மார்க்கண்டேயர் திருக்கோயில்

என்றும் பதினாறாகச் சிரஞ்சீவி வரம் பெற்ற மார்க்கண்டேயருக்குத் திருக்கடையூர் அருகே சுமார் ஒரு கி.மீ தூரத்தில் உள்ள மணல்மேடு கிராமத்தில் கோயில் உள்ளது.

மார்க்கண்டேயர் பிறந்த ஊர் இதுதான். இத்தலத்தில்தான் இவர் தந்தை மிருகண்ட முனிவர் தனக்கு ஒரு பிள்ளை வேண்டும் என்று சிவனை நோக்கித் தவம் புரிந்தார். அவருடைய மனைவியும் உடன் இருந்து சிவச் சிந்தனையில் நாள் முழுதும் ஆழ்ந்திருந்தார். சிவபெருமானும் மனமகிழ்ந்து தரிசனம் அளித்தார். ஆனால், வரம் அளிக்க இரண்டு கண்டிஷன்கள் போட்டுவிட்டார்.

"உங்களுக்குக் கெட்ட குணங்களுடன் தீர்க்க ஆயுளாக ஒரு மகன் வேண்டுமா? அல்லது பதினாறு வயது வரை மட்டுமே வாழக்கூடிய நல்ல பிள்ளை வேண்டுமா?" என்று கேட்டார். மிருகண்ட முனிவரும் அவர் மனையாளும் தங்களுக்கு நல்ல பிள்ளையே வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அழகிய, பண்புள்ள புதல்வனாக மார்க்கண்டேயர் பிறந்தார். மகன் பிறந்து வளர வளர அவனிடம் சிவ பக்தியும் வளர்ந்தது. எப்போதும் அவன் வாயில் சிவநாமம்தான். வருடங்கள் நகர, பெற்றோர்கள் வருத்தத்தால் முகம் வாடிப் போனார்கள். மார்க்கண்டேயன் அவர்களின் சோகத்திற்குக் காரணம் கேட்டான். விவரம் அறிந்ததும், "கவலைப்படாதீர்கள் அம்மா! நான் செய்யும் சிவ பூஜை என்னைக் காக்கும். இன்றைய தினத்திலிருந்து பல சிவாலயங்களுக்கும் சென்று பூஜை செய்து பிரார்த்திப்பேன். அவர் எனக்கு ரக்ஷையாக இருந்து காப்பார்” என்று ஸ்தல யாத்திரைக்கு கிளம்பினான்.

பதினாறாம் வயது பிறந்தது. அப்போது மார்க்கண்டேயர் பூஜித்துக் கொண்டிருந்த திருத்தலம் திருக்கடையூர். யமனும் வந்துவிட்டான். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைப் பூஜித்துக்கொண்டிருக்க யமன் தன் பாசக்கயிற்றை வீசினான். அஞ்சிய பாலகன் லிங்கத்தை இறுகத் தழுவிக்கொள்ள, பாசக்கயிறு சிவபெருமானையும் சேர்த்து வளைத்தது. வெகுண்டெழுந்த சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிவந்து யமனைத் தன் இடப் பாதத்தால் உதைத்தார். உயிரை எடுக்கும் எமனின் உயிரே பிரிந்தது. பின் மார்க்கண்டேயனுக்கு, "நீ என்றும் பதினாறு வயதாகவே இருப்பாயாக" என்று சிரஞ்சீவி வரமளித்தார் சிவபிரான்.

எமன் இல்லாததால் மரணம் நின்று போக, பூமாதேவிக்குப் பாரம் வலுத்தது. பாரம் தாங்கமுடியாமல் அவள் சிவனிடம் முறையிட்டாள். அவள் பிரார்த்தனைக்குச் செவி சாய்த்து யமனை மீட்டெழுப்பி அருள் புரிந்த சிவபெருமான், கடவுளென்றும் பாராமல் கடமை தவறாது தன் பணியைச் செய்ய முற்பட்டதால் எமனுக்குத் ‘தர்மராஜன்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

மிருகண்டு முனிவர் பிள்ளைப்பேறு வேண்டிப் பூஜித்த இத்தலத்தில் அருள்மிகு மார்க்கண்டேயர் கோயில் அமைந்திருக்கிறது. அங்கு மூலவராக அருள்புரிகிறார் ஸ்ரீமார்க்கண்டேயர். அவரது இடப் பக்கம் அவர் பூஜித்த ஆத்மலிங்கம் இருக்கிறது. இங்கு அருள்பாலிக்கும் சிவனின் பெயர் ஸ்ரீமிருகண்டேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீ மருந்துவதி. இந்தப் பெயரிலிருந்தே இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் வியாதிகள் மறைந்துவிடும் என்று ஊகிக்கமுடிகிறது.

நாள்தோறும் மார்க்கண்டேயருக்கு அபிஷேகம் செய்யும் நீரை ஒரு தொட்டியில் விடுகின்றனர். அந்தத் தொட்டிக்குள் நந்திதேவர் கழுத்தளவுத் தண்ணீரில் நனைந்தபடிக் காட்சி தருகிறார். பிரதோஷ நாளைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் அபிஷேக நீர் இந்தத் தொட்டிக்குள் நிரப்பப்படுகிறது. இந்த ஜலத்தைப் புனித நீராக ஏற்றுப் பலர் தலையில் தெளித்துக் கொள்கின்றனர். இதனால் தோய்கள் தீர்வதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள். தவிர, மார்க்கண்டேயர் அபிஷேக நீரில் நந்தி அமர்ந்திருப்பது வேறெங்கும் காண முடியாத சிறப்பு! சிவனருளால் மார்க்கண்டேயர் சிரஞ்சீவி பதவி அடைந்ததால் இங்கு வருபவர்கள் தங்களுக்குப் பூரண ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கும் எனும் அசையாத நம்பிக்கையுடன் பூஜை செய்கிறார்கள். இந்த ஆலயத்தில் மிருகண்டு முனிவர் வாழ்ந்த குடிலும் அவர் பூஜித்த கோயிலும் சித்திர வடிவில் மிக அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

திருக்கடையூர் அபிராமியைத் தரிசிக்கச் செல்லும் அன்பர்கள் அவசியம் இந்த மணல்மேடு கோயிலையும் பார்த்து அருள் பெற வேண்டும்!

loading...

About The Author