செருப்பில் சேர்ந்த மலர்கள்

சில நேரங்களில்
வரிசைகள்
வெறுப்புத் தீயில்
வேக வைக்கின்றன

தொட்டில் கயிற்றில்
தூங்கிய குழந்தையின்
வழிந்த பாலை
துடைத்து விட்டு
தொட்டுத்தூக்க
மனமின்றி விட்டுவிட்டுக்
காத்திருக்கும்
தாய்மார்கள்
தான் நின்ற
வரிசைகள்
தேங்கிவிடும் போது
தவிப்புகளில்
கால்கள்
தண்டவாளம் தாண்டிய
ரயில்கள் போல புரள்கின்றன

அதிகாலையிலே
இடம் பிடித்தும் கூட
சரியான சில்லறை இல்லாமல்
பின் வரிசைக்கு
சிபாரிசு செய்யப்படும்
போது
சிலரின் இதயத்துடிப்பு
தட்டச்சு போல
மேல் அதிகாரிக்கு
சொல்ல வேண்டிய பதிலை
அச்சடிக்கத் தொடங்குகிறது

ஓய்வூதிய
அப்பாக்களும்
மாமனார்களும்
நிற்கமுடியாமல்
காத்திருக்க
ஈரக்காயத்தில்
ஈட்டி பாய்ச்சும் வார்த்தைகளால்
உதாசீனப்படும் தருணம்
சில இதயங்கள்
உலக வாழ்வையே
வெறுக்கத் துணிகின்றன

நீண்டு கொண்டே
போகும் எந்த
வரிசைகளிலும்
நாம் நினைத்துப் பார்ப்பதில்லை
செருப்புகளில்
அரைபடும்
மனிதநேய மலர்களை

About The Author

2 Comments

  1. bharani

    மனதை தைக்கும் வரிகள்; நச்சென்ற வார்த்தைகள் – அருமையான கவிதை!!

Comments are closed.