தமிழரைப் பிரிக்கிறதா இணையம்?

உலகின் செம்மொழிகளில் எல்லாம் சிறந்ததும் தலையாயதும் ஆன மொழி எது என்று கேட்டால் தமிழ் என்று தயங்காமல் பதில் சொல்லலாம்!

இப்படிச் சொல்வதற்குத் தமிழன் என்ற ஒரு தகுதி மட்டும் போதாது! பலமொழி அறிவும், ஒலி நுட்பங்களில் தேர்ச்சியும், இலக்கணங்களில் திட்பமும் என்றும் இளமை, இனிமை, புதுமை, பொருண்மை என்ற குணங்களைக் கொண்டுள்ளதா என்று ஆராயும் அறிவு நுட்பமும் ஆய்வுக்கே உரிய ஒரு நிலை சார்பில்லாத நடுவு நிலை மனப்பான்மையும் வேண்டும். இப்படிப்பட்ட அரிய தகுதிகள் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளுக்குப் பின்னர் தமிழ் நாட்டில் குறைந்து விட்டது அல்லது அறவே இல்லை எனலாம்.

தமிழ் மொழி அரசியல்வாதிகளின் கொடூரப் பிடியில் சிக்கிக் கொள்ளவே தமிழ் அறிஞர்களும் அந்தக் கோரப்பிடிக்கு இரையாகி விட்டனர்!

ஆகவே சம்ஸ்கிருதம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகள் மீது காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு பன்மொழி அறிவும் நுண்மான் நுழைபுலமும் தமிழ் நாட்டிலும் தமிழ் அறிஞர்களிடையேயும் அருகிப் போனது. குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல ‘எம்மொழி செம்மொழி’ என்று அரசியல்வாதிகள் ஓட்டுக்காக கூப்பாடு போட அதை விடப் பெரிய தகுதியை அடைய வேண்டிய அரிய மொழி அதை அடையாமல் இருக்கிறது! ஆனால் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் தமிழனின் அன்றலர்ந்த மூளை தான்; கவலை அளிக்கும் அம்சமும் அதுவே தான்! ஒற்றுமை என்பது சற்றும் இல்லாத அந்த மூளை நம்மை திடுக்குறச் செய்கிறது; கவலையுறச் செய்கிறது!! என்றும் புதுமை என்ற உருவத்தோடு இணையிலாத் தமிழ் -இணையதளத்தில் -ஏராளமான சாதனைகளைப் புரிந்து விட்டது; புரிந்து வருகிறது.

தமிழிலேயே இன்று இமெயில் அனுப்பலாம். கீபோர்டில் தமிழ் எழுத்துக்களை அடித்து வெவ்வேறு எழுத்துருக்களில் (Fonts) ‘விளையாடலாம்’!

தொல்காப்பியம், திருக்குறள் முதலாக தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தம் திருப்புகழ், திரை இசைப் பாடல்கள் முடிய ஆன்லைனில் படித்து மகிழலாம். அதை நமக்கென படி இறக்கி (downloading) அச்சடித்து (printing) வைத்துக் கொள்ளலாம்!
எண்ணற்ற சிந்தனைச் சிதறல்கள் இப்போது இன்டர்நெட்டில் தமிழில் படித்து மகிழ உள்ளன! சிற்றிதழ்களாகவும் ப்ளாக்குகளாகவும் அன்றாடம் ஆயிரமாயிரம் மலர்கின்றன.

ஏராளமான தமிழ்ப் பத்திரிகைகள் வாரந்தோறும், மாதந்தோறும் தமிழில் வெளிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை காழ்ப்புணர்ச்சி இன்றி நடு நிலைமையோடு இருப்பது ஆரோக்கியமான சுவையான செய்தி! ஆறாம் திணை, அம்பலம், நிலாச்சாரல் என ஆரம்பித்து சொல்லிக்கொண்டே போகலாம்.

இணையதளத் தமிழ் எனப்படும் இன்டர்நெட் தமிழில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் அளவற்ற ஆர்வம் காட்டுகின்றனர். இதன் விளைவாக நாளுக்கொரு புதுமையும் வேளைக்கொரு எழுச்சியும் இன்டர்நெட்டில் காணமுடிகிறது! இணைய தள மாநாடுகள் வருடந்தோறும் நடைபெறுகின்றன. இதில் இடம் பெறும் ஆய்வுக்கட்டுரைகள் மலைப்பையும் திகைப்பையும் பிரமிப்பையும் தருகின்றன.ஆஹா, தமிழன் மூளை இவ்வளவு சிறந்ததா, பெரியதா!!

தமிழை மலையாளமாகவும் மலையாளத்தைத் தமிழாகவும் இயந்திரம் மூலமாக மொழி பெயர்ப்பது, அரிதாகக் காப்பாற்றப்பட்டு இன்று கரையானுக்கெனவே காத்திருக்கும் லட்சக்கணக்கான பனை ஓலைச் சுவடிகளை – அரிய தமிழ் நூல்களை- டிஜிலடைஸ் செய்து என்றும் உள்ளதாக்கி எதிர்கால சந்ததியினருக்கு அர்ப்பணிப்பது, விரும்பும் திரை இசை தமிழ் இசை பிறமொழிப் பாடல்களை கணிணியில் இறக்கிக்கொள்வது, ஒருவரோடொருவர் தமிழிலேயே செய்தி மற்றும் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொள்வது, இதற்கென இ மெயிலை அதிகமதிகம் பயன்படுத்துவது, போட்டோக்களையும் தமிழ் தலைப்புகளுடன் அனுப்புவது, ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டு தலைப்பொறுப்பாகத் தமிழை வளர்ப்பது என இவையனைத்தும் இன்னும் பலவும் இன்று இன்டர்நெட் தமிழ் வாயிலாக சாத்தியமே!

தமிழ் நாளிதழ்களை அன்றாட காலை பானம் அருந்து முன்னரே கணினித்திரையில் படித்து மகிழ்வது எத்தனை சுகமான அனுபவம்!

ஆனால் இவ்வளவு இருந்தும் நம் முன்னேற்றம் குறிப்பிடத்தகுந்த அளவு இல்லை; ஆகவே குறிப்பிடத் தகுந்த படி உலகளாவிய விதத்தில் பேசப்படவும் இல்லை! இதற்கான முழு முதல் காரணம் தமிழனின் நண்டு மனப்பான்மைதானோ?! கூடையில் முன்னேறி ஒரு நண்டு மேலே ஏறும் போது அதன் காலை அடுத்த நண்டு வாரி விடுவது போல முன்னேறும் தமிழனை ஊக்கி விடாது அவனது காலை வாரி போட்டியாக இன்னொரு தமிழனே எழுவது ஏனோ, தெரியவில்லை.

எழுத்துருவை மட்டும் எடுத்துக் கொள்வோம். தமிழனுக்கு ஒரு எழுத்துரு என்ற நிலை ஏற்படுமோ என்ற அளவுக்கு எழுத்துருமயம்! பாமினி, கம்பன், இளங்கோ, பாரதி, டிஸ்கி, யுனிகோட்… இன்னும் இன்னபிற பெயர்கள். இனி இல்லாத பெயர் இன்டர்நெட்டில் இல்லை! இதனால் ஏற்படும் தொல்லை பெரிய தொல்லை! ஒருவர் அனுப்பும் எழுத்துருவை இன்னொருவர் படிக்க முடியாது. இதற்கென எழுத்துரு மாற்றிகள் இன்று உருவாக்கப்பட்ட போதும் திரையில் நீங்கள் படிக்க வேண்டிய எழுத்துக்களுக்குப் பதிலாக சதுரம் சதுரமாகப் பார்க்கும் போது மனம் வெறுத்து விடும்.

தமிழில் உள்ள வெண்பா போல உலகில் வேறெந்த மொழியிலும் ஒரு பாவினம் இல்லை (சம்ஸ்கிருதம், ஹிந்தி உட்பட)! தமிழில் உள்ள ‘ழ’ போல வேறு எந்த மொழியிலும் ஒலி இல்லை (லத்தீன், கிரேக்கம் உட்பட)! சிறந்த சொற்களை குறைந்த எழுத்துக்களால் கொண்ட முதன்மை மொழியான தமிழின் பெருமை எல்லையற்றது; அகன்றது; விரிந்தது; ஆழம் காண முடியாதது!

அருட்பிரகாச ராமலிங்க சுவாமிகள் (வள்ளலார்) கூறிய தமிழ் பெருமை உள்ளிட்ட ஏராளாமானோரின் கூற்றுக்களைப் படிப்பதன் மூலம் தமிழின் பெருமையில் ஒரு சிறிதையும் அதன் தெய்வீகத்தன்மையையும் உணரலாம்.

இன்டர்நெட்டில் தமிழ் புதுப் பொலிவுடன் திகழ்ந்து உலக மொழியாக ஏற்றம் பெற அரைகுறைப் பாமரனுக்கும் புரிந்த வழிகள் சில உண்டு. அந்த அங்கலாய்ப்பை புரிந்து கொண்டால் போதும்.

முதலில் அரசியல்வாதிகளின் கையிலிருந்து தமிழ் விடுபட வேண்டும். தமிழறிஞர்கள் கட்சிச் சார்பு கொண்டவர்களாக இல்லாமல் மொழிச் சார்பு கொண்டவர்களாக மாற வேண்டும்.அனைத்து மொழிகளையும் சம்ஸ்கிருதம் ஹிந்தி உள்ளிட்ட எல்லா மொழிகளையும் கற்றுத் தமிழுடன் ஒப்பிட்டு தமிழின் பெருமையை இன்டர்நெட் வாயிலாக உலக அரங்கில் ஒலிக்கச் செய்ய வேண்டும்.

இன்டர்நெட் தமிழ் பொறியாளர்களும் தமிழ் அறிஞர்களும் இணைந்து ஒற்றுமையாக கூடி அமர்ந்து விவாதித்து எழுத்துருஉள்ளிட்ட பொதுக் கொள்கைகளை உருவாக்க வேண்டும். ஒரு மாநாடு முடிந்தவுடன் எதிர் மாநாடு நடப்பது அழகல்ல! ஆங்கிலம், சீன மொழி போல மிக அதிகம் பேரால் பயன்படுத்தப் படும் செம்மொழி தமிழ். தனக்கென ஒரு தனிப்பட்ட பழம் பெருமை வாய்ந்த இறைமையைக் கொண்டது அது.

அரைகுறைப் பாமரனின் அங்கலாய்ப்புக்கு அறிஞர்கள் சற்று சிரமம் பாராமல் காது கொடுத்துக் கேட்டால் இன்டர்நெட் தமிழ் இணையிலாத் தமிழாக மாறி விடும்!

****

நன்றி : கோகுலம் கதிர் ஜனவரி 2008 இதழ்

loading...

About The Author

2 Comments

  1. கிரிஜா மணாளன்

    தங்கள் கட்டுரையிலுள்ள விளக்கங்களும், கருத்துக்களும் தமிழின்பால் பற்றுள்ள அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை. தமிழ் மொழியை முன்னிறுத்தி, தங்களுக்குப் புகழைத் தேடிக்கொள்ளும் சில அரசியல்வாதிகள் உங்கள் கட்டுரையை அவசியம் படிக்கவேண்டும். நன்றி! —கிரிஜா மணாளன், திருச்சி. தமிழ்நாடு.

  2. T.Bhupathy Raaj

    தங்கள் கட்டுரை மிகவும் அறிவு சார்ந்தது. தெளிவாக ரத்தினச்சுருக்கமாக உள்ளது. T. பூபதி ராஜ், திருச்சி, தமிழ்நாடு

Comments are closed.