யாரோ இல்லை எவரும் -வறுமையின் நிராகரிப்பில்…

வறுமையின் நிராகரிப்பில்…

குப்பைத் தொட்டிகளும்
சுத்தமாயின
குறையேதுமின்றி
போட்டிகளுடன்
அங்கே
நெருக்கமாய் வந்து
சொந்தமானது
சோகம் மட்டுமே

நாவறண்ட வல்லூறுகள்
நகைத்தன நன்றாய்
நம் விருந்தை
பகிர்ந்துண்ண
நமக்கு மட்டுமே
தெரியும்…

எம்
கல்லூரிக் காலங்களில்
போஸ்ட்மேன்
மட்டுமே
வி.ஐ.பி.

பிள்ளையார் சுழியில்
ஆரம்பித்து…
நலம், நலமறிய
அவாவெனக் கூறி
அன்புடன் முடித்து..

அம்மா, அப்பாவைக்
கூட்டிவரும்
கடிதங்களில்
காகிதம் என்பது
காணாமற்போகும்

படிப்பதும்
மடிப்பதும்
மடிப்பதும்
படிப்பதுமாக
பரிசாய்
பத்திரமாகும்!

இன்று பிள்ளைகள்
கல்லூரிகளில்
செல்போனில் மட்டும்
செய்தியாய்
ஹாய்… !

பிரச்சனைகளற்று
தெளியும் தெளிவில்
நடந்து போனவை
மீண்டும் நடப்பதற்காய்
நடைபயிலும் போது
என்னிலிருந்து என்னை
எங்கே எடுத்து வைப்பது.

உயர்ந்த சிகரங்களின்
உயரத்திற்கும் மேலானதாய்
கனன்று எரியும் நெருப்பின்
வெம்மைக்கும் வெம்மையாய்
தாங்கமுடியா
மூடுபனியின்
குளிருக்கும் குளிராய்
குண எல்லைகளையும்
கடந்த சூட்சும சொப்பனம்
மனம் மட்டுமே.

கூட்டல் பெருக்கல்
வகுத்தல் கழித்தல்
போட்ட கணக்குகள் தான்
வாழ்க்கைப் பாடத்திற்கு
இவையெல்லாம்
மாதிரி கணக்குகளாய்…

******

(‘யாரோ இல்லை எவரும்‘ – மின்னூலில் இருந்து.)

To buy the EBook, Please click here

About The Author