கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

நம்ம தோட்ட மல்லிகைக்கும் மணம் இருக்கு!

”சர்வதேச அளவில் தெரிய வந்துள்ள ஒரு விற்பனையாளரின் புத்தகக் கடை நகரின் மையப் பகுதியில் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு நூலாசிரியரின் பிரபலமான புத்தகத்தின் இரண்டு பதிப்புகள் அலமாரியில் உள்ளன. ஒரே மாதிரி அச்சு; ஒரே மாதிரித் தாள். ஒன்றின் விலை 295 ரூபாய். மற்றொன்றின் விலை 395 ரூபாய். மேலாளரிடம் கேட்டால், “அதனால் என்ன? இருக்கட்டுமே, எதையாவது வாங்கிக் கொள்ளுங்கள்.” என்றார்.

அப்படிச் சொன்னது சரியா? நீங்கள் மேலாளராக இருந்தால் என்ன செய்வீர்கள்? ஏன்?”

இது ”நம்ம நாட்டுப்புற நிர்வாகிங்க” என்ற நூலில் ஒரு கேள்வி. பாராட்டுப் பெற்ற விடையை இறுதியில் காண்க.

நிர்வாகம், சுயமுன்னேற்றம் போன்ற விஷயங்களை, அழகாக, சுவைபட, கதை போல ஆங்கிலத்தில் நிறையப் பேர் எழுதுகிறார்கள். பால்கொய்லோ, ராபின் ஷர்மா, ரவி சுப்ரமண்யன், பி.எஸ். வாசு ஆகியவர்களைச் சொல்லலாம். தமிழில் அப்படி ஒரு நூலைப் பார்த்ததும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டோம்.

நூலின் ஆசிரியர் டாக்டர் ஆர்.நடராஜன் பிரபலமானவரே. எம்.பி.ஏ. மாணவர்களுக்குப் பேராசிரியராக இருந்திருக்கிறார். ஆங்கிலப் பேராசிரியர், பத்திரிகையாளர், பொது மேலாளர், அமெரிக்க தூதரக அரசியல் ஆலோசகர், நிர்வாக இயல் நிபுணர், இரு மொழி எழுத்தாளர். ஆங்கிலத்திலும், தமிழிலுமாக 23 புத்தகங்கள் எழுதி, தமிழ்நாடு அரசு, பாரத ஸ்டேட் பாங்கு பரிசுகள் வாங்கியுள்ளார். அவரது புத்தகங்கள் இது வரை நம் கண்ணில் படவில்லை என்றால் தவறு நம்முடையதே! (வாசகர்கள் சிலர் படித்திருக்கக் கூடும்.)

240 பக்கமுள்ள இந்த நூலை அழகாக அச்சிட்டு 100 ரூபாய் விலைக்குக் கொண்டு வந்திருப்பவர்களும் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த மணியம் பதிப்பகம் என்ற நாட்டுப்புறப் பதிப்பாளர்களே!

வசதிக்காக, இந்த நூலை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். விற்பனைத் துறையில் அனுபவம் மிக்க ஆசிரியர், இந்தத் துறைக்கு புதிதாகச் சேர்ந்துள்ள, சில வேறுபட்ட தகுதிகளைக் கொண்ட இளைஞர்களுக்கு, ஒரு பூங்காவில் அமர்ந்து தினம் ஒரு மணி நேரமாக, ஏழு நாட்கள் நடைமுறை உத்திகளை நகைச்சுவையுடனும், எளிதாகவும் சொல்லித் தருவது போல உள்ளது முதல் பகுதி. இரண்டாவது பகுதி, ஒரு தொழிலதிபர், நிர்வாக இயல் நுட்பங்களைப் பற்றி நண்பர்களுடன் உரையாடுவது போல் அமைந்தது. ஆரம்பத்தில் கேட்ட கேள்வி முதல் பகுதியில் வருவது. விடை கடைசியில்!

சொற்களைச் சுருக்கமாகப் பயன்படுத்துவது பற்றிச் சொல்லும் ஆசிரியர், விஜயகாந்த் பாணியில் ஒரு புள்ளி விவரம் தருகிறார். “மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் நூல் 12 சூத்திரங்கள் கொண்டது. சொற்கள் 170 மட்டுமே. உலகிலேயே மிகச் சிறிய தத்துவ ஞானப் புத்தகம் என்ற பெருமையைப் பெறுகிறது. பைபிளில் லார்ட்’ஸ் ப்ரேயர் என்ற பகுதியில் உள்ள சொற்கள் 56 மட்டுமே. லிங்கனின் கெட்டிஸ்பர்க் உரை 266 வார்த்தைகள். அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் மொத்த வார்த்தைகள் 300. ஆனால், 1980 வாக்கில் முட்டைக்கோஸ் விலை நிர்ணயம் பற்றிய அரசாங்க ஆணையில் 26,911 வார்த்தைகள் இருந்தன!”

இரண்டாவது பகுதி இன்னும் சிறப்பு. நம்ம ஊர்க் கழைக் கூத்தாடி எந்த நிர்வாகக் கல்லூரிக்குப் போனார்? அவரது செயல்பாட்டில் உயரிய நிர்வாக தத்துவங்கள் அடங்கியுள்ளன.

அவர் தேர்வு செய்யும் நேரமும் இடமும் : Branding, Time Management, Positioning.
நடை, உடை, பாவனை: Attract the Customer.
பாட்டும், மேளமும் : Innovation.
பயன்படுத்தும் கருவிகள் : Material Management.
குரங்கு பாம்பு இவற்றைப் பயன்படுத்துவது : Surprise the customer.
”எல்லாரும் ஜோரா கை தட்டுங்க, சின்ன பிள்ளைங்க சீட்டியடிங்க” என்பது : Participative factor, or Involving.
பாம்பு, கீரி எப்போது சண்டை போடும் என்ற எதிர்பார்ப்பில் வைப்பது : Expectation, or Surprise Element.
இந்தக் குழந்தை சாப்பிடாமல், சரியான உடை இல்லாமல் இப்படிக் காசு சம்பாதிக்க உழைக்கிறதே என்ற எண்ணத்தை நேரடியாகச் சொல்லாமல் உணர வைப்பது : Empathy.
சின்னக் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்திருப்பது : Training and Development

இது தவிர, வல்லாரை லேகியம் விற்பவர் பற்றியும் சொல்லியிருக்கிறார்; மும்பையின் டப்பாவாலாக்கள் பற்றியும் விவரமாகச் சொல்லியிருக்கிறார். Forbes பத்திரிகையின் பாராட்டு, உலகத் தர நிர்வாகக் கல்லூரிகளில் பயிற்சி தர அழைப்பு, இங்கிலாந்தின் அரச குடும்பத்து திருமண விழாவுக்கு அழைப்பு இத்தனையும் பெற்றுள்ள இந்த உழைப்பாளிகள், நாட்டுப்புற நிர்வாகத் திறமைக்கு நல்ல எடுத்துக்காட்டு. 6 சிக்மா தரத் திறம் என்ன, அதற்கு மேலும் தாண்டி விட்டார்கள் இவர்கள்! ஒரு கோடியே அறுபது லட்சம் டிபன் டப்பாக்களைக் கையாள்வதில் தவறி விடவோ, மாறிப்போய் விடவோ வாய்ப்புள்ளது ஒன்றே ஒன்று!

அதிகப் படிப்பறிவில்லாத “தொழிலாளி-முதலாளி”களைக் கொண்ட இந்த அமைப்பின் வெற்றிக்குக் காரணம், இவர்களின் சுய கட்டுப்பாடு, ஒழுக்கம், நேர்மை, சுறுசுறுப்பு, நேர நிர்வாகம், குழுவாக ஒத்தியங்கும் பண்பு! இந்த “வலைப் பின்னலை” தங்கள் விற்பனையாளர்களாக மாற்றிக் கொள்ள ஏர்டெல் முயன்றதாம்! நல்லவேளை! தோல்வியுற்றது. இல்லாவிட்டால், ”அங்கணெக்கு அங்கெயும் கெட்டு, இங்கணெக்கு இங்கெயும் கெட்டு” என்பது போல் ஆயிருக்கும்!

ஆரம்பக் கேள்விக்கு பயிற்சி மாணவர் சொல்லி பாராட்டு பெற்ற விடை:

“குறைந்த விலையுள்ள புத்தகத்தை முதலில் அலமாரியில் வைப்பேன். அது விற்ற பிறகு, அதிக விலையுள்ள பிரதியை எடுத்து வைப்பேன். ஏன் எனில், முதலில் நாம் வாடிக்கையாளரைக் குழப்பக்கூடாது. தவிரவும், முதலில் மலிவு விலைப் பிரதியை வாங்கிச் செல்பவர் அந்தப் புத்தகம் பற்றி இன்னொருவரிடம் சொன்னால், அவர் வாங்க வருவார். வாங்கும் முடிவுக்கு வந்து விட்டதால் விலையைப் பொருட்படுத்த மாட்டார்!”

About The Author

1 Comment

Comments are closed.