கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

ஏமாறச் சொன்னது நானா?

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான். நூதன வழிகளில் தொழில் நுட்ப உதவியுடன் ஏமாற்றுபவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள, தனது வலைப்பதிவில் சில உபயோகமான எச்சரிக்கைகளைத் தருகிறார் சேவியர்.

1. உடனடி பணம், புகழ் போன்றவை தரும் திட்டங்கள், அழைப்புகள் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாய் இருங்கள். ஒரே நாளில் மன்னனாக ஆசைப்படும்போது அதிக கவனம் அவசியம்!

2. "உடனே" என உங்களை அவசரப்படுத்தும் எதையும் உதாசீனப்படுத்தத் தயங்க வேண்டாம்.

3. இணையத்தில் உங்கள் தகவல்கள் எதையும் கொடுக்காதீர்கள். அப்படிக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் தளம் பாதுகாப்பானது எனப்படும் சிம்பல் இருந்தால் மட்டுமே கொடுங்கள்.

4. "முன் பணம்" கொடுக்க வேண்டியவற்றை ரொம்பவே அலசி ஆராயுங்கள். பெரும்பாலும் கம்பி நீட்டி விடும் காரியமாகத்தான் அது இருக்கும்.

5. எந்த விஷயத்தையும் அனுபவசாலிகளிடம் விவாதிக்கத் தயங்காதீர்கள்.

6. இணையம் சார்ந்த சமாச்சாரங்களெனில் அந்தத் தளம் எங்கிருந்து இயங்குகிறது, கூகிள் தேடலில் அந்தத் தளம் லிஸ்ட் ஆகிறதா என்பதையெல்லாம் கண்டறியுங்கள். பொதுவான மின்னஞ்சல்களான யாகூ, கூகிள், ஜிமெயில் போன்றவை அல்வா பார்ட்டிகள் பயன்படுத்துவது!

7. சஞ்சலம்தான் முதல் எதிரி. "ஒருவேளை உண்மையாய் இருந்தால் செம பணமாச்சே!" என ஒரு வினாடி சஞ்சலப்பட்டால் காரியம் கெட்டு விடும்.

8. உங்கள் கிரெடிட் கார்ட், வங்கி போன்றவற்றின் எண்களை எப்போதும் கைவசம் வைத்திருங்கள். கிரெடிட் கார்ட் தொலைந்து போனால் உடனடியாக கஸ்டமர் சர்வீஸுக்குப் போன் செய்து கார்டை தடை செய்யலாம். அதைப் பின்னர் யாரும் பயன்படுத்த முடியாது.

9. ஒரு மின்னஞ்சல் கணக்கைத் தனியாக வைத்திருங்கள். அதை வைத்தே உங்கள் முக்கியமான தகவல் பரிமாற்றங்களைச் செய்யுங்கள். பொதுவான இணையத் தளங்கள், குழுக்கள், வலைப்பூக்கள் போன்றவற்றுக்கு வேறு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்.

10. ஆன்லைன் குலுக்கல்கள், போட்டிகள் போன்றவற்றிலெல்லாம் கலந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. உங்களை சிங்கப்பூருக்கு அனுப்புகிறேன் என ஆசை காட்டுபவற்றை நிராகரியுங்கள்.

11. உங்கள் வங்கிக் கணக்கு எண், செக் புக், ஸ்டேட்மெண்ட், பணம் எடுத்த ரசீதுகள், கட்டிய ரசீதுகள், இது போன்ற அத்தனையும் ஓரிடத்தில் பத்திரமாக வைத்திருங்கள். தேவை தீர்ந்ததும் கிழித்து விடுங்கள்.

12. ஏடிஎம் கார்டையும், பின் நம்பரையும் இரண்டு வேறு வேறு இடங்களில் சேமித்து வையுங்கள். பாஸ்வேர்ட்கள் எல்லாம் கடினமானதாக, யூகிக்க முடியாததாக, நீங்கள் மறக்காததாக இருக்க வேண்டும்.

13. பணம் கொடுத்து கம்ப்யூட்டர் வாங்கினால் தயங்காமல் நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருளையும் அதில் நிறுவுங்கள்.

14. ஆன்லைனில் ரிஜிஸ்டர் செய்து, ஆன்லைனிலேயே படித்து, ஆன்லைனிலேயே சர்டிபிகேட் தரும் பல்கலைக் கழகங்களில் போலிகளும் இருக்கின்றன. உஷார்! பட்டம் வேண்டுமென்றால் நல்ல பல்கலைக்கழகங்களை நாடுங்கள். குறுக்கு வழிப் பட்டத்தினால் பணம்தான் வேஸ்ட்!

15. ரொம்ப இளகிய மனசுக்காரராய் இருந்தாலும் இணையத்தில் உதவிப் பணம் அனுப்பும் முன் யோசியுங்கள். உண்மையான நேர்மையான நிறுவனங்களை மட்டும் கண்டறிந்து கொடுங்கள். நேரில் சென்று ஆராய்ந்து பின் வழங்குவதை விட சிறப்பானது வேறில்லை!

*****

போபால் விஷ வாயுவின் ஒரு பாடப்படாத ஹீரோ!

1984, டிசம்பர் 2 அன்றைய இரவு. போபால் யூனியன் கார்பைட் பூச்சி மருந்து தொழிற்சாலைக்கு அருகில்இருந்த ரயில்வே ஸ்டேஷனில் விஷ வாயுத் தாக்கம் தெரிந்தது. அந்த ரயில் நிலையத் துணை அதிகாரியாக இருந்த குலாம் தஸ்தகீருக்கு நடக்கப் போகும் விபரீதம் புரிந்தது. ஆனால் அவர் தன் இடத்தை விட்டுப் பயந்து ஓடவில்லை. உடனடியாக போபாலுக்கு வரும் எல்லா ரயில்களையும் நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

கோரக்பூர் – கான்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் அந்த ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. அது இன்னும் 20 நிமிஷ நேரத்தில் அங்கிருந்து கிளம்பவேண்டும். ரயில்வே விதிகளின் படி, புறப்பட வேண்டிய நேரத்திற்கு முன்னால் அது கிளம்ப முடியாது. ஆனால், தஸ்தகீர் எல்லா விதிகளையும் மீறி அடுத்தடுத்து உள்ள ஸ்டேஷன்களுக்கு அறிவித்து 20 நிமிஷங்களுக்கு முன்பாகவே அந்த ரயிலைப் புறப்படச் செய்தார். பல உயிர்களைக் காக்கக் கூடிய இந்த முடிவை எடுத்ததனால் பயணிகள் தப்பினர். விஷ வாயுவின் தாக்கம் அதிகரித்ததால் அவரால் நிற்கவோ, பேசவோ, மூச்சு விடவோ முடியவில்லை.

எந்த மேலதிகாரியின் உத்தரவுக்கும் காத்திராமல், தன் உயிரையும் பொருட்படுத்தாமல், பல உயிர்களைக் காப்பாற்றிய தஸ்தகீர், பின்பு தன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 19 ஆண்டுகள் தொடர்ந்து பல மருத்துவமனைகளில் பலமுறை சிகிச்சை பெற்றும் குணமாகாமலேயே இறுதியில் மரணமடைந்தார். மெதில் ஐசோ சயனைட் என்ற விஷ வாயுவின் நேரடித் தாக்குதல் அவரை மரணத்தில் ஆழ்த்தி விட்டது. தன்னுயிர் தந்து மன்னுயிர் காத்த பாடப்படாத ஹீரோக்களில் ஒருவர் தஸ்தகீர்!

*****

எப்படி முடியும்?

கவலையுடன் இருந்த ஒரு அரசியல்வாதியை அவர் நண்பர் கேட்டார். "ஏன் ரொம்பக் கவலையா இருக்கீங்க?"

"என் உறவுக்காரன் ஒருவன் உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கான்."

"பின்னே! நீங்க போய்ப் பார்க்க வேண்டியதுதானே?"

"முடியாதே! அவன் வேறு கட்சியிலே இல்ல இருக்கான்?"

*****

About The Author

2 Comments

  1. gomathi mylraj

    பேராசை பெருநஷ்டம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.குலாம் தஸ்தகீர்-இவரை போல் காண்பது அரிது.

  2. S.Vaanambadi

    உண்மையில் மிக பயனுள்ள ஒன்று. நான் இதை 15 முறைகளூக்கு மேல் படித்துவிட்டேன். மேலும் படிப்பேன். அதை நான் அனிச்சையாக செயல்படுத்தும் வரை.

    நன்றி

    வானம்பாடி

Comments are closed.