சாலைப் பாதுகாப்புக் குறள்

கண்ணிரண்டும் சாலை கவனமெல்லாம் ஊர்திகள்
எண்ணம்வேறு ஒன்றும்வேண் டாம்.

மதுவருந்தி வண்டியை ஓட்டினால் உந்தன்
கதியதோ என்றாய் விடும்.

நெடுந்தூரம் வண்டியை நீஓட்டி வந்தால்
இடையிலே ஓய்வாய் உறங்கு.

உறக்கமின்றி வண்டியை ஓட்டினால் காலன்
இரக்கமின்றி எட்டிப்பார்ப் பான்.

கண்ணைக் கவரும் விளம்பரக் காட்சியில்
எண்ணம் செலுத்தில் இடர்.

வேகமாய்ச் சென்றால் விவேகம் குறைவாமே
போகும் இடம்சேரப் போம்.

நால்வழிப் பாதையை நன்குணர்ந்து செல்லுங்கால்
கோல்கொண்டு அதட்டமாட் டார்.

சாலையில் பல்வேறு சிந்தனை இல்லாமல்
சேலையைப் பார்க்காமல் செல்.

தலைக்கவசம் அணிந்து தவறின்றிச் செல்வாய்
விலைமிக்க தாம் உன் உயிர்.

படிக்கட்டில் நின்று பயணம் செய் திட்டால்
அடிபட்டு வீழ்ந்திடு வாய்.

பேருந்துக் குள்சென்று பின்னால் வருவோர்க்கு
நீரும்தான் தாரும் இடம்.

ஒரேதடத்தில் பேருந்து ஒரே நேரம் சென்றால்
ஒரேவேகத் தில்முந்து மாம்.

முண்டி யடித்து முன்னேறினால் சட்டைப்பை
கண்டு பணம்பறிப் பர்.

நடத்துனர் சொற்படி நன்றாய்ப்பே ருந்தை
விடுத்தலே ஓட்டுனர்க் காறு.

கதவுகள் நற்பொருத்தம் காணா விடிலோ
அதுவே அளிக்கும் விபத்து.

சரக்கேற்றும் வண்டியில் நீஏற லாமோ
இறப்புற்றால் யாரே பொறுப்பு?

சாலையின் சந்திப்பில் நாற்புறமும் பார்த்தபின்
மேலே கடந்திடுதல் மேல்.

சாலையின் ஓரமாய் வண்டியை நிறுத்தினால்
மேலே விளக்கெரியச் செய்.

சாவியை வண்டியில் விட்டெங்கும் சென்றிட்டால்
ஆவதோ தொல்லையென் பார்.

அப்பாவி மக்களை அங்கிங்கு அலைக்கழித்தல்
ஒப்புமோ காவல் உடுப்பு?

சுண்டு விரல் நகம் போனாலே வந்திடுமோ
அண்டா நிறையப் பணம்?

காப்பீடு பெற்றவரைக் காத்திடுதல் ஒப்பந்தக்
காப்புறுதிச் சட்டக் கருத்து.

குறுக்கான கோடுகளின் மேலே நடந்தால்
பொறுப்பாகப் போய்ச்சேர லாம்.

மிதிவண்டிக் கென்றே விதித்துள்ள பாதை
மதித்ததன் உள்ளேயே ஓட்டு.

ஈருருளி ஓட்ட எடுத்த உரிமத்தால்
பேருந்தை ஓட்டவேண் டாம்.

காது பிளந்திடும் ஓசை எழுப்புதல்
தீதே தவிர்த்திடு வாய்.

முகப்பு விளக்குகள் மும்மடங்காய் வீசில்
திகைப்புறுவார் முன்வரு வார்.

பஞ்சுதான் என்றாலும் பாரமாய் ஏற்றிடில்
அஞ்சிடும் அச்சாணி தான்.

முன்செல்லும் வண்டியை முந்தும்போது எப்போதும்
தன்வலப் பக்கமே செல்.

செல்பேசி வண்டியை ஓட்டுங்கால் பேசிடில்
தொல்லைதான் வேண்டா மது.

காவலர் சைகை கருத்துடன் பற்றியே
போவது நின்றன் பொறுப்பு.

மின் கலக் கோளாறை மெத்தன மாக்கினால்
மின்னலாய்த் தீமேல் எழும்.

வண்டியின் பாகத்தை வக்கணையாய்ப் பார்த்திட்டால்
திண்டாட வேண்டாமே நின்று.

சட்டம் நமக்காக சார்ந்தொழுக வேண்டும் நாம்
கட்டுப்பாட் டைக்கருத்தில் கொள்.

("சாலை விபத்துகளும் சட்ட விளக்கங்களும்" என்னும் என் நூலிலிருந்து – 2003)

About The Author

2 Comments

  1. ilavarasan

    ரொம்ப நல்லா இருக்கு….. இப்பொழுதைய அவசர காலகட்டத்திற்கு தேவையான கருத்து……:-)

Comments are closed.