கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு வலிமை!

இரண்டு சிறுவர்கள் ஒரு மரத்தின் உயரத்தில் கிளைகளைப் பிடித்துத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள். கீழே நின்று அதைக் கவனித்துக் கொண்டிருந்த அவர்களது தந்தையர்களில் ஒருவர் “கிளைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொள்” என்றார். இன்னொரு சிறுவனின் தந்தையோ, “ஜாக்கிரதை, கீழே விழுந்துவிடாதே” என்று இரைந்து குரல் கொடுத்தார். சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு சிறுவன் அந்த 30 அடி மரக் கிளையிலிருந்து தரையில் முறிந்த கிளையோடு விழுந்துவிட்டான்.
கீழே விழுந்துவிடாதே என்று சொன்ன தந்தையின் மகன்தான் விழுந்த சிறுவன்!

காரணம்: அவனுடைய தந்தை, ‘கீழே விழுந்து விடாதே’ என்று சொன்னதும் அவனுக்கு உடனே தான் விழுந்து விடுவதுபோல ஒரு எதிர்மறையான எண்ணம்தான் மனதில் தோன்றியது. நல்ல எண்ணங்கள் இருந்தாலும் கூட நாம் சொல்கின்ற வார்த்தைகள் மூலம் அவற்றை ஆக்கப்பூர்வமாக புரிய வைக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு மாணவனிடம் “நீ தொலைக்காட்சி பார்ப்பதில் அதிக நேரம் செலவழிக்கக் கூடாது” என்று கண்டிப்பாகச் சொன்னால் அவன் இன்னமும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பதில் செலவிட நேரலாம்.

அதற்குப் பதிலாக “தொலைக்காட்சி அதிக நேரம் பார்ப்பது அறிவை மங்க வைத்து விடுகிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீ கூட தொலைக்காட்சிப் பெட்டியை சற்று நேரம் மூடி வைத்துவிட்டு ஒரு நல்ல புத்தகத்தை அடிக்கடி படிக்கலாமே” என்று சொல்வது நல்ல பயனை அளிக்குமாம்.

(‘Disorder in the American courts’ என்ற நூலிலிருந்து)

*****

நன்றி மறவாத நாமக்கல் மாணவர்கள்!

வீடோ சிறியதுதான்! 1200 சதுர அடி அளவுதான்! ஆனால் அளவிட முடியாத அன்பால் அந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. அதன் வண்ணச் சுவர்கள் ஒய்வு பெற்று வறுமையில் வாடிய தங்களின் தமிழ் ஆசிரியருக்கு அவரது பழைய மாணவர்கள் காட்டிய நன்றியாலேயே பூசப்பட்டிருக்கின்றன.

முப்பது ஆண்டு காலமாக – 1950லிருந்து 1984 வரை – தமிழ் ஆசிரியர் சோபல்லபுரம் வெங்கட்டராமன் அவர்கள் தனது மாணவர்களுக்கு தனக்கே உரிய இனிய நடையில் தமிழ்ச் செய்யுளையும், உரைநடையையும் கனிவோடு போதித்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சில மாணவர்கள் அவரைக் காணச் சென்றபோது அதிர்ச்சி அடைந்தனர். 83 வயதான அவர் ஒரு பழைய மழைநீர் ஒழுகும் வாடகை வீட்டில் விதவையாகி விட்ட தன் மகளுடனும் வயதான தன் மனைவியுடனும் கடன் சுமையோடு வாழ்வதைப் பார்த்து அதிர்ந்தனர்.

அந்தப் பழைய மாணவர்கள் பலர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், புகழ் பெற்ற மருத்துவர்களாகவும், தொழில் நிபுணர்களாகவும் பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்கள். அவர்களில் சுமார் 250 மாணவர்கள் சேர்ந்து அவருக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குருசாமிபாளையத்தில் “குரு நிவாஸ்” என்ற பெயரில் 10 லட்சம் மதிப்புள்ள அழகான ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

“1950-களில் எங்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்திருந்தாலும் இன்றும் அது எங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கிறது” என்று அவரிடம் படித்த ஒரு அதிகாரி கூறுகிறார்.

“நான் எந்த உதவியையும் என் மாணவர்களிடம் கேட்கவில்லை. என்னுடைய பிரச்சினைகளையும் நான் அவர்களிடம் சொல்லவில்லை. அவர்களாகவே முன்வந்து எனக்கு இந்த வீட்டைக் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் அன்பு என்னை நெகிழ வைக்கிறது!” என்று கூறுகிறார் சோபல்லபுரம் வெங்கடராமன்.

பெற்ற பிள்ளைகள் சிலர், பெற்றோரையே முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கும் இந்தக் காலத்தில், இந்த மாணவர்களின் மனித நேயத்திற்கும், நன்றி உணர்ச்சிக்கும் ஒரு ஜே போடலாமே!

*****
காதல் பழசு – என்றும் புதுசு!

கி.மு 2037-2029 ஆண்டுகளில் ஆண்ட சுமேரிய அரசர் ‘ஷு சின்’ என்பவருக்கு அவர் காதலி பாடிய கவிதை ஒன்றுதான் மிகவும் புராதனமான காதல் பாட்டென்று தொல்பொருள் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்தக் கவிதை ஒரு செங்கல்லில் எழுதப்பட்டிருந்ததாம். எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சுமேரியர்களின் காலத்தில்தான், இந்தக் கவிதை எழுதிப் பாடப்பட்டிருக்க வேண்டும் என்பது ஆய்வு.

அந்தக் கவிதையிலிருந்து :

“என் இதயத்திற்கினிய காதலனே
எத்தனை இனியது உன் அழகு
தேனைப் போல!

என் சிங்கமே,
இதயத்திற்கினியவனே
எத்தனை இனியது உன் அழகு
தேனைப் போல!”

*****

நபிகள் நாயகம் நடந்து வரும்போது, தினமும் ஒரு வீட்டின் மாடியிலிருந்து ஒரு பெண்மணி அவர் மீது குப்பையைக் கொட்டுவாள். ஆனால் நபிகள் நாயகம் இதைப் பொருட்படுத்தாமல் குப்பையை அகற்றி விட்டு குளித்து தூய்மைப்படுத்திக் கொள்வாராம். இப்படி ஒராண்டு காலம் தினம் நடந்து வந்தது. அதன் பின் ஒரு நாள் நபிகள் நாயகம் அந்த வழியாக வரும்போது அந்த வீட்டிலிருந்து குப்பை விழவில்லை.

நபிகள் அந்த வீட்டின் மாடிக்குச் செல்ல, அங்கு ஒரு பெண்மணி மிகவும் உடல் நலமின்றி முனகிக்கொண்டு படுத்திருப்பதைக் கண்டார். உடன் அவருக்கு மருத்துவ வசதி அளித்து பணிவிடைகள் செய்து அவர் உடல் நலம் பெறும் வரை கவனித்து இன்னா செய்தாரை ஒறுத்து அவர் நாண நன்னயம் செய்தார் நபிகள் நாயகம்!

*****

ரசனை

கொஞ்சமும்
எதிர்பார்த்திருக்கவில்லை
தேனீர்க் குவளையை
வைக்கும் ஸ்டாண்டாக
ஒரு கவிதைப் புத்தகத்தை
வைத்திருப்பார்
அந்தப் புத்தகக் கடைக்காரர்
என்று!

(நன்றி : நவீன விருட்சம்)

About The Author

3 Comments

  1. P.Balakrishnan

    குரு சீடர்கள் உறவு எத்தகைய மகத்தானது என்பதை இக்கால ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உணர்த்துவதற்கு இந்த நிகழ்ச்சியை
    எடுத்துக் காட்டலாம்.

  2. SubhasriSriram, Bahrain

    ஒவ்வொரு ஆசிரியர் தின நாளில் நான் ஒன்றாவது வகுப்பு படித்த ஆசிரியரில் இருந்து இன்று வரை பல பேர் வழிகாட்டியாக உள்ள அத்தனை ஆசிரியர்,ஆசிரியைகளை மானசீகமாக நினைத்து அவர்களுக்காக ப்ரார்த்தனை செய்வேன். உண்மையிலேயே எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான். நாம் கடந்து வந்த பாதையை ஒவ்வொரு ஆசிரியர்தினத்தில் திரும்பிப்பார்த்தால், ஏதாவது வகையில் ஒரு ஆசிரியராவது நம் மனத்தின் ஊடே பயணம் செய்து கொண்டு இருப்பார்.

  3. m.sengodan

    இது மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வு.மாணவர்களின் பக்தி பாராட்டதக்கது.

Comments are closed.