கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை – ஒரு உண்மைக் கதை (2)

<<< சென்ற வாரம்

சரியான காரணம் என்னவெனில் ஒரு செய்தி இந்த உலகத்துக்குச் சொல்லப்படும்போது, அந்தச் செய்தி எந்த அளவுக்குப் போய்ச் சேருகிறது என்பது முக்கியம். அதே சமயம் அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும், எப்படிப்பட்ட சூழலில் சொல்லப்படுகிறது என்பதும் மிக முக்கியம். அதே வேளையில் ஒரு செய்தி உண்மையான அனுபவத்தோடும், உணர்வுகளோடும் சொல்லப்படும்போது அதன் வீச்சு பல மடங்கு இரட்டிப்பாகும் என்பதால்தான் கடவுள் என்னைப் போன்ற சிலரை உருவாக்கி எங்கள் மூலமாக இந்த உலகத்துக்குச் சில செய்திகளைச் சொல்கிறார். இது நான் அனுபவித்துணர்ந்த உண்மை. இது வேதனைகள் நிறைந்த அனுபவமாக இருப்பினும், அது தரும் முடிவுகள் இந்த உலகத்துக்குப் பயனுள்ளதாக இருப்பதால் நாங்கள் வேதனைப்படவும் தயாராகவும் இருக்கிறோம். அந்த வேதனை அதிலிருந்து கிடைக்கும் பலன்களால் ஆறிவிடப்போகிறது அவ்வளவுதான். யேசுநாதர் சிலுவையில் அறையப்படவில்லையா? இந்த அனுபவங்கள் தரும் நல்ல பலன் அந்த வேதனைகளையும், வலிகளையும் புனிதப்படுத்திவிடும்.


முதலில் நான் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றுவிடுவேன். நான் சேவை செய்வதற்கு நானே என் சொந்தச் சம்பாத்யத்தில் நிற்பேன். எந்த உதவியையும் நான் பிறரிடமிருந்து எதிர்பாராது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லக்கூட எனக்கென்று ஒரு வாகனமும், அதை நானே ஓட்டும்படியும் அமைத்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளன். பல நிறுவனங்களில் என்னைச் சிறப்புப் பேச்சாளராக அழைத்துப் பேச வைத்திருக்கிறார்கள். எனது வாழ்க்கையின் சுவாரஸ்யங்களையும், சாதனைகளையும், கடந்து வந்த பாதைகளையும் பேசி முடிக்கும்பொழுது அவர்களின் மனதில் இருக்கும் தாழ்வுமனப்பான்மைகள் தரை மட்டமாவதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். பிரமித்துப் போயிருக்கிறேன். என் சொற்பொழிவு இந்த உலகம் முழுதும் ஒலிக்கப்பட வேண்டும். எனது வாழ்க்கை முழுதும் ஏழை, எளிய மக்களுக்கும் மனத்தால் ஊனப்பட்டு, மன அழுத்தத்தால் வாடி, தவறான பாதைகளில், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, எதிர்காலம் இருண்டு நிற்கும் ஒவ்வொருக்கும் நான் சேவை செய்வதற்காகக் காத்திருக்கிறேன். இவைதான் என் கனவு, லட்சியம், ஆத்ம திருப்தி எல்லாமே! நான் பிறந்த பலனை முழுமையாக உணர்கிறேன். இவற்றோடு நான் எழுதிக்கொண்டிருக்கும் கை இல்லை, கால் இல்லை, கவலை இல்லை என்ற நூலை வெற்றிகரமாக இந்த ஆண்டிற்குள் முடித்தும் விடுவேன்.

கடவுளின் படைப்புகள் எப்பொழுதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம் இல்லை வாழ்க்கைதான் நிரந்தரம். நமது வாழ்க்கை என்பது பாலைவனத்தில் பயன்படும் சிறிது நேரச் செருப்புக்கள். அவற்றை பயனுள்ளதாக வாழ்ந்து விடுவோமே! அவமானங்களை, வேதனைகளைத் தூக்கியெறியுங்கள்! நேற்றைய நிகழ்வுகளைச் சந்தித்தவன் நான் இல்லை, அவன் வேறொருவன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் காலை எழும்போது புதிதாகப் பிறந்ததாய் எண்ணிப் புதுப்பயணத்தைத் தொடருங்கள்!

உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை நம்புங்கள்! அதில் கவனம் செலுத்துங்கள்! வெற்றியடைவீர்கள்! என்ன திறமை இருக்கிறதெனத் தேடிப் பார்க்காதீர்கள். உங்கள் திறமையில் நம்பிக்கை வைப்பதைவிடத் தேவையில் நம்பிக்கை வையுங்கள்! அதை எளிதில் அடைவீர்கள்! விரைவில் பெறுவீர்கள்! பிறகு அதுவே திறமையாகவும் மாறிவிடும். நீங்கள் ஏதாவது சாதிக்க நினைத்தால், அதற்காகத்தான் உங்களைக் கடவுள் இங்கே அனுப்பியிருக்கிறார் என்ற நம்புங்கள். அந்த எண்ணம் உங்களுக்குத் தானாக வரவில்லை. அது அவன் ஏற்கனவே எழுதியதுதான். அதனை இன்றே காலம் தாழ்த்தாது செய்துவிடுங்கள்! நாம், காரணமில்லாமல் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்கிறோம். அந்தக் கட்டுப்பாடுகள் உங்களின் வேகத்தைக் குறைக்குமே ஒழிய விவேகத்தை ஏற்படுத்தாது. இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு ஜீவராசியும் சாதிக்கப் பிறந்தவைதான். நானே சாதிக்கத் துணிந்துவிட்ட பின் நீங்கள் மட்டும் ஏன் அமைதியாய் இருக்கிறீர்கள்! உங்களால் முடியும்! நாம் சாதிப்பதற்கு எல்லை என்பது ஒன்றும் இல்லை. அவை நாம் போட்டுக் கொண்டவை. அவற்றைத் தகர்த்தெறியுங்கள்! இதோ ஒரு ஒளிமயமான பாதை உங்கள் கண்முன் தெரிகிறது. இன்றே! இப்பொழுதே புறப்படுங்கள்!! சாதனையாளர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். தொடங்கும்பொழுது எவரும் சாதனையாளனாகத் தொடங்குவதில்லை, தொடங்கியபின் எவரும் சாதனை படைக்கத் தவறியதுமில்லை! பிறகென்ன தாமதம்? தொடங்குங்கள்!! இதோ களம் காத்திருக்கிறது!

நான் இப்படியொரு ஊனமாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன். காரணம் எனது வாழ்க்கையை இந்த உலகத்தோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் எத்தனையோ சகோதர சகோதரிகளை மனதளவில் நல்வழிப்படுத்தியிருக்கிறேன். என் உருவத்தை என்னால் மாற்ற முடியாது. ஆனால் இந்த உலகத்தில் மனதளவில் ஊனப்பட்ட எத்தனையோ பரிதாபத்திற்குரிய என் தோழமைக்குரியவர்களை மாற்றியிருக்கிறேன். மறுவாழ்வு வாழ வைத்திருக்கிறேன். சிலவற்றை மாற்றமுடியாது. அதனால் சிலரையாவது மாற்ற முயல்கிறேன். உதாரணம் என் உருவம். அதை நான் மாற்றமுடியுமா? முடியாது. ஆனால் உங்களை என்னால் மாற்ற முடியும். இதோ! பார்த்தீர்களா? நீங்கள் மாறிவிட்டீர்கள். “கெட்ட நேரமென்ற ஒன்று என்றுமில்லை, நல்லவைகளைத் தொடங்க எல்லாமே நல்லநேரம்தான். இன்றே தொடங்குங்கள்!” உங்களை மறுபடியும் ஒரு மகத்தான பொழுதுகளில் சந்திப்பேன். நன்றி! வாழ்த்துக்கள்!! வணக்கம்!!

About The Author

7 Comments

  1. selvi

    உஙலை நினைக்கும் போது எனக்கு சாதிக்க வென்டும் என்று மனது துடிக்கிறது.
    கன்டிபாக நானும் வாழ்க்கையில் வெற்றி பெருவேன் நன்றி……………….

  2. P.Balakrishnan

    நேற்றைய நிகழ்வுகளைச் சந்தித்தவன் நான் இல்லை;அவன் வேறொருவன் என்று நினைத்து ஒவ்வொரு நாளும் காலை எழும்போது புதிதாகப் பிறந்ததாய் எண்ணிப் புதுப் பயணத்தைத் தொடருங்கள்!” – அருமையான வாசகம். நாள் தோறும் இப்படி நினைத்து நடைபோட்டால் வெற்றிக்கனியை எட்டிப் பறித்துவிடலாம் விரைவில்! -அரிமா இளங்கண்ணன்”

  3. t jeyanathan

    மர்ட்ரவர்கல் என்ன நினைப்பர்கல் என்ரு கவலை விடுவதை விட்டு நி செய் நினைப்பதை இன்ரெ செய். முயர்ச்யை கை விடதெய்

Comments are closed.