கோடைக்கேற்ற குளிர் பானங்கள் (2)

1. சப்ஜா விதை நீர்

ஃபலூடாவில் சேர்க்கும் சப்ஜா விதை குளிர்ச்சியைக் கொடுக்கும் என்பது பலரும் அறிந்ததே. சப்ஜா விதையை இரவே கழுவி குடிக்கும் நீரில் ஊறவைத்து, மறுநாள் நீருடன் பருகலாம். விரும்பினால் சிறிது உப்போ அல்லது பாலும், சர்க்கரையும் சேர்த்தோ பருகலாம். ரோஸ் சிரப்பும் சேர்க்கலாம்.

2. கறுப்பு திராட்சை ஜூஸ்

கறுப்பு திராட்சையை நன்றாகக் கழுவி, சுவைக்கு சர்க்கரை சேர்த்து, மிக்சியில் அரைத்து வடிகட்டிப் பருகினால் வெயிலுக்கு இதமாக இருக்கும்.

3. மாம்பழ மில்க் ஷேக்

மாம்பழ சீசனில் உங்களுக்குப் பிடித்த மாம்பழம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன் தோலை சீவி துண்டுகளாக்கி தேவைக்கேற்ப பாலும், சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளவும். பின் மிக்சியில் அரைத்து, தேவைப்படும்பொழுது மேலும் பாலோ நீரோ சேர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பருகினால் சுவைக்கு சுவை, தாகத்தைத் தணிக்கும் சத்தான பானமாகவும் அமையும்.

4. உடனடி ஐஸ்கிரீம்

பாலுடன் சர்க்கரை, ப்ரெட் சேர்த்து மிக்சியில் அடித்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்க உடனடி ஐஸ்கிரீம் (Instant Icecream) தயார்.

5. எலுமிச்சம்பழ ஜூஸ்

எலுமிச்சம்பழத்தின் ரசத்தைப் பிழிந்து ஒரு பங்கு ரசத்திற்கு இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து, ஃப்ரீசரில் வைத்து தேவையானபொழுது நீர் சேர்த்துப் பருக தாகம் தணியும்.

6. நீர் மோர்

தயிரைக் கடைந்து நீர் விட்டுக் கலந்து மோராக்கிக் கொள்ளவும். வறுக்காத சீரகப் பவுடர் கலந்து பருகலாம். சிறு துண்டு இஞ்சி, பச்சை மிளகாய் விழுதைக் கரைத்துக் கொண்டு கடுகைத் தாளித்துக் கொட்டி மோரில் கலக்கவும். கொத்துமல்லி, கறிவேப்பிலையைக் கழுவி பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்துப் பருக அருமையாக இருக்கும். சிறு துண்டு மாங்காயைத் துருவிப் போட்டோ அல்லது எலுமிச்சை ரசம் சேர்த்தோ பருகலாம்.

About The Author