தக்காளி சாதம்

தேவையான பொருட்கள்: அரிசி -1 கப், தக்காளிப்பழங்கள் -1/2 கிலோ, முந்திரித்துண்டுகள் – ஒரு மேசைக்கரண்டி, சிகப்பு மிளகாய் – 4, பொடியாக வெட்டிய சின்ன வெங்காயத் துண்டுகள் – ஒரு கப், நெய் – ஒரு மேசைக்கரண்டி, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி, கடுகு – ஒரு தேக்கரண்டி , உப்பு -சுவைக்கு.

செய்முறை: அரிசியை நீரில் ஊறவைத்து கழுவி வைத்துக் கொள்ளவும். தக்காளிப்பழங்களைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சிகப்பு மிளகாயை துண்டுகளாக்கிக் கொள்ளவும். குக்கர் பாத்திரத்தை சூடாக்கி எண்ணெயும் , நெய்யும் ஊற்றி கடுகை வெடிக்கவிட்டு மிளகாய்த்துண்டுகள் முந்திரித்துண்டுகளை சேர்த்து வறுத்த பிறகு நறுக்கிய வெங்காயத்துண்டுகளை சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளித் துண்டுகளை சேர்த்து வதக்கவும். ஊறவைத்து கழுவிய அரிசியையும் சேர்த்து சற்று வறுத்த பிறகு, சாதத்திற்கு வைக்கும் தண்ணீரை விட அரை கப் அளவு குறைவாக வைக்கவும். உப்புச் சேர்த்து நன்றாகக் கிளறி குக்கரில் மூடி வைத்து இரண்டு அல்லது மூன்று விசில் வரை வேக வைத்து வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.

வெங்காயப் பச்சடி தயாரிக்கும் முறை: ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து மேல் தோலை உரித்து விட்டு மெல்லியதாக நறுக்கிக் கொண்டு, ஒரு பச்சை மிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கிச் சேர்த்து உப்பும், தயிரும் சேர்த்துக் கடுகைத் தாளித்து பரிமாறவும்.”

About The Author