காராமணி பருப்புக் குழம்பு

தேவையானவை:

காராமணி – 1 கோப்பை
கடலைப்பருப்பு – 1 கோப்பை
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
உருளைக்கிழங்கு – 2
காய்ந்த மிளகாய் – 5
மிளகாய்த் தூள் – அரை மேசைக்கரண்டி
சீரகத்தூள் – அரை மேசைக்கரண்டி
தனியாத் தூள் – அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலைப் பொடி – அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
சர்க்கரை – அரை தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை – சிறிதளவு

பொடிக்க:

கிராம்பு – 1
ஏலக்காய் – 1
பட்டை – 2

செய்முறை:

முதலில் காராமணி, கடலைப்பருப்பு இரண்டையும் கழுவி, தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மிளகாய்களை அதில் கிள்ளிப் போட்டு, அவை சிவந்ததும் கடுகைப் போடுங்கள். கடுகு பொரிந்ததும், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு உருளைக்கிழங்குத் துண்டுகளையும் சேர்க்க வேண்டும்.

பின்னர் மிளகாய்த் தூள், தனியாத் தூள், மல்லித்தழை, சீரகத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும்.

பிறகு, அதில் மூன்று கோப்பைத் தண்ணீர் ஊற்றி, ஊற வைத்துள்ள காராமணி, கடலைப்பருப்பு இரண்டையும் சேர்க்க வேண்டும்.

பின்பு, குக்கரை மூடி வேக விடுங்கள்.

நன்றாக வெந்தவுடன் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்புத் தூள், உப்பு சேர்த்து மிகவும் சிறிய தீயில் வையுங்கள்.

குழம்பு கெட்டியாகும் வரை கிளறி, பிறகு கொத்துமல்லித் தழை தூவி இறக்கிவிடலாம்.

சுவையான காராமணிப் பருப்புக் குழம்பு தயார்! சாதத்துடன் இந்தப் பருப்பையும் சேர்த்துச் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author