புண்ணியா உன்னை என் சொல்லி வாழ்த்துவனே!

ஓங்கு புகழ் ஓங்கலிடை தோன்றி
உயர்ந்தோர் நாளும் தொழும் நல்லோன்;
ஏங்கு ஒலி நீர் ஞாலத்து இருளகற்றும் ஞாயிறு
நாடு மொழி பால் காலம் நல்மதம்
அகவை அந்தஸ்து தொழில் கடந்து
சமத்துவம் காட்டும் சதுரன்; ஜயன்:
உயிரணு தோற்றுவிக்கும் உத்தமன்
வயிறு நிறை உணவின் ஊற்றுக்கோல்
பகலவன் பாஸ்கரன் பானு ரஸ்மி
திவாகரன் மார்த்தாண்டன் சுந்தரன்
எனப் பல்லோரும் புகழ் சூரியன்
ஒளி அவன் வாழ்வின் நெறி அவன்
உலகின் விழி அவன் வழி அவன்
இராவணனை அழிக்க இராமன் துதித்த
இரா விரட்டும் ஆதித்தன்;திரௌபதிக்கு
உணவளித்த அட்சய பாத்திரத்தின் ஆதாரம்;
குணமுயர்த்தும் மாமனம் கொண்டு ஒதும்
தவத்தோர் அறவோர் போற்றும் தேவன்
அவம் விரட்டும் அதிசயத் தலைவன்
அவன் புகழ் பாடி வணங்கி உயர்ந்திட
பொங்கல் நாளன்றி வேறெந்த நாள் உகந்த நாள்!
பொங்கும் மங்களம் எங்கும் தங்க வைக்கும்
புண்ணியனை என் சொல்லி வாழ்த்துவனே!

About The Author