பார்கவி பக்கங்கள் (12)

வேனன் முடிந்த கதை

பாஞ்சாலி சபதத்தில் ஒரு காட்சி. தருமன் பாஞ்சாலியைச் சூதில் தோற்று விட்டான். "நாம் சூதில் எடுத்த விலைமகளைச் சபைக்கு அழைத்து வா" என்று நாக்கூசாமல் சிற்றப்பா விதுரனிடம் கூறுகிறான் துரியோதனன். மெய்ந்நெறி உணர் விதுரன் அல்லவா? இது பொறுக்கவில்லை அவனுக்கு. கடைசி நிமிஷத்திலாவது துரியோதனன் புத்தியை மாற்றி நன்னெறிக்குத் திருப்ப முடியுமா என்று முயல்கிறான். அவன் சொல்கிறான்:-

"நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாம் சொல்லுகிறேன். என்னுடைய சொல் பின் எவர் பொருட்டும் இல்லையடா!" என்கிறான்.

தொடர்ந்து,

"மாண்டு தரை மேல் மகனே கிடப்பாய் நீ!
தன்னழிவு நாடும் தறுகண்மை என்னேடா?
முன்னமொரு வேனன் முடிந்தகதை கேட்டிலையோ?
நல்லோர் தமதுள்ளம் நையச் செயல் செய்தான்.
பொல்லாத வேனன் புழுவைப்போல் மாய்ந்திட்டான்."

யார் இந்த வேனன்? பல பேருக்குத் தெரிந்திருக்காது. ஸ்ரீமத் பாகவதத்தில் வருகிறது இந்த வேனன் கதை. என்னவென்று தெரிந்து வைத்துக் கொள்ளலாமே?

துருவன் கதை தெரிந்திருக்கும். இந்த துருவனின் வழி வந்த அரசன் அங்கராஜன். அறநெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு மகனாய் வந்து வாய்த்தவனே வேனன். குணங்களில் துருவனுக்கும் அங்கராஜனுக்கும் எதிரிடை. ஹிரண்யகசிபுவே மேல் என்று பண்ணிவிட்டவன். துஷ்டர்களின் சகவாசமும் அதர்மமான செயல்களைப் புரிபவனுமாக இருந்தான். ஜீவஹிம்சை செய்தான். குழந்தைகளின் கழுத்தைத் திருகிக் கொன்றான். அவன் செயல்களைக் கண்டு மக்கள் நடுங்கி ஓடினார்கள். அவனை அடக்க யாராலும் முடியவில்லை. அறச் செல்வனான தந்தை அவனைத் திருத்த எவ்வளவோ முயன்றான். (திருதிராட்டிரனைப் போல). முடியவில்லை. இறுதியாக மனம் வெறுத்து நாட்டை விட்டே ஓடிவிட்டான்.

இந்த நிலையில் வேனன் அரசனாக முடிசூடிக் கொண்டான். கேட்க வேண்டுமா? அட்டகாசத்துக்கு மேல் அட்டகாசம்! வரி மேல் வரி விதித்து மக்களைக் கொடுமைப்படுத்தினான். நாட்டில் யாரும் மகாவிஷ்ணுவுக்கு யாகங்களே நடத்தக்கூடாது என்றும், வழிபாடு, வேள்வி எல்லாம் தனக்கே செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டான்.

"மன்னா! நாட்டில் சுபிட்சம் உண்டாக தேவர்களின் ஆசி வேண்டுகிறோம். உனக்கும் மக்களுக்கும் நன்மை உண்டாகவே யாகங்களைச் செய்கிறோம். ஆகவே, வேள்விகளை நடத்தத் தடை விதிக்காதே!" என்று இதமாக எடுத்துச் சொன்ன தவசிரேஷ்டர்களை எள்ளி நகையாடினான். எடுத்தெறிந்து பேசினான். இதனால் சினம் கொண்ட ரிஷிகள் ஹூங்காரமிட, அப்பெருமுச்சு அகம்பாவம் கொண்ட வேனனை அந்தக் கணமே கொன்றது.

‘முன்னம் ஒரு வேனன் முடிந்த கதை’ இதுதான்!

(பாகவதக் கதைக்கு நன்றி: கெளசிகன் எழுதிய ‘ஸ்ரீமத் பாகவதம்’ – கங்கை புத்தக நிலையம்).

About The Author