ஊட்டச்சத்து ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு – ¼ கிலோ,
வேர்க்கடலை – ¼ கிலோ,
ஏலப்பொடி – விருப்பத்திற்கேற்ப,
பால் – 3 டம்ளர்,
பொடித்த சர்க்கரை – 1 டம்ளர்.

செய்முறை:

கேழ்வரகைச் சுத்தம் செய்து ஒரு நாள் முழுவதும் ஊற வையுங்கள். மறுநாள் அதை நீர் விட்டு மின் அம்மியில் (மிக்சி) மையாக அரைத்துக் கொண்டு, சுத்தமான துணியில் வடிகட்டிக் கெட்டியான பாலாக 3 தம்ளர் அளவுக்கு வருமாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர், வேர்க்கடலையை நன்றாக நீரில் ஊற வைத்துக் கொண்டு மின் அம்மியில் விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, கேழ்வரகுப் பாலை அடுப்பில், மட்டான தழலில் வைத்துக் கெட்டியாக இறுகும் வரை கிளற வேண்டும். பாலையும் மட்டான தழலில் வைத்துச் சுண்டக் காய்ச்ச வேண்டும். ராகிக்கூழ், பால் இரண்டும் குளிர்ந்த பின்னால் அவற்றுடன் அரைத்த வேர்க்கடலை விழுதையும், ஏலப்பொடி, பொடித்த சர்க்கரை ஆகியவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகக் கலந்து மின் அம்மியில் சில நிமிடங்கள் அடியுங்கள். தேவையானால் கலர், எசென்ஸ் ஆகியவை சேர்க்கலாம். பின்னர், உறையத்தில் (freezer) தேவையான அளவுக்குக் குளிர்நிலையை உயர்வாக வைத்து இரண்டு முதல் இரண்டரை மணி நேரம் இந்தக் கலவையை வைத்தெடுத்தால் வித்தியாசமான சுவையும், சத்தும் நிறைந்த இந்த ஊட்டச்சத்து ஐஸ்கிரீமைச் சுவைக்கலாம்!

சுவைத்துப் பாருங்கள்! கோடைகாலத்தைக் கொண்டாடுங்கள்! மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author