சுவையான அதிரசமும் மொறுமொறு தட்டையும்

அதிரசம்


தேவையான பொருட்கள்

அரிசி மாவு- 1 கப்
வெல்லம் – 1 கப்
ஏலப்பொடி – 1டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்

அரிசி மாவு செய்யும் முறை

முக்கால் கப் அரிசியைத் தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.பிறகு ஒரு மெல்லிய வெண்னிறத்துணியில் பரப்பி நிழல்பட காய வைக்கவும்.ஈரம் காய்ந்த பிறகு மெஷினில் அரைக்கவும்.அல்லது வீட்டில் மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். மாவு நைஸாக இருக்க வேண்டும்.

பாகு செய்யும் முறை

தூளாக்கிய வெல்லத்தை அடி கனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.பாகு தக்காளி பதமாக வரும் போது ஏலப்பொடியைப் போட்டு அடுப்பை அணைத்து விடவும். (ஒரு பாத்திரத்தில் கொஞ்சமான தண்ணீரில் பாகை எடுத்து ஊற்றி கையால் உருட்டினால் உருட்ட வருவதோடு தக்காளி பழம் போல் கைக்கு மென்மையாக இருப்பதே தக்காளி பதம்)

அதிரசம் செய்முறை

மாவை ஒரு தாம்பாளத்தில் கொட்டிக் கொள்ளவும்.அதன் மீது வெல்லப்பாகை ஊற்றி ஒரு கரண்டியால் நன்கு கலக்கவும்.பிறகு இரண்டு டீஸ்பூன் எண்ணெயை விட்டு கையால் நன்றாக இழுத்து பிசையவும். பொதுவாக அதிரசம் செய்வதற்கு ஒரு நாளைக்கு முன்னரே மாவை தயார் செய்தால் அதிரசம் மிருதுவாக வரும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து, எண்ணெய் நன்றாக காய்ந்த பின் தீயின் அளவை குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதிரச மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி,எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பர் அல்லது இலையில் தட்டி எண்ணெயில் போடவும்.ஒரு முறைக்கு ஒரு அதிரசம் மட்டுமே போட வேண்டும். நன்றாக வெந்து, சிவந்த நிறமானதும் என்ணெயை முழுமையாக வடித்து அதிரசத்தை எடுத்து, ஆறிய பின்பு பாத்திரத்தில் வைக்கவும்.

தட்டை

தேவையான பொருட்கள்

அரிசி மாவு-(தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊற வைத்து துணியில் நிழல்பட காய வைத்து அரைத்த மாவு) அரை கிலோ
கடலைப்பருப்பு-இரண்டு டீஸ்பூன்
தேங்காய் துருவல்- இரண்டு டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு-மூன்று டீஸ்பூன்
மிளள்காய்த் தூள் -இரண்டு டீஸ்பூன்
எள்- இரண்டு டீஸ்பூன்
பெருங்காயத்தூள்-இரண்டு டீஸ்பூன்
நெய் -மூன்று டீஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை

தட்டை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னதாக கடலைப் பருப்பைத் தண்ணீரில் ஊறப் போடவும். அது குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும்.

அரிசி மாவை வெறும் வாணலியில் நன்றாக வறுக்கவும். அது ஆறிய பிறகு, அதில் ஊறிய கடலைப்பருப்பு,பொட்டுக்கடலை மாவு,தண்ணீரில் களைந்து சுத்தம் செய்த எள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், உப்பு ஆகியவற்றை நெய் ஊற்றிச் சேர்ந்து பிசையவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கைகளில் ஒட்டாதவாறு மாவை நன்றாக பிசையவும். இப்போது மாவு தயார்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து. எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் பேப்பரிலோ அல்லது வாழை இலையிலோ சின்ன சின்ன வட்டங்களாகத் தட்டவும். தட்டும் போது ரொம்ப மெல்லியதாகவோ தடிமனாகவோ ஆகாமல் சம அளவாகத் தட்ட வேண்டும். எண்ணெயில் எத்தனை போடப் போகிறோமோ அந்த எண்ணினிக்கை மட்டுமே தட்ட வேண்டும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் எறிய விடவும். தட்டி வைத்திருக்கும் தட்டைகளைக் கவனமாக ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் போடவும். ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி போடவும்.இரண்டு பக்கங்களும் வெந்து பொன்னிறமானவுடன் எடுக்கவும். நன்றாக ஆறிய பின் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

About The Author

2 Comments

  1. daisy

    ரொம்ப நன்றி. அதிரசம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது

Comments are closed.