கிளியோபாட்ரா (50)

எகிப்தின் கொலைக்களக்கூடத்தில் கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டதாக தான் அறிந்த செய்தியில் உண்மை இல்லை.. அவள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள் என்பதை அறிந்த ஆண்டனிக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் தற்கொலை முயற்சியின் விளைவாக வெளியேறிக் கொண்டிருந்த ரத்தம் அவனை பேச விடாமல் பலவீனப்படுத்தியது.

"அரசே! தாங்கள் ஏதோ கேட்க வருகிறீர்கள்? அதைத் தெளிவாகக் கேளுங்கள். தங்களது உள்ளக் குமுறலை எங்களால் கேட்க முடியாமல் போனால் வரலாறு எங்களை மன்னிக்காது".

"கிளியோபாட்ரா தற்கொலை செய்ததாக தகவல் பரப்பியது யார்? எதற்காக அவள் இப்படியொரு காரியத்திற்குத் துணிந்தாள்?" திணறியபடி கேட்டான் ஆண்டனி.

"சொல்கிறேன் அரசே! அரசியாரின் நல்ல நோக்கத்திற்காக இப்படி சொல்லப்பட்டதில் இதுபோன்று விதி விளையாடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தோழியர் கொடுத்த யோசனையின் காரணமாகவேதான் நமது அரசி இப்படி கூறச் சொல்லி இருக்கிறார்".

"ஏன்…?"

"ஆக்டேவியனுடன் சேர்ந்து நமது அரசி சதி செய்து விட்டதாக தாங்கள் அவர் மீது கோபம் கொண்டீர்கள்.
தாங்கள் அவ்வாறு எண்ணியதால், தங்களது அர்த்தமற்ற கோபத்தைத் தணிக்க வழி தெரியாத சூழ்நிலையில், தங்களது கோபம் உண்மைதானா என்பதைச் சோதிக்க அவ்வாறு தகவல் அனுப்பி இருக்கிறார். இதற்கு முழுக்க முழுக்கக் காரணம் அவர் அல்ல. அவரது தோழியர் கொடுத்த யோசனைதான்!

"சரி… நான் எடுத்த இந்த தவறான முடிவு பற்றி என் அன்பான கிளியோபாட்ராவுக்குத் தகவல் சொல்லிவிட்டீர்களா?"

"ஆமாம் அரசே! தங்களின் நிலையைப் பார்த்த மாத்திரத்தில் இரு வீரர்கள் நமது அரசியைப் பார்க்கச் சென்று விட்டார்கள்…" என்ற ஆண்டனியின் வீரர்கள், ஆண்டனியின் உடலில் பாய்ந்திருந்த கத்தியை அப்புறப்படுத்தி, அவனுக்கு அவசரமாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். கிளியோபாட்ராவிடம் தன்னை அழைத்துச் செல்லுமாறு ஆண்டனி வேண்ட, உடனடியாக அவனைத் தூக்கிச் சென்றனர்.

இதற்கிடையில் கொலைக்களக்கூடத்தின் மேல்மாடத்தில் பதுங்கியிருந்த கிளியோபாட்ரா, ஆண்டனிக்கு என்ன ஆயிற்றோ.. என்கிற பதற்றத்தில் பரிதவித்தாள். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆண்டனியை வீரர்கள் தூக்கி வந்ததைப் பார்த்த அவளது கண்கள் தன்னை மறந்து கண்ணீர் மழையைச் சொரிந்தன. கிளியோபாட்ரா இருந்த மேல் மாடத்திற்கு ஆண்டனியை கொண்டு வந்து அமர வைத்தனர் வீரர்கள்.

"அய்யோ… மாவீரரான நீங்கள் இப்படியொரு முடிவை எடுப்பீர்கள் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லையே… நான் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்யப் போகிறேன் என்றே தெரியவில்லையே… அன்பான கணவனின் சாவுக்கு இந்தக் கிளியோபாட்ராவே காரணமாகிவிட்டாள் என்று என்னை வரலாறு பழிக்குமே… என்னை மன்னித்து விடுங்கள் ஆண்டனி!" என்று புலம்பினாள் கிளியோபாட்ரா.

"அவசரப்படாதே அன்பே! இப்படியொரு முடிவு என்னோடு போகட்டும். நீயாவது தப்பித்துக் கொள்".

"உயிர் பிரியும் நேரத்தில் கூட எனக்காகப் பரிந்து பேசுகிறீர்களே… உங்களது கோபத்தை வைத்து, என் மீதான உங்களது அன்பை சோதித்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று இப்போதுதான் புரிகிறது".

"இப்போது அதற்காக வருந்தி எந்தப் பயனும் இல்லை. இப்போது நான் சொல்வதைக் கேட்பாயா? இல்லை… கேட்டுதான் ஆகவேண்டும்".

"சொல்லுங்கள் ஆண்டனி. அப்படியே கேட்கிறேன்…"

"ஆக்டேவியன் மிக மிக மோசமானவன். நமது தோல்வியால் வெற்றிக்களிப்பில் உள்ள அவன் உன்னைப் பார்த்துவிட்டால் சும்மா விட மாட்டான். உனது மானத்திற்கும் அவனிடம் உத்தரவாதம் கிடைக்காது. அதனால், அவனிடம் உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு சமாதானமாக சென்று விடு. அப்போதுதான் உனது மானமும் காக்கப்படும்; உனக்குரிய பாதுகாப்பும் கிடைக்கும். ஆக்டேவியனின் படையில் அவனது நண்பன் புரொக்கியூலிஸ் மட்டுமே நல்லவன். அவன் சொன்னால் மாத்திரம் நம்பு…" என்ற ஆண்டனியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

நிரந்தர மயக்க நிலைக்குச் சென்ற அவனது உயிரும் நிரந்தரமாக பிரிந்தது. ஆண்டனி இறந்துவிட்டான் என்பதை அறிந்த கிளியோபாட்ரா ஓ..வென கத்திக் கொண்டே மயங்கி சரிந்தாள்.

ஆக்டேவியனுக்குத் தெரியாமல் இப்படி எல்லாமே முடிந்துபோய் இருக்க, அவன் மட்டும் ஆண்டனியைப் பிடிக்க வியூகம் அமைத்துக் கொண்டிருந்தான். அப்போது ரத்தக்கறை படிந்த கத்தியுடன் வந்து நின்றான் ஆண்டனியின் வீரன் ஒருவன்.

அவனைக் கண்ட ஆக்டேவியன் பரபரப்பானான். "நீ யார்? உனக்கு இங்கே என்ன வேலை? ரத்தக்கறை படிந்த கத்தியுடன் வந்திருக்கிறாயே?"

"நான் மாவீரர் ஆண்டனியின் வீரன். இப்போது அந்த மாவீரன் உயிரோடு இல்லை".

"ஏ.. வீரனே… என்ன சொல்கிறாய்?" பதற்றம் கலந்த ஆர்வத்தோடு கேட்டான் ஆக்டேவியன்.

"ஆமாம்… இளைய சீஸர் அவர்களே! ஆண்டனி மறைந்துவிட்டார். இந்தக் கத்திதான் அவரது உயிரைப் பறித்துவிட்டது. அவரை உங்கள் படை வீழ்த்தவில்லை. அவர் தன்னைத்தானே வீழ்த்திக் கொண்டார்".

"அந்தோ பரிதாபம்! என்னுடன் நெருங்கி பழகியவர், என்னோடு ரோமாபுரிக்காக பல்வேறு முடிவுகள் எடுத்தவர் என்கிற முறையில் அந்த மாவீரரின் இத்தகைய முடிவுக்காக வருந்துகிறேன். ஆண்டனியின் மரணத்திற்காக இந்த இளைய சீஸர் வருந்தவில்லை என்றால் அந்தக் கடவுளே மன்னிக்க மாட்டார்" என்றான், ஆண்டனி மறைவின் தொடர்ச்சியாக ரோமாபுரியின் மாபெரும் பேரரசர் அகஸ்டஸ் சீஸர் ஆன ஆக்டேவியன். ஆண்டனியின் மறைவை ஆக்டேவியன் ஏற்றுக்கொண்ட விதத்தை ஆழமாகப் பதிவு செய்கிறார் ஷேக்ஸ்பியர்.

"ஆண்டனி… இதற்காகவா உங்களை நான் பின்தொடர்ந்து வந்தேன்? ஒரு நோயைத் தீர்ப்பதற்கு அறுவை சிகிச்சை தேவைதான். எனது வீழ்ச்சியை நீங்களோ அல்லது உங்களது வீழ்ச்சியை நானோ பார்க்க வேண்டும் என்பது விதி. இந்த உலகத்தில் நாம் இருவரும் சமாதானமாக இணைந்து வாழ முடியவில்லை. ஆனாலும், உங்களது மறைவுக்காக நான் கண்ணீர் வடிக்கிறேன். உங்களை எனது சகோதரராகவே பார்க்கிறேன். எனது அரசில் பங்காளி, போர்க்களத்தில் நண்பன் என்று தாங்கள் இருந்தாலும், அந்த விதி நம் இருவரையும் இணைந்து பணியாற்ற அனுமதிக்கவில்லை" என்று ஆக்டேவியனின் அனுதாபத்தை தெரிவிக்கிறார் ஷேக்ஸ்பியர்.

ஆண்டனியின் மறைவுக்காக ஆக்டேவியன் வருந்தி நின்று கொண்டிருந்த நேரத்தில் கிளியோபாட்ராவின் வீரன் ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான்.

"எங்கள் அரசி எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தங்கியிருக்கிறார். அவர், தங்களது வெற்றியை ஏற்றுக் கொள்கிறார். தாங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதை ஏற்கவும் அவர் தயாராக இருக்கிறார்" என்றான் அந்த வீரன்.

வெற்றிக்கனியை பறித்துவிட்ட ஆக்டேவியன் கிளியோபாட்ராவைச் சந்திக்க தயாரானான். அதற்காக தனது நண்பனான புரொக்கியூலிஸ் என்பவனை அவசரமாக அழைத்தான்.

"நண்பா! ஆண்டனி தற்கொலை செய்து கொண்டதுபோல் கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து கொள்ளலாம். ஒருவேளை அவள் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டால், அது நமக்கு மகத்தான வெற்றி அல்ல. ரோமில் நாம் விரைவில் நடத்தும் வெற்றி ஊர்வலத்தில் அவளது காட்சிதான் மகத்தானதாக இருக்கப் போகிறது. அதனால் ரோமாபுரியில் நமது வெற்றி விழா முடியும் வரை அவளது உயிர் எந்தச் சூழ்நிலையிலும் போய்விடக் கூடாது" என்று கூறிய ஆக்டேவியன், கிளியோபாட்ராவைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி அவனுக்குக் கட்டளையிட்டான்.

(இன்னும் வருவாள்…)

About The Author