குக்
குத்தகைக்கு விடாப் பறவைப்
பாடகர்களே,
இசைச் சங்க நிகழ்ச்சிகளை
இப்போதே தொடங்குங்கள்…

தலைமை தாங்க
ஊரையடித்து உலையில் போடும்
பிரமுகர் எவரும் வேண்டாம்
போதும் ஈரத் தென்றல்!

ஓ!
சித்திரை மடியிலிருந்து
முதல் தங்கக் காசு தரையில் விழுந்தது….
விரல்களை இழந்த தமிழர்கள்
வீதியில் புரள்கின்றனர்…

உங்களுக்கென்ன
மற்றப் பாக்கி மாதங்களே!
நீங்கள்
வந்து போங்கள் வழக்கம்போல!

About The Author