இருளிலிருந்து ஓளிக்கு இட்டுச் செல்லும் பண்டிகை – தீபாவளி!

அறத்தின் வெற்றியை அறிவிக்கும் பண்டிகை
    "அறம் வெல்லும் பாவம் தோற்கும்" என்ற உன்னத இயற்கை நியதியை எடுத்துக் காட்டி அதைக் கொண்டாடச் செய்யும் பண்டிகை தீபாவளி! ‘இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்க’ என்ற அற்புத லட்சியத்தை நினைவூட்டி பிரகாசமான எதிர்காலத்தைக் காண வழி வகுக்கும் பண்டிகையும் தீபாவளியே! ‘பெண்மையின் சக்தியே வெற்றிக்கான உறுதுணை’ என்பதை எடுத்துக் காட்டுவதும் தீபாவளி பண்டிகைதான்! இப்படி பல்வேறு பண்புகளைப் பிரதிபலிக்கும் இப்பண்டிகையின் கொண்டாடத்திற்கு இவ்வுலகில் நிலவும் கதைகளும் பலப்பலவாகும்.

ராமன் அயோத்தி மீண்ட நாள்!
     பாவத்தின் உருவமான ராவணன் பிறர்மனையை காம இச்சையுடன் சிறையிலிட, அறத்தின் உருவமான ராமன் அவனை வதம் செய்து தர்மதேவியான சீதையை விடுவித்து அயோத்தி மீண்டு பட்டாபிஷேகம் செய்துகொண்டு முடி சூடிய நாள் தீபாவளி தினம்தான்!

ஸத்யபாமாவின் துணையால் நரகாசுரனை கண்ணன் வென்ற நாள்!
     ஸத்யபாமாவின் துணையோடு கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனைக் கொன்று, அரக்கக் கொடுமையிலிருந்து உலகினரைக் காத்த நாளும் தீபாவளி தினம்தான்!

மஹாபலி மேலுலகம் சென்ற நாள்!
     மஹாபலி சக்ரவர்த்தி விஷ்ணுவின் ஆணையை சிரமேற்கொண்டு மேலுலகம் சென்ற நாளும் தீபாவளி தான்! அவர் பெற்ற வரத்தின் காரணமாக வருடத்திற்கு ஒரு முறை தனது நாட்டிற்கு வருகை தரும் நாளே ஓணமாகக் கொண்டாடப்படுகிறது!

அறத்தின் நாயகர்களான ராம சீதையரை அயோத்தி மக்கள் தீபங்களை ஏற்றி வரவேற்றதைப் போல, நரகாசுரனை ஒழித்து தர்ம ஒளியைப் பரப்பும் விதமாக அனைத்து மக்களும் அன்று தீபங்களை ஏற்றிக் கொண்டாடியதைப் போல மஹாபலியை நினைவு கூர்ந்து அறஒளியை தீபம் ஏற்றி வரவேற்றதைப் போல இன்றும் நாம் மறவாமல் மல் தவறாமல் தீபத்தை ஏற்றி வைத்து பாரதம் உள்ளிட்ட பல நாடுகளிலும் தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.

ஜைனர்களுக்கும் சீக்கியர்களுக்கும் புனித நாள்
     மஹாவீரர் தீபாவளியன்று நிர்வாணம் அடைந்ததால் ஜைனர்களுக்கு அது புனித நாளாகிறது (கி.மு.527ல் அக்டோபர் 15ம் தேதி அவர் நிர்வாணம் எய்தினார்.) சீக்கியர்களின் ஆறாம் குருவான குரு ஹர்கோபிந்த் சிங் ஐம்பத்திரண்டு இந்து மன்னர்களுடன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் அவர் பொற்கோவிலுக்கு வருகை தந்தார்.அப்போது அவரை வரவேற்கும் பொருட்டு சீக்கியர்கள் தீபங்களை வரிசையாக (தீப + ஆவளி= தீப வரிசை) ஏற்றி வைத்து மகிழ்ந்த நாளும் தீபாவளி தினம் தான்!

இந்திரனை வென்று கோவர்த்தனத்தை தூக்கிய நாள்!
     இந்திரனை வென்ற கிருஷ்ணபிரானின் வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றே! அப்பாவி கோகுல மக்களை இந்திரன் இடியாலும் மழையாலும் துன்புறுத்த கிருஷ்ணர் கோவர்த்தன மலையையே உயரத் தூக்கி கோகுல மக்களை அதன் கீழ் இருக்கச் செய்து இந்திரனுடன் போர் செய்து அவனைத் தோற்கடித்தார்.. அந்த வெற்றியை ஒட்டி மறுநாள் கோவர்த்தன பூஜை நடைபெற்றது.. இந்நிகழ்வும் தீபாவளியன்றுதான் நிகழ்ந்தது.

அர்த்தநாரீஸ்வரர் உருவான நாள்!
     சைவர்களுக்கும் சாக்தர்களுக்கும் தீபாவளி தினம் அற்புதமான புனிதமான பண்டிகை! கந்த புராணத்தில் வரும் வரலாறு இதன் பெருமையைக் கூறும். சக்தியானவள் சிவனின் பாதி உடலை வரிக்க வேண்டி இருபத்தோரு நாட்கள் விரதம் இருக்க நிச்சயித்து சுக்ல பக்ஷ அஷ்டமியன்று விரதத்தை ஆரம்பித்து கேதார விரதம் என்னும் இந்த விரதத்தை தீபாவளி அன்றுதான் நிறைவு செய்தாள்.இந்த நாளில்தான் சிவன், சக்தியின் விரதத்தை அங்கீகரித்து தன்னில் பாதியை அவளுக்குத் தந்து அர்த்த நாரீஸ்வரரானார்.. ஆக பெண்மை தவமிருந்து வெற்றி பெற்ற தினமும், தீபாவளி தினம்தான்!

இப்படி அறத்தின் வெற்றியையும் பெண்மையின் வெற்றியையும் ஒருங்கே இணைக்கும் ஒரே பண்டிகையாக இது அமைவதால்தான் பண்டிகைகளிலேயே சிறப்புற்ற ஒன்றாக தீபாவளி விளங்குகின்றது.

உலக பண்டிகை தீபாவளி!
     வட இந்தியாவில் லஷ்மியின் வருகையைக் குறிக்கும் தினமாக இது அனுசரிக்கப்பட்டு தீபாவளியன்று குபேர பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமில்லாமல், பௌத்தர்களும்.சீக்கியர்களும் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தீபாவளி கொண்டாடப்படுகிறது. உலகெங்குமுள்ள ஹிந்துக்களோ தீபங்களை ஏற்றி பட்டாசு வெடித்து புத்தாடை உடுத்தி அறத்தின் வெற்றியை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கின்றனர்.

சமகால கண்ணோட்டத்துடன் பார்த்தால் இன்றைய உலகிற்குத் தேவையான பண்டிகையாக இது அமைகிறது. நாளுக்கு நாள் அசுர சக்திகள் வன்முறையாலும் தீவிரவாதத்தாலும் உலகை அச்சுறுத்துகின்றன; ஆங்காங்கே தீய சக்திகள் லஞ்சம், அதிகாரம் இவற்றால் சாமானியரை பயமுறுத்துகின்றன. இந்த நிலையில் அனைவரும் வேண்டுவது தீபாவளியைத்தான்!

வன்முறையற்ற அகிம்சை கொள்கை ஓங்க, ‘எல்லோரும் இந்தநாட்டு மன்னர்களே’ என்ற ஜனநாயகக் கோட்பாடு தழைக்க, அறம் வெல்ல பாவம் தோற்க தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து ஒவ்வொரு நாளும் தீபாவளியாக அமைய வேண்டுமென்று இறைவனை வேண்டுவோமாக!

தமஸோ மா ஜ்யோதிர் கமய! (இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்க)
-பிருஹதாரண்யக உபநிஷத்

About The Author

3 Comments

  1. Hema

    இதை படிக்கும் போது ஏன் தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடுகிறோம்முன்னு தெரியுது, இதை படிக்கிற பெரியவங்க தங்கள் குடும்பத்திலுள்ள குழந்தைகளுக்கிட்ட பகிர்ந்துக்கிட்ட நல்ல இருக்கும். நன்றி நாகராஜன் சார். உங்களோட விஞ்ஞானம் மெய்ஞானம் படிக்கும் போது இந்தியா பற்றி நிறைய நல்ல விசயங்களை தெரிஞ்சிக்கிட்டோம். நம் முப்பாட்டர்களின் நம்பிக்கைகள், அதற்கு பின்னாலான அறிவியல் உண்மைகள் பெருமைப் பட வைக்கிறது. நன்றி!!

  2. ramji sharma

    அர்தனரேச்நரர் உருவனனல் அ நெந் மெச்சகெ fஒர் உச். நிcஎ.

    ரம்ஜி ஷர்ம

  3. P.Balakrishnan

    அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!
    -அரிமா இளங்கண்ணன்

Comments are closed.