தமிழ் என்னும் விந்தை-சதுரங்க பந்தம் – 5

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் பாடிய இன்னொரு சதுரங்க பந்தப் பாடல் இதோ:

திங்க ளதனை யடர்முக மாது சினேகியணி
கொங்கியல் போதினை நேர்தன மீதிற் குரோதமென்னோ
தங்கி வளரு மணைமேற் கவின்மின்னைச் சாரினிமா
மங்கை திகழும் புயராம சாமி வரோதயனே

இது கலித்துறைப் பாடல் ஆகும். முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியிலும் மூன்றாம் அடியிலும் 21 எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களுமாக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்.

சென்ற அத்தியாயத்தில் கொடுத்த துருவக் குறிப்பு மீண்டும் கீழே:

{ 1-64 – 2+62 – 3+50 – 4+44 – 5+36 – 6+26 — 7+22 –
15+78 – 17+77 – 29+76 – 35+75 – 43+74 – 53×73 – 57+72}

ஆக, இதன்படி அமைத்தால் பின்வருமாறு இந்தப் பாடலை சதுரங்க பந்தமாக்கலாம்.

பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் தி

இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ங்

மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் க

நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் ள

ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் த

ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் னை

ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் ய

பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் னே

பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் ய

இருபத்தி ஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் த

முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் ரோ

நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் வ

ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் மி

ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் சா

துருவக் குறிப்பின் அடிப்படையில் சதுரங்க பந்தப் பாடலாக மிகச் சரியாக அமைகிறது. இதன் அமைப்பு முறையைக் கண்டு வியக்கிறோம்; பாடலை ரசிக்கிறோம்!

இன்னொரு கவிதை அமைப்பு நயத்தையும் மாம்பழக் கவிச்சிங்க நாவலரின் இரு சதுரங்க பந்தப் பாடல்களில் பார்க்க முடிகிறது. குறிப்பிட்ட கட்டங்களில், குறிப்பிட்ட எழுத்துக்களே மீண்டும் இரு பாடல்களிலும் வருகின்றன. இது சதுரங்க பந்தக் கவிதை அமைப்பு ரகசியமோ?!

நம் முன்னோர்களின் கணிதத் திறனும், பாடல் இயற்றும் திறனும், இலக்கணத் திறனும் நம்மை வியப்படைய வைக்கின்றன அல்லவா!

எல்லாவற்றிற்கும் மேலாகத் ‘தமிழ் என்னும் விந்தை’யை எண்ணி எண்ணி வியக்கிறோம்; மகிழ்கிறோம்!

அடுத்த வாரம் பாம்பன் சுவாமிகளின் ‘மந்திர சதுரங்க பந்தக்’ கவிதை ஒன்றைப் பார்ப்போம்.

–விந்தைகள் தொடரும்…

loading...

About The Author