இந்த நாள் கெட்ட நாள்!

என்னடா இது! ஆரம்பித்து பிள்ளையார் சுழி போடும்போதே சபிக்கிறானே.. என்று நினைக்காதீர்கள்! நான் ஒன்றும் தெங்கச்சிக்கு எதிர்கட்சி அல்ல! நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று எண்ண வைக்கும் உண்மைச் சம்பவங்கள்தான் இவை.

சம்பவம் ஒன்று :

கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ ஒன்று பரவியது. அது அணைந்தவுடன் அதன் விளைவுகளைக் கண்டறிவதற்காக ஒரு குழு சென்றது. அக்குழு தீயில் எரிந்து கருகிப்போன ஒரு உடலைப் பார்த்தார்கள். இறந்து போன அந்த ஆண் உடலில் தண்ணீருக்குள் முழுவதுமாக மூழ்கிச் செல்வதற்கான உடை, பின்பக்கத்தில் ஸ்கூபா டாங்க்குகள், முகத்தில் சுவாசிப்பதற்கான சுவாச உறை ஆகியவை இருந்தன. ஆராயச் சென்றவர்களுக்கு இது வியப்பளித்தது. போஸ்ட் மார்ட்டம் செய்தபோது அந்த மனிதன் தீக்காயங்களால் இறக்கவில்லை – பலத்த உள்காயங்களால்தான் இறந்திருக்கிறான் என்று தெரிய வந்தது. அடையாளம் காண்பதற்காகப் பற்கள் சோதனை செய்யப்பட்டன. நீரில் மூழ்குவதற்கான ஏற்பாடுகளுடன் இருந்த இந்த நீச்சல்காரர் எப்படி காட்டுத்தீயில் மாட்டி இறந்திருக்கக் கூடும் என்று சற்றே ஆராய்ச்சி செய்தார்கள்.

தெரியவந்த தகவல் திடுக்கிட வைத்தது. காட்டுத் தீ ஏற்பட்ட அந்தக் குறிப்பிட்ட நாளில் இறந்து போன அந்த மனிதன் அந்த இடத்திலிருந்து இருபது மைலுக்கு அப்பால் உள்ள கடலில் உள்ளே மூழ்கி நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான். அப்போது காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர, ஹெலிகாப்டர்கள் கடலிலிருந்து பெரிய பக்கெட்டுகளால் நீரை வாரி எடுத்துக் கொண்டிருந்தன. ஒரு நொடி கடலுக்குள் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த அவன், அடுத்த விநாடியில் அந்த ராட்சச பக்கெட்டுக்குள் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தான். அடுத்து நடந்ததைச் சொல்லவும் வேண்டுமா? விதி வலியது என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?அவன் பொழுது விடிந்த நேரம் அப்படி!

இன்னமும் இந்த நாள் கெட்ட நாள் என்று நினைக்கிறீர்களா?

சம்பவம் இரண்டு :

ஏதடா.. விடுமுறை நாளாயிற்றே.. இந்த மோட்டார் சைக்கிளை துடைத்துத்தான் வைப்போமே.. என்ற நல்ல எண்ணத்தில்தான் அன்று அவன் தன் வீட்டு முன்பக்கத்தில் சிரத்தையாக தன் மோட்டார் சைக்கிளைத் துடைத்து சுத்தம் பண்ணிக் கொண்டிருந்தான். எஞ்சினை ஓட்டிப் பார்த்தபோது தற்செயலாக வண்டி கியரில் விழுந்துவிட்டது.மோட்டார் சைக்கிளின் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டிருந்த அவன் தடதடவென்று ஓடும் மோட்டார் சைக்கிளால் இழுக்கப்பட, சமையலறைக்கும் அந்த இடத்திற்கும் நடுவே இருந்த கண்ணாடித் தடுப்பை உடைத்துக் கொண்டு விழுந்தான். பலத்த சப்தத்தை கேட்ட மனைவி, வேகமாக ஓடிவந்து தன் கணவன் ரத்தக் காயங்களுடன் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்தாள். ஆம்புலன்சை அழைக்க, மருத்துவ உதவியாளர்கள் அடிபட்டவனை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்துச் சென்றனர். இதற்குள் மனைவி கீழே விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிளை நிமிர்த்தி வெளியே கொண்டு வந்து வைத்தாள். கீழே சிந்தியிருந்த டீசலை தாளில் ஒற்றி எடுத்து அதனை டாய்லெட்டில் போட்டாள்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அந்த மனிதன், உடைந்து கிடைந்த கண்ணாடித் துண்டுகளையும், சிதைந்துபோன மோட்டார் சைக்கிளையும் பார்த்து வருத்தத்தோடு டாய்லெட்டுக்குச் சென்று அங்கே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்றவேண்டுமல்லவா! அவன் டாய்லெட்டை விட்டு எழுந்திருக்கும்போது சிகரெட் துண்டை கழிவறையில் போட, அங்கே ஏற்கனவே மனைவி போட்டிருந்த டீசல் ‘பச்சக்’ என்று பற்றிக் கொள்ள அப்புறம் நடந்ததைச் சொல்லவும் வேண்டுமா?

மனைவிக்கு பாத்ரூமிலிருந்து ஒரு பெரிய வெடிச் சத்தமும் அலறலும் கேட்டது. காலுடைகள் கிழிந்து தொங்க அவன் கீழே விழுந்து புரண்டு அலறிக் கொண்டிருந்தான். மறுபடியும் ஆம்புலன்சைக் கூப்பிட, அந்த மனிதனைக் கீழே இறக்கும்போது அவர்கள் ‘எப்படி இது நேர்ந்தது?’ என்று கேட்க, மனைவி நடந்ததைச் சொல்ல, அவர்கள் சிரி.. சிரி.. என்று சிரிக்க, அந்த சிரிப்பு வேகத்தில் ஸ்ட்ரெச்சரை நழுவ விட, ஸ்ட்ரெச்சர் கீழே உருண்டு அவன் மறுபடியும் கால்களை ஒடித்துக் கொண்டான். இந்தக் கஷ்டம் போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா? பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னார்கள்!!

சம்பவம் மூன்று :

அலாஸ்காவில் கடலில் நடந்த எண்ணைக் கசிவிலிருந்து சீல்களை மீட்பதற்கு ஒவ்வொரு சீலுக்கும் சராசரியாக 80,000 டாலர் செலவானது. சீல்களின் புனரமைப்பிற்காக ஒரு பெரிய விழா நடத்தப்பட்டது. அந்த விழாவில் சிம்பாலிக்காக இரண்டு சீல்கள் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன, பலத்த கரகோஷங்களுக்கிடையே. அந்தோ பரிதாபம்! கடலில் விடப்பட்ட சில விநாடிகளுக்குள்ளேயே பார்வையாளர்கள் கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தபோதே, கடலிலிருந்த ஒரு திமிங்கலம் இரண்டு சீல்களையும் கொன்று தின்றுவிட்டது!

சம்பவம் நான்கு :

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மனைவி தன் கணவன் ஏதோ வெறிபிடித்தாற்போல உடலை நெளித்துக் கொண்டு நடுக்கத்துடன் ஆடிக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவனுடைய இடுப்பிலிருந்து ஒரு மின்கம்பி மின் தண்ணீர்க் கெட்டிலை நோக்கி நீண்டு சென்று கொண்டிருந்தது. தன் கணவனுக்கு ஏதோ மின் அதிர்ச்சி என்று எண்ணி பயந்து, அவன் கையில் மின் அதிர்ச்சியைப் போக்குவதற்காக ஒரு மரப் பலகையால் ஓங்கி அடித்தாள். அவன் கை ஒடிந்தது. பாவம்! அவன் அதுவரை சந்தோஷமாக வாக்மேனில் பாட்டைக் கேட்டு ஆடிக் கொண்டிருந்தான்!

சம்பவம் ஐந்து :

ஜெர்மனியில் பான் நகரில் ஒரு கசாப்புக் கடை அருகே பன்றிகள் கொல்லப்படுவதை எதித்து மிருக வதைக் காப்பாளர்கள் போர்க்கொடி எழுப்பினர். சந்தடி சாக்கில் இரண்டாயிரம் பன்றிகள் வேலிக்குள்ளிருந்நு முண்டியடித்து வெளியே வரத் துவங்கின. போகும்போது சும்மா போகவில்லை – தங்களுக்காக எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்த போராளிகளில் இருவரை நெரிசலில் நசுக்கிவிட்டுத்தான் சென்றன. அவர்கள் பரிதாபமாக அங்கேயே இறந்தார்கள்!

கடைசியாக ஒன்று

ஈராக்கைச் சேர்ந்த பயங்கரவாதி ரஹன்செத் ஒரு கடித வெடிகுண்டு அனுப்பும்போது தபால்தலை வைத்து அனுப்ப மறந்துவிட்டான். வெடிகுண்டுடன் கூடிய அந்தக் கடிதம் அவனுக்கே திரும்பி வந்தது. தான் அனுப்பியது மறந்துபோய் அவன் பிரித்துப் பார்க்க…………?!!

About The Author

2 Comments

  1. ali k.a

    Naல்ல கப்சா விட்டு இருக்கிரார்கள்
    ali ajman

Comments are closed.