பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (14.2)

பூதான இயக்கம் கண்ட புனிதர்! (2)

1951ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி போச்சம்பள்ளி என்ற கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வினோபாஜியைச் சந்தித்தனர். "ஒரு சிறிது நிலம் இருந்தால் உழுது, வருவதைக் கொண்டு வாழ்வோம்" என்றனர். "எவ்வளவு நிலம் தேவை?" என்று கேட்டபோது, "எண்பது ஏக்கர்" என்றனர். "சரி, நிலம் கிடைத்தால் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும். அந்த நிலம் அனைவருக்கும் சொந்தம். தனிப்பட்ட உரிமை யாருக்கும் அதில் கிடையாது. சம்மதம் என்றால் அனைவரும் எழுதிக் கையெழுத்திட்டுத் தாருங்கள்" என்றார் வினோபாஜி. அவர்கள் எழுதித் தந்த பேப்பரை வாங்கிக் கொண்ட வினோபாஜி, “இதை நான் மாநில அரசுக்கு அனுப்புகிறேன்" என்றார். அந்தக் கூட்டத்தில் இருந்த ராமச்சந்திர ரெட்டி என்பவர் அந்த இடத்திலேயே நூறு ஏக்கர் நிலத்தைத் தர முன் வந்தார். "என்ன இது! ஒரு துண்டு நிலத்திற்கு ஒவ்வொருவரும் அடித்துக் கொள்ளும்போது இங்கு என்ன நடக்கிறது? இது கடவுளின் அடையாளம்!" என்று எண்ணிய வினோபாஜிக்கு அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை.

Vinoba Bavaeதங்கள் நிலத்தைத் தருவது உட்பட எதிலும் மக்களை அன்பினால் நெகிழ வைக்க முடியும் என்று உணர்ந்த அவர், "இந்தப் பெரிய காரியத்தில் வாமனனைப் போல என் பணி சிறியதாக இருந்தது. என் மனதிலோ இந்தப் பணி பெரிய யக்ஞமாக ஆனது" என்று கூறினார்.

1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி டெல்லியை நோக்கிப் பயணமானார் வினோபாஜி. இந்த யாத்திரை ஏழைகளுக்கு நிலம் வாங்குவதற்காகவே என்ற தன் குறிக்கோளை அனைவருக்கும் எடுத்துரைத்தார்.

பாரதத்தில் மொத்தம் முப்பது கோடி ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஆறில் ஒரு பங்கை அவர் கேட்டார். டெல்லியை நோக்கிய யாத்திரையில் அவருக்குக் கிடைத்த மொத்த நிலம் 35,000 ஏக்கர்.

அவர் கூறினார்:- "ரவீந்திரநாத் தாகூரின் பாடலான ‘தனியாக வழி நட! ஓ அதி துரதிர்ஷ்டசாலியே.. தனியாக வழி நட!’ என்பதை மாற்றி, ‘தனியாக வழி நட! ஓ, அதி அதிர்ஷ்டசாலியே தனியாக வழி நட!’ என்று பாடிக்கொண்டே போனேன்.

வேதத்தில் ஒரு வினாவும் விடையும் வருகிறது.
யார் தனியாகப் போவது?
சூரியன்! சூரியனே தனியாகப் போகிறான்!"

வினோபாஜி சூரியன் போல அதிகப் பிரகாசத்துடன் பாரதத்தை வலம் வரலானார்!

போச்சம்பள்ளி கிராமத்தில் நடந்த சம்பவம் முடிந்து சரியாக ஒரு வருடம் ஆனபோது அவர் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தைப் பூதானமாகப் பெற்றார்! 1954 டிசம்பரில் பூதான நிலம் 23 லட்சம் ஏக்கராக உயர்ந்தது!

கோழிக்கோட்டில் புதிய எண்ணம் உதயமாகவே வினோபாஜி 1957ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி ‘சாந்தி சேனை’யை ஆரம்பித்தார். ஏழு வருடங்கள் நாடு முழுவதும் சுற்றிய பின்னர் 1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் மக்களை நோக்கி, "இனி எந்தத் தானமும் வேண்டாம். உங்கள் அன்பை மட்டும் தாருங்கள்!" என்று சொன்னார்.

1960ஆம் ஆண்டு பஞ்சாப், உத்திரப்பிரதேசம் வழியாகச் சென்ற வினோபாஜி மத்தியப்பிரதேசம் வந்தடைந்தபோது நம்ப முடியாத அதிசயம் நிகழ்ந்தது. சம்பல் பள்ளத்தாக்கில் பல்லாண்டுகளாகக் கொடூரமான கொலைகளைச் செய்து வந்தோர் வினோபாஜியைச் சரண் அடைந்து, தங்கள் ஆயுதங்களைத் தூக்கி எறிந்து, அஹிம்சை வழியை மேற்கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கினர்!

பதின்மூன்று ஆண்டுகள் பாரதம் முழுவதையும் காலால் நடந்து அளந்த அவர், பின்னர் நாலரை ஆண்டுகள் கார் மூலம் வலம் வந்தார். ஆறு ஆசிரமங்களை நிறுவினார். இந்த ஆசிரமங்களை அவர் சோதனைச்சாலைகள் என்றார்.

1) ஆன்ம அறிவையும் அஹிம்சையையும் ஒருங்கிணைத்த ‘சமன்வய ஆசிரமம்’ 1954இல் புத்த கயாவில் தொடங்கப்பட்டது.

2) மஹராஷ்டிரத்தில் உள்ள பவுனாரில் 1959இல் ‘பிரம்மவித்யா மந்திர்’ ஆன்மீக ஞானத்திற்காகத் தொடங்கப்பட்டது. பெண் சக்தியைப் பெரிதும் போற்றிய அவர் இதன் நிர்வாகத்தைப் பெண்களிடமே ஒப்படைத்தார்.

3) பஞ்சாபில், பதான்கோட்டில் 1959ஆம் ஆண்டு ‘பிரஸ்தான் ஆசிரமம்’ நிறுவப்பட்டது. பாகிஸ்தான், காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மூன்றிற்கும் பதான்கோட் நெருக்கம் என்பதால் சாந்தியைப் பரப்பவும் கல்வியை அனைவருக்கும் வழங்கவும் இது அமைக்கப்பட்டது.

4) மத்தியப்பிரதேசம் இந்தூரில் ‘விஸர்ஜன் ஆசிரமம்’ 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தொழிற்சாலை நகரமான இந்தூரில் அமைந்திருந்த நதியில் காந்திஜியின் அஸ்தி விஸர்ஜனம் செய்யப்பட்டது. (கரைக்கப்பட்டது). ஆகவே, அங்கு காலத்திற்கு ஒவ்வாத பத்தாம் பசலிக் கொள்கைகளைக் களைந்துவிட்டு வீறு கொண்ட புதுக் கொள்கைகளைப் பெற அறிவுறுத்தினார் வினோபாஜி!

5) 1962இல், அஸ்ஸாமில் நார்த் லக்ஷ்மண்பூரில் ‘மைத்ரி ஆசிரமம்’ நேசத்தையும் நட்பையும் பரப்ப அமைக்கப்பட்டது.

6) பங்களூரில் 1965இல் வல்லப ஸ்வாமியின் நினைவாக ‘வல்லபநிகேதன்’, சாந்தியையும் ஆன்ம முன்னேற்றத்தையும் தியானம் மூலம் பெறுவதற்காக அமைக்கப்பட்டது.

ஆக இப்படி ஆறு ஆசிரமங்களை அமைத்த வினோபாஜி "உங்களுக்கு நீங்களே ஒளியாக இருங்கள்!" என்ற சந்தேசத்தையும் தந்தார். அதாவது, ஒவ்வொன்றிற்கும் தன்னை எதிர்பார்க்காமல் தங்களுக்குத் தாங்களே ஒளியை ஊட்டிக் கொள்ள வேண்டும் என்ற பொருள் பொதிந்த அறிவுரையை நல்கினார்!

(தொடரும்)

loading...

About The Author