இணையத்தில் சமூக சங்கமம்

கடந்த சில ஆண்டுகளாக"ஆர்குட்" இணையதளம் இளைஞர்களை ஈர்த்திருக்கிறது. சமீப காலமாக, இளைஞர்கள் மட்டுமன்றி பெரியவர்களும் இந்த இணையதளத்தை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். "ஆர்குட்" என்ன செய்கிறது என்பதை சுருக்கமாக சொல்லிவிட்டுத் தொடருவோம்.

நண்பர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்காகத்தான் "ஆர்குட்"ஆரம்பித்தார்கள். பல கிளைகள் முளைத்து இன்று மிகவும் பெரிய மரமாக வளர்ந்துவிட்டது. நம்மைப் போன்ற எண்ணங்களையும் விருப்பங்களையும் கொண்ட மனிதர்களைத் தேடிக் கண்டுபிடித்து தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இப்போதுபயன்படுகிறது.

"ஆர்குட்" போல நிறைய இணையதளங்கள் உள்ளன. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் "ஃபேஸ்புக்" என்றொரு இணையதளம் மிகவும் பிரபலம். இப்பொழுதெல்லாம் எல்லோரும் சைபர் க்ரைம்.. அது.. இது.. என்கிறார்கள். நம் மனதில் ஏற்படும் முதல் கேள்வி – இது போன்ற இணையதளங்களை நம்பலாமா?

சில மாதங்களுக்கு முன் என் தோழி எனக்கு ஒரு கதை சொன்னாள். அவளுடைய தோழனுடைய உறவினருடைய தோழனுடைய தோழியுடைய சொந்தக்காரருக்கு நிகழ்ந்த சம்பவமாம்!

"ஆர்குட்" இணையதளத்தில் ஒரு பெண் ஒரு ஆடவனுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாள். இருவரும் இணையதளம் மூலமாகவே தங்கள் எண்ணங்களை பரிமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் பிடித்துப் போகவே சந்திக்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். இந்தப் பெண் அவனை சந்திப்பதற்காக அவன் வீட்டுக்கு செல்ல, அங்கே இவளுக்கு அபாயம் காத்துக்கொண்டிருந்தது. இவளிடம் தகாத முறையில் அவன் நடந்து கொள்ள முயற்சிக்க, தப்பித்தால் போதும் என்று தலையை பிய்த்துக்கொண்டு ஓடியே வந்துவிட்டாளாம். அதே "ஆர்குட்" டில் சந்தித்து ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, மணந்து சந்தோஷமாக வாழ்பவர்களும் உண்டு.

சரி, அது கிடக்கட்டும், நம் பழைய கேள்விக்கு திரும்புவோம்! எப்படி இது போன்ற இணையதளங்களை நம்புவது?!! கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், "ஆர்குட்" போன்ற இணையதளங்கள் மனிதர்களிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். இதைப் பயன்படுத்துபவர்களில் நல்லவர்களும் உண்டு, கயவர்களும் உண்டு. "ஆர்குட்" போன்ற இணையதளங்களை கண்டிப்பாக நம்பலாம். அதை உபயோகப்படுத்தும் நபர்களை நம்பலாமா என்பது தான் கேள்விக்குரிய ஒன்று.

இணையத்தில் கயவர்களை இனம் காண்பது கடினம். நேரில் பார்த்து ஏமாறுபவர்களே ஏராளமிருக்க, வெறும் இணையப் பழக்கத்தில் எப்படி ஒருவரை நம்ப முடியும்! நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க இதோ, சில வழிகள்:

• அனைத்து இணையதளங்களிலும் நம் விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அவர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் கிடையாது. பெயர், ஊர் போன்ற விவரங்களைத் தரலாம். ஆனால், தொலைபேசி எண், ஈ-மெயில் போன்ற விவரங்களைத் தந்து விடாதீர்கள். எது போன்ற விவரங்களை நீங்கள் உங்கள் விரோதியிடமும் தருவீர்களோ அதை மட்டும் தாருங்கள். வேறு எதுவும் எழுத வேண்டாம்.

• பொது வலைப்பக்கங்களில் உங்கள் புகைப்படங்களைப் போடாதீர்கள். புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள வேண்டுமென்றால், உங்கள் நண்பர்களுக்கு மட்டும் அவைகளைப் பார்ப்பதற்கு அனுமதி கொடுங்கள். அநேக இணைய தளங்களில் இந்த வசதி உண்டு. இதை எப்படிச் செய்யவேண்டும் என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால், அந்தந்த தளங்களிலேயே கொடுத்திருப்பார்கள். பார்த்துக் கொள்ளவும். அல்லது, யாரிடமேனும் கேட்டுக் கண்டுபிடியுங்கள்.

• இணையத்தில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் நட்பு கொண்டாட வேண்டும் என்று எண்ண வேண்டாம். நீங்கள் பழகவிருக்கும் நபர்களைத் தேர்வு செய்யுங்கள். நல்லவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருந்தால், நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ள முடியும். ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன், அவரின் விவரங்கள் போலியானவையாக இருக்கக் கூடுமோ என்று நன்கு யோசித்துவிடுங்கள்.

• இணையத்தில் குழுக்கள் உண்டு. விருப்பங்கள் ஒன்றாகக் கொண்ட நபர்கள் சேர்ந்து ஆரம்பிக்கும் குழுக்கள். உதாரணத்திற்கு, விஜய் ரசிகர்கள், கே.பாலசந்தர் ரசிகர்கள் என்று நிறைய குழுக்கள். வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் நடிகைகளின் ஆபாசப் படங்களை பகிர்ந்து கொள்வதற்குக் கூட குழுக்கள் உண்டென கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள் எந்த குழுவில்வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். உங்கள் ரசனைகளை நன்கு அறிந்தவர்கள் நீங்கள் மட்டுமே!! நிதானமாக யோசித்து உங்கள் குழுக்களைத் தேர்வு செய்யுங்கள்.

• நீங்கள் வசிக்கும் வீட்டைப் பற்றியோ, படிக்கும் கல்லூரி/பள்ளி பற்றியோ, வேலை பார்க்கும் அலுவலகம் பற்றியோ அதிகம் சொல்ல வேண்டாம். மற்றவர்கள் உங்களுக்கு அனுப்பும் செய்திகளை (ஸ்க்ரேப்) அவ்வப்பொழுது அழித்துவிடுங்கள்.
.

• நீங்கள் மற்றவருக்கு அனுப்பும் செய்திகளில் உங்களைப் பற்றிய சொந்தக் குறிப்புகளைத் தர வேண்டாம். அப்படியே அனுப்ப வேண்டும் என்றாலும், வேறு யாரும் பார்க்காது அனுப்புதல் சாத்தியம். எப்படி என்று அறிந்துகொள்ளுங்கள்.

• அதிகமாக நண்பர்கள் வைத்திருந்தால் யாரும் பரிசு தரப் போவது இல்லை. எண்ணிக்கையை விட, நண்பர்களின் குணங்கள் தான் முக்கியம்.

• கடைசியாக, ஏமாற்றுபவர்கள் எங்கிருந்தாலும் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். அதனால், எது செய்தாலும் நன்கு யோசித்து விட்டு எச்சரிக்கையுடன் செய்யுங்கள்!

About The Author

2 Comments

  1. ramprakaash

    உங்கல் ஆர்குட் விசயம் எச்சரிக்கை நன்ரு

Comments are closed.