கிளியோபாட்ரா (30)

பிலிப்பி போர்க்களத்தின் இன்னொரு பகுதியில் ஆண்டனியின் படைவீரர்கள் தங்களுக்குக் கிடைத்த செய்தியின் காரணத்தால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போய்க்கொண்டு இருந்தனர். ஆம்… புரூட்டஸ் பிடிபட்டுவிட்டான் என்பதே அந்தச் செய்தி.
பகல் நேரம் முடிந்து, மாலை துவங்கியதால் போர் நிறுத்தப்பட்டு வீரர்கள் அனைவரும் ஓய்வெடுக்கச் சென்றனர். கைது செய்யப்பட்ட புரூட்டஸை, அவசரப்பட்டு கொன்றுவிடக் கூடாது என்று கருதி சிறைப்பிடித்து வைத்திருந்தனர்.
ஓய்வெடுக்க வந்த ஆண்டனியிடம் புரூட்டஸ் கைது செய்யப்பட்ட தகவலை கூறினார்கள். அதைக் கேட்ட ஆண்டனிக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"என்னது… இவ்வளவு சீக்கிரத்தில் புரூட்டஸ் கைது செய்யப்பட்டுவிட்டானா? என்னால் நம்பவே முடியவில்லையே…"

"ஆமாம் தளபதியாரே! போர்க்களத்தில் அவன் தன்னை புரூட்டஸ் என்றுதான் கூறினான்" – வீரன் ஒருவன் கூறினான்.

"சரி… இப்போது அவன் எங்கே?" என்று ஆண்டனி கேட்க, அவனை புரூட்டஸ் சிறை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான் அந்தப் படைவீரன்.

அங்கே புரூட்டஸ் என்று அடையாளம் காட்டப்பட்டவனைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ச்சியானான் ஆண்டனி. காரணம், அங்கே புரூட்டஸ் என்ற பெயரில் இன்னொரு வீரன் இருந்தான்

"இவன் புரூட்டஸ் இல்லை. ஆனாலும், புரூட்டசுக்கு சளைத்தவன் இல்லை என்றுதான் கருதுகிறேன். அதனால், இவனை எதிரியாக நடத்தாமல் நண்பனாக நடத்துங்கள். உண்மையான புரூட்டஸ் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்று பார்த்து வந்து சொல்லுங்கள்…" என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான் ஆண்டனி

புரூட்டஸ் படையின் போர்க்களம் –

முந்தைய நாள் இரவு சரியாக தூக்கம் வராததால் கண்கள் சிவந்துபோய் இருந்தான் புரூட்டஸ். காரணம், கொலை செய்யப்பட்ட ஜூலியஸ் சீஸர் அவனது கனவில் பேயாக வந்து அச்சுறுத்தியதுதான். இதுபற்றி தினமும் போர்க்களத்தில் நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டு வந்தான் அவன். ஆனால், அன்று என்னவோ அதன் தாக்கம் அவனிடம் நிறையவே தெரிந்தது

போதாக்குறைக்கு, தனது படை வீரர்களின் எண்ணிக்கை குறைந்து போனதும், வேறு வீரர்களை உடனடியாக திரட்ட முடியாததும் அவனை பயம் கொள்ளச் செய்தது. அதனால், தோல்வி அவன் கண்முன் நிழலாடியது

திடீரென்று என்ன நினைத்தானோ, தனது நம்பிக்கைக்குரிய வீரன் கிளைட்டஸ் என்பவனை அழைத்தான் புரூட்டஸ்.

"கிளைட்டஸ், நான் சொல்வதை நீ நிச்சயம் செய்வாய் என்ற நம்பிக்கையோடு இதை உன்னிடம் சொல்கிறேன்".

"கண்டிப்பாக செய்கிறேன், புரூட்டஸ்…" என்ற கிளைட்டசின் காதுகளில் எதையோ கிசுகிசுத்தான் புரூட்டஸ். அடுத்த நொடியே ஆவேசமானான் அவன்.

"என்ன சொல்கிறீர்கள், புரூட்டஸ்? இப்படியொரு காரியத்தை நான் உங்களுக்கு செய்ய வேண்டுமா? என்னால் முடியவே முடியாது. ஏன் இப்படியொரு முடிவை எடுக்கிறீர்கள்? தோல்வி பயமா?"

"அப்படியில்லை என் நண்பனே… என் மரணம் என் கண்முன்னே தெரிகிறது".

"என்ன சொல்ல வருகிறீர்கள்.."

"ஆமாம்… இறந்துபோன சீஸரின் ஆவி என்னைப் பாடாய் படுத்தி வருகிறது. நேற்று மீண்டும் தோன்றி என்னைப் பயமுறுத்திவிட்டது. என் முடிவு நெருங்கிவிட்டது என்றே உணர்கிறேன்".

"அதற்காக, உங்களை நான் கொல்ல வேண்டுமா? காஷியஸ் செய்த தவற்றை ஏன் நீங்களும் திரும்பவும் செய்கிறீர்கள்?"

"என் முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். உன்னால் முடியவில்லை என்றால் இங்கிருந்து சென்றுவிடு…" என்று சட்டென்று கோபம் கொண்டான் புரூட்டஸ்.

கிளைட்டஸ் அங்கிருந்து வெளியேற… தனது இறுதி முடிவை இன்னொரு நண்பன் ஸ்ட்ராட்டோவிடம் கூறச் சென்றான் புரூட்டஸ்.

அப்போது போர் துவங்கிவிட்டது என்பதை உணர்த்தும் போர்ப்பறை ஒலித்தது. அதன் ஒலி புரூட்டஸை இன்னும் பயம் கொள்ளச் செய்தது.

சற்று நேரத்திற்கு முன்பு அங்கிருந்து வெளியேறிய கிளைட்டஸ் பதற்றமாக திரும்பினான்.

"புரூட்டஸ்! நீங்கள் இப்போது இங்கே இருக்க வேண்டாம். தயவு செய்து தப்பித்து ஓடிவிடுங்கள். எதிரிகளின் பெரும் படை நம்மை நோக்கி வருகிறது. அவர்களை நம் சிறிய படையால் ஒன்றும் செய்துவிட முடியாது. அதனால் தப்பித்து விடுங்கள்…" என்று கூறிவிட்டு, உயிர் பிழைக்கத் தப்பித்து ஓடினான். அங்கிருந்து வீரர்களும் புரூட்டசின் உத்தரவைக்கூட எதிர்பார்க்காமல் உயிர்த் தப்பிக்க ஓட்டம் பிடித்தனர்.

இதைக்கண்ட புரூட்டஸ், தனது மரணத்தை உடனடியாக வரவேற்கத் தயாரானான். நண்பன் ஸ்ட்ராட்டோவைப் பார்த்தான்.

"நண்பா! நான் உங்கள் எல்லோரிடமும் இருந்து விடைபெறும் நேரம் வந்துவிட்டது. அகஸ்டஸும், ஆண்டனியும் இன்று பெற்றுள்ள வெற்றியைவிட எனது தோல்வியே பின்னாளில் பேசப்படும்".

"ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்?"

"என் மரணத்தை உன் மூலம் வரவேற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்".

"ஏன் இப்படியொரு பாவச் செயலை செய்யச் சொல்கிறீர்கள்?"

"நீ இப்போது அதைச் செய்துதான் ஆகவேண்டும். இந்த ஒரு செயலின் மூலம் நீயும் என்னோடு சேர்ந்து புகழ்பெறப் போகிறாய்".

"சரி… உங்கள் விருப்பத்திற்காக அப்படியொருச் செயலைச் செய்ய சம்மதிக்கிறேன்…" என்றான் ஸ்ட்ராட்டோ

அடுத்த நொடியே புரூட்டஸ் கொடுத்த கூரிய வாளைத் தனது கைகளால் உறுதியாக பிடித்துக்கொண்டான் ஸ்ட்ராட்டோ. முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

"சீஸர்… உன் பழி இப்போது தீரப் போகிறது. என்னை நானே கொல்லும் இந்த விருப்பத்தில் பாதி அளவு விருப்பத்தோடு கூட நான் உன்னைக் கொல்லவில்லை…" என்று கூறியபடியே, ஸ்ட்ராடோ பிடித்திருந்த வாளின் மீது பாய்ந்தான் புரூட்டஸ். அடுத்த நொடியே உடல் வெட்டுபட்டு உயிர் துறந்தான்

எதிரியாக இருந்தாலும் மரியாதையோடு புரூட்டஸின் உடலை அடக்கம் செய்தார் அகஸ்டஸ் சீஸர்.

(இன்னும் வருவாள்…)

=

About The Author