சில்லுனு ஒரு அரட்டை

வணக்கம் நண்பர்களே!

எப்படி இருக்கீங்க? நான் நல்லாருக்கேன்.

போன தடவை அரட்டைக்கு வந்த பின்னூட்டங்களுக்கெல்லாம் பதில் எழுதினா, பாதி நிலாச்சாரலுக்குப் போய்ச் சேரவே இல்லை. என்னோட கணிப்பொறி கோளாறா, இல்லை, இணைய பாதுகாப்பு வளையத்தில் ஏதேனும் தடுக்கப்பட்டதான்னு தெரியலை. அதிலும் நம்ம தொண்டர் படைத் தலைவி ‘கொங்கு நாட்டு சிங்கி’யோட அரட்டைக் கச்சேரிக்கு பதில் ஏதும் எழுதலையேன்னு சிங்கி நினைச்சிருக்கலாம். மன்னிச்சுக்கோங்க சிங்கி.. இப்ப சொல்றேன். உங்க தமிழ்த் தொண்டு வாழ்க! வெளுத்துக் கட்டுங்க!

இந்த வருடத்தில் மழை ரொம்பவே குறைவுதான். தமிழ்நாட்டில் வற்றாத நதின்னு ஏதும் இல்லாதப்போ, பெய்ற மழையைத் தேக்கி வச்சாலே போதும், வறட்சி வராது. அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டியதும் இல்லை.

உதாரணத்துக்கு, மழை நீர் சேகரிப்புத் தொட்டி – அரசாங்கம் எல்லாரையும் கட்டாயப்படுத்தி இந்தத் திட்டத்தை செய்ய வச்சது. 6 அடி பள்ளம் தோண்டி, அதில் தேவையான கல், மண் அடுக்குகளைப் போட்டு வீட்டுக்கு வீடு தொட்டி கட்டச் சொன்னாங்க. தாங்களாவே ஆளமர்த்தி செய்ய முடியாதவங்க அரசாங்கத்துக்கிட்டயே ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தினா, அவங்களே வந்து கட்டிக் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. ஆனால் ஒரு 1000 ரூபாயை மிச்சப்படுத்தறதுக்காக, நம்ம மக்கள் ஒரு அடிக்கு குழி தோண்டி ஒரு உறை(கிணற்று வளையம்)யை மண்ணில் புதைச்சு அரசாங்க அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவினாங்க, எங்க வீட்டில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டிட்டோம்னு. இன்னைக்கு என்ன ஆச்சு, மாசாமாசம் 1000ரூ செலவழிக்கிறாங்க தண்ணி வாங்கறதுக்கு. ஆனால் இந்த அமைப்பை ஒழுங்கா செஞ்சவங்க வீட்டிலெல்லாம் அபரிமிதமா நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டிருக்கு.

கடற்கரையோர வீடுகளோட நிலத்தடி நீரில் உப்புத் தன்மை குறைஞ்சிருக்கு. நண்பர்களே! காலம் இன்னும் கடந்து போகலை. இப்ப கூட இந்த அமைப்பை நம்ம வீடுகளில் செவ்வனே நிறுவலாம். இரண்டே வருடங்களில் உங்க நிலத்தடி நீர் மட்டத்திலயும், உவர்ப்புத் தன்மையிலும் வியத்தகு மாற்றங்களைக் காணலாம். பக்கத்து வீட்டுக்காரன் செய்யலை, எதிர்வீட்டுக்காரன் செய்யலை, நான் மட்டும் எதுக்கு செய்யணும்னு நினைக்காதீங்க. நீங்க நல்லாயிருக்கறதைப் பார்த்து நாளப் பின்ன அவங்களும் செய்வாங்க. காசைப் பார்க்காதீங்க, நம்ம ஆரோக்கியத்தையும், நம்ம வாரிசுகளோட ஆரோக்கியத்தையும் நினைச்சுப் பாருங்க.

நான் வீடுன்னு ஒன்னு வாங்கினா (அது தனி மனையாயிருந்தாலும், பலமாடிக் குடியிருப்பாயிருந்தாலும் சரி), கீழே சொல்லப்பட்டுள்ளவை கண்டிப்பா என் வீட்டில் இருக்கும்:

1. மழைநீர் சேகரிப்பு தொட்டி
2. மூங்கில் செடி (காற்றில் ஈரப்பதத்தை எப்பவும் தக்க வச்சிருக்கும். பூமி சூடாவதைத் தடுப்பதில் இதற்கும் முக்கிய பங்குண்டு). ஒரு மாதத்தில் பல அடிகள் வளரக்கூடிய ஒரு மூங்கில் செடியின் விலை 30ரூதான் – தமிழக அரசு விவசாய அலுவலகத்தில் கிடைக்கும். பெரிய தொட்டிகளில் கூட வளர்க்கலாம்.
3. துளசிச் செடி (காற்றை சுத்தப்படுத்தும் ஆற்றல் மிக்கது. தாஜ்மஹாலைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான துளசிச் செடிகளை நட அரசாங்கம் ஏற்பாடு செய்திருக்கு – தாஜ்மஹால் காற்றில் உள்ள அமிலங்களால் மஞ்சள் நிறமடைவதைத் தடுக்க)
4. அருகம்புல், கீரை வளர்க்க சிறு தொட்டிகள்
5. வேப்பமரம் (தனி மனையாயிருப்பின்)
6. இரு மண் தொட்டிகள் (பூஜ்யக் கழிவுத் திட்டத்தின்படி உரம் தயாரிக்க – எப்படின்னு இங்க சொல்லிருக்கேன் – https://www.nilacharal.com/ocms/log/08170908.asp)
7. சோற்றுக் கற்றாழைச் செடிகள் – குளியலறைத் தண்ணீர் வெளியேறும் இடத்தில் தரையில் ஊன்றும் வசதியிருப்பின் – இச்செடிக்கு சவர்க்காரத் தண்ணீரை (soap water) நல்ல தண்ணீராக மாற்றும் ஆற்றல் உண்டு
8. சூரிய அடுப்பு (கர்நாடகா பெங்களூரில் 4 வருடங்களுக்கு முன்பே சூரிய சக்தி மூலம் தண்ணீரை சூடாக்கும் அமைப்பு அமலுக்கு வந்துடுச்சு. இவ்வமைப்பை வீட்டில் நிறுவியிருப்பவர்களுக்கு, மாதாமாதம் மின் கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தள்ளுபடி கொடுத்திருக்காங்க. தள்ளுபடி கொடுக்காட்டா கூட மின்கட்டணத்தில் நிறைய மிச்சமாயிருக்கும். மின்சாரத்தை எப்படி சேமிக்கிறதுன்னு காயத்ரி தொகுத்து, சிங்கி மொழியாக்கம் செய்த மின்னூலை இலவசமா தரவிறக்கம் செய்ய: https://www.nilacharal.com/download/index.html)

பல லட்சங்களுக்கு வீடு வாங்கும்போது சில ஆயிரங்கள் மேற்சொன்னவைகளுக்காக செலவழிக்கிறது ஒன்னும் பெரிசில்லைங்க. சொல்லப்போனா வைத்தியருக்கு செலவழிக்கிற காசில் எவ்வளவோ மிச்சப்படும். இப்ப இருக்கிற வாடகை வீட்டில் மேற்சொன்னதில் எதெல்லாம் சாத்தியமோ அதெல்லாம் செய்திருக்கேன். நீங்களும் செய்வீங்கதானே?

எல்லாத்தையும் அரசாங்கமே செய்யட்டும்னு எதிர்பார்க்காம நாமும் கொஞ்சம் நம்ம வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பார்த்துக்கிட்டாலே போதும், எத்தனையோ நல்ல மாற்றங்களைக் கொண்டு வரலாம். (ஊருக்கு ஊரார்னு ஒரு திட்டம் மூலமா, தமிழகத்தில் ஒரு கிராமத்தில் (எந்த கிராமம்னு பேர் மறந்துட்டேன்) அரசாங்க உதவியோட, தண்ணித் தொட்டி அமைச்சிருக்காங்க. இது மூலமா 12 கிமீ சுற்றிப் போய் தண்ணி எடுத்துட்டு வந்த நிலை மாறிருக்கு. இத்திட்டத்தைப் பத்தி மேலும் தகவல் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன். இணையத்தில் கண்டுபிடிக்க முடியலை.)

பெண்களே, மருதாணியால் உடல் சூடு குறையும்ங்கறது தெரிந்த தகவல். ஆனால் பெண்களோட மனநிலையை ஒரு சமனத்தில் வைக்கவும் மருதாணி உதவுங்கறது புதுத் தகவல். பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது மருதாணி. அதனாலதான் கிராமப்புறங்களில் வீட்டுக்கு வீடு மருதாணிச் செடி இருக்கும். எல்லா வைபவங்களிலும் பெண்கள் மருதாணி வைப்பாங்க. மருதாணியை தமிழ்நாட்டு வழக்கப்படி, கைவிரல்கள் மேல் குப்பி மாதிரி வைக்கணுங்க. 7,8 மணிநேரமாவது காய விடணும். உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் வைக்கலாம். இதையும் தெரிஞ்சுக்கோங்க – வடநாட்டு முறைப்படி வரையப்படும் மருதாணியால மேற்சொன்ன எந்த பலனும் இல்லை.

எனக்குக் கொஞ்சம் சோம்பேறித்தனம் அதிகம். மின்னஞ்சல் பார்க்கறதுக்கே, இணைய தளம் போகணும், நுழைவுச் சொல்லும், கடவுச் சொல்லும் கொடுக்கணும், அப்புறம் ஒரு 5 நிமிடம் காத்திருக்கணுமேன்னு யோசிப்பேன். என்னை மாதிரி வாழைப்பழ சோம்பேறிகளுக்காகவே, ‘GMAIL’ இந்தச் சேவையை அறிமுகப்படுத்திருக்குன்னு நினைக்கிறேன். இணையதளம் போக வேண்டாம், காத்திருக்கவும் வேண்டாம். இந்த மின்னஞ்சல் அறிவிப்பானை நிறுவிட்டாப் போதும். உங்களுக்கு என்னன்ன மடல் வந்திருக்குன்னு உடனுக்குடன் தெரிஞ்சுக்கலாம். இச்சேவை ‘gmail.com’ மின்னஞ்சல் முகவரி வச்சிருக்கவங்களுக்கு மட்டும்தான். முக்கியக் குறிப்பு: உங்கள் தனிப்பட்ட கணினியில் மட்டும் இதை நிறுவிக்கோங்க. அலுவலகக் கணினியில் நிறுவாதீங்க. ஏன்னா, வேறு யாரும் உங்கள் கணினியை உபயோகப்படுத்தும் பட்சத்தில் உங்கள் மடல்களை அவங்க படிக்க நேரிடலாம்.

http://toolbar.google.com/gmail-helper/notifier_windows.html

இணையத்தில் வந்த ஒரு மின்னஞ்சல் மடல் :

ஏன் திருமண மோதிரத்தை நாலாவது விரலில் அணிவிக்கிறாங்க? இதுக்கு ஒரு செயல் விளக்கம் கொடுத்து விளக்கிருந்தாங்க. கீழே இருக்கற படத்தில் காட்டிருக்க மாதிரி உங்க கைவிரல்களை சேர்த்து வச்சுக்கோங்க. இதே அமைப்பில் வச்சு கட்டை விரல்களை மட்டும் பிரிச்சுப் பாருங்க, பிரியும் – இந்த விரல்கள் நம்ம பெற்றோர்களாம், ஒரு கட்டத்தில் நம்மை விட்டுப் பிரிஞ்சு போய்டுவாங்களாம். ஆள்காட்டி விரல்களைப் பிரிச்சுப் பாருங்க, பிரியும் – இந்த விரல்கள் நம்ம சகோதர சகோதரிகளாம், இவங்களும் பிரியக்கூடிய உறவுகள்தானாம். நடுவிரல் நம்மைக் குறிக்குதாம். அதனால அதை விட்டுடுவோம். (பிரிச்சுப் பார்த்தாலும் பிரச்சினையில்லை, பிரியும்). சுண்டு விரல்களைப் பிரிச்சுப் பாருங்க, பிரியும் – இந்த விரல்கள் நம்ம குழந்தைகளாம், அவங்களும் தங்களுக்குன்னு ஒரு குடும்பம் அமைஞ்சதும் பிரிஞ்சு போய்டுவாங்கதேனே! கடைசியா இந்த நான்காவது விரல்களைப் பிரிச்சுப் பாருங்க… ம்ஹூம் முடியலைதானே? இந்த விரல்கள்தாம் கணவன் மனைவியாம். கடைசிவரை இணைந்திருக்கிற உறவாம். அதனாலதான் இந்த விரல்களில் திருமண மோதிரத்தை அணிவிக்கிறாங்களாம். ம்ம்.. எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் வச்சிருக்காங்கப்பா!!

wedding ring in fourth finger

கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு! திரும்ப புதுவருடத்தில்தான் உங்களுடன் அரட்டை அடிக்க முடியும்னு நினைக்கிறேன். அதனால இப்பவே சொல்லிடறேன், அனைவருக்கும் ‘கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்’, ‘புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ மற்றும் ‘இனிப்பான தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!’

விழாக்களின் போது யாருக்காவது வித்தியாசமா பரிசளிக்க விரும்புனீங்கன்னா, இந்தத் தளத்தை ஒரு முறை போய்ப் பாருங்க: http://www.truegiftsindia.org/

வாழ்த்து அட்டைகள் அனுப்பறதுன்னா இந்த முகவரிகளைச் சுட்டுங்க:
https://www.nilacharal.com/nilagreeting/christmas_greetings.asp
https://www.nilacharal.com/nilagreeting/pongal_new_greetings.asp
[எனக்குக் கூட அனுப்பலாம் :))))]

மீண்டும் வாழ்த்துக்களுடன் விடைபெறுவது,
உங்கள் ‘ஜோ’

About The Author

12 Comments

Comments are closed.