சங்கம் காண்போம் (27)

தோழி கலக்கமாக அமர்ந்திருந்தாள். கண்களில் வழியும் நீரைத் துடைத்தபடியே இருந்தாள். யாரோ அவள் தோள்களைப் பற்றியதால் திரும்பினாள். செவிலித்தாய்! துக்கம் அதிகரிக்க செவிலியை அணைத்துக்கொண்டாள்.

"தோழி வருந்தாதே! தலைவிக்கு எந்த ஆபத்தும் இல்லை..கண்கள் விழித்தாள். கொஞ்சம் தண்னீர் குடித்தாள். சரியாகி விடும். வருந்தாதே" என்றாள்.

"நன்றி செவிலியே! நன்றி! நல்ல செய்தியைக் கூறியுள்ளாய்" என்று கைகளைக் கூப்பியவாறு பேசினாள் தோழி.

"அது இருக்கட்டும் தோழி, நிச்சயம் உனக்குத் தெரிந்திருக்கும். தலைவியின் மனதில் என்ன காயங்கள்? ஏன் இப்படி செய்து கொண்டாள்? என்னிடம் கூறக்கூடாதா..?என்னால் முடிந்தால் நான் தீர்த்து வைக்கிறேன்" என்றாள் செவிலி.

"செவிலி உன்னிடம் சொன்னால்தான் என் மனச்சுமையும் குறையும் தலைவியின் வருத்தத்திற்கு மருந்தும் கிடைக்கும்" என்று செவிலியிடம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டாள் தோழி.

நல்ல பண்பும் அறிவும் அழகும் நிறைந்த அத்தலைவனுடன் தலைவி, தோழியின் பரிந்துரையின் பேரில் பழகத் துவங்கினாள். ஆரம்பத்தில் பார்ப்பதற்கும் பேசுவதற்குமே நாணிய தலைவி நாட்கள் செல்லச் செல்ல அவனுடன் சரளமாக பேசவும் பழகவும் ஆரம்பித்திருந்தாள். தினம் தினம் அவனுடைய திருமுக தரிசனத்திற்காக ஏங்கினாள். அது சாத்தியமில்லை என்று தோழி எவ்வளவோ எடுத்து கூறினாலும் மறுத்தாள். பார்த்தல், பேசுதல் என்ற நிலையிலிருந்த தலைவியின் காதல், தலைவனுடன் தனிமையில் சந்திப்பதற்கு ஏங்க ஆரம்பித்திருந்தது. தலைவனை எப்படியாவது தனிமையில் சந்திக்கத் துடித்தாள் தலைவி. தோழிக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் தலைவியின் ஆசையைத் தட்ட முடியாமல் இருவரையும் தனிமையில் சந்திக்க ஏற்பாடு செய்தாள் தோழி! இதற்கு பிறகு தலைவி அமைதியாகி விடுவாள் என்று நம்பினாள்.

ஆனால் ..அவர்களின் தனிமைச் சுகங்கள் அவள் மனதின் விரக தாபத்தை மேலும் மேலும் வளர்ப்பதாகவே இருந்தன. தோழி செய்வதறியாமல் தவித்தாள். காரணம் தலைவிக்கு மூத்த சகோதரி இருக்கின்றாள். அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றனர். அது நல்லபடியாக முடிந்தால்தான் தலைவி பற்றி பேச முடியும். அதற்குள் தலைவி அவசரப்படுகிறாளே என்று வருந்தினாள். அந்த நேரத்தில்தான் தலைவன் தன் நண்பர்களுடன் பொருள் தேடிச் செல்ல திட்டமிட்டிருப்பதாகக் கூறினான். தோழிக்கு நிம்மதியாக இருந்தது. அவன் பொருள் தேடி வருவதற்குள் அக்காவின் திருமணம் முடிந்து விடும். தலைவனிடம் கூறி இவள் திருமணத்தையும் முடித்து விடலாமென்று எண்ணினாள். ஆனால் தலைவியோ.. அழுதாள், ஆர்ப்பாட்டம் செய்தாள். தானும் தலைவனுடன் சென்று விட விரும்புவதாகக் கூறினாள். தோழிதான் ஏதேதோ கூறி சமாதானப்படுத்தினாள்.

தலைவன் பிரிந்து சென்று ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அவனைப் பற்றி ஒரு தகவலும் இல்லை. ஆரம்ப காலங்களில் வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் பொறுத்துக் கொண்ட தலைவிக்கு நாட்கள் செல்லச் செல்ல நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. அதீத ஆசையின் ஏமாற்றத்தை அவளால் மறைத்துக் கொள்ள முடியவில்லை. மற்றவர்களின் மகிழ்ச்சியும் பேச்சும் சிரிப்பும் தலைவிக்கு ஆத்திரமூட்டியது. இந்த சூழ்நிலையில்தான் தலைவியின் சகோதரிக்குத் திருமணம் நடைபெற்றது.

வீட்டின் முதல் திருமணம்! ஒரே கோலாகலமாக இருந்தது. மகிழ்ச்சியான தருணத்தில் உறவினர்கள் கூடுகின்றனர் என்றால் கிண்டலுக்கும் கேலிக்கும் கேட்கவா வேண்டும். மணப்பெண்ணும், மணமகனும் ஒருவரையொருவர் சீண்டி விளையாடுவதும், காதல் பார்வை பார்த்துக் கொள்வதும் என்று ஆனந்தக்கூத்தாக திருமணம் நிறைவடைந்தது. திருமணம் என்பதால் தோழி தலைவியுடனேயே தங்கியிருந்தாள். தலைவியின் கோபத்தையும் வெறுப்பையும் ஏதேதோ பேசி மாற்றிக்கொண்டிருந்தாள்.

திருமணம் முடிந்த இரவு.. மணமக்கள் தனியறைக்குச் சென்று விட்டனர். தனிமையில் நின்றிருந்த தலைவியின் அருகே தோழி வந்தாள். தலைவி உடலின் சூடு தோழியைத் தாக்கியது. பயந்தவாறு “தலைவி” என்று அழைத்தாள். தோழியின் அழைப்பைப் பொருட்படுத்தாமல் தலையில் இருந்த பூக்களைக் கிள்ளிப்போட்டுக் கொண்டிருந்தாள் தலைவி. தோழி மெல்ல அருகில் சென்று "தலைவி..வா உறங்கலாம்.." என்று கைகளைப் பிடித்தாள். வெடுக்கென்று அவள் கைகளைத் தட்டிய தலைவி, "இந்த இரவில் சுழன்று சுழன்று வீசும் காற்று என் மீது படும்போது என் காம நோய் அடங்காமல் சீறி எழுகிறது. அதை அறியாமல் அதோ அங்கே நிம்மதியாக உறங்குகின்றவர்களை என் கோபத்தால் முட்ட வேண்டும் போல் உள்ளது.." என்று பற்களைக் கடித்தவாறு பேசினாள்.

"தலைவியே! அமைதியாக இரு. உன் துன்பத்தை நான் அறிவேன். நாம் உதவியற்ற நிலையில் இருக்கின்றோம்.. வருந்தாதே.. சரியாகி விடும்" என்று சமாதானமாக அறைக்கு அழைத்துச் செல்ல எண்ணினாள் தோழி. ஆனால் தலைவியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"என்ன சொல்கிறாய் தோழி! எத்தனை நாட்கள் பொறுப்பது? நான் உறக்கமில்லாமல் புலம்பித் துடிக்கின்றேன்.. அதோ அங்கே பார்! என் கவலையை அறியாமல் உறங்குகின்றவர்களை ‘ஆ..ஆ!’ என்று வெறிபிடித்து கத்தி எழுப்ப வேண்டு போல் உள்ளது.. ஐயோ! என் செய்வேன்! என் செய்வேன்! என் இளமை கொல்கின்றது" என்று கதறியவள் சட்டென்று கத்தியினால் கை நரம்புகளை வெட்டிக் கொண்டாள்.

கண்ணீர் வழிந்தோட சொல்லி முடித்த தோழி செவிலியை அணைத்துக் கொண்டு அழுதாள். "தோழி வருந்தாதே! தலைவிக்குக் குணமாகி விடும். நான் தாயிடம் பேசுகின்றேன். தலைவனைப் பற்றிய குறிப்புகளை என்னிடம் கொடு. அவன் பெற்றோரைப் பார்த்தும் பேசுகிறேன். எல்லாம் சரியாகி விடும்" என்று ஆறுதல் கூறினாள் செவிலி.

இக்காட்சி குறுந்தொகையில் அமைந்துள்ளது.

தலைவி கூற்று பாலைத் திணை
முட்டு வேன்கொல்?தாக்கு வேன்கொல்?
ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ!ஒல்! எனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவளி அலைப்பஎன்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!
ஒளவையார்
முட்டுவேனா? தாக்குவேனா?
தனி ஒருவளாகி வெறிகொண்டு
ஆ!அ என்று கூவுவேனா?
சுழன்று வீசும் காற்று
என்னை வருத்த
என் காமநோயை அறியாமல்
உறங்கும் இந்த ஊரினை!

About The Author

1 Comment

  1. கீதா

    சங்கப் பாடல்களின் அருமையை சாதாரணரும் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாகவும் சுவையாகவும் வழங்கும் உங்கள் முயற்சி பெரிதும் வரவேற்கத்தக்கது. தொடரட்டும் உங்கள் தமிழ்ச்சேவை. உங்கள் படைப்புகளின் ரசிகையென்பதில் எனக்கு பெருமகிழ்ச்சி.

Comments are closed.