சில்லுனு ஒரு அரட்டை

என்னங்க எல்லோரும் நலம்தானே? நானும் இங்கே ரொம்ப நல்லா இருக்கேன்.

நமது உடலில் காயம்/வெட்டு ஏற்பட்டால் அதை மருந்திட்டு சரி செய்துடறோம். அதேநேரம் நம்முடைய உடலுக்குள் உபாதைகள் ஏற்படும்போதெல்லாம் என்னதான் டாக்டர்கிட்டே போய் மருந்து வாங்கி குணப்படுத்திக்க முயற்சி செய்தாலும், பிரச்சனை எங்கே, எப்படி ஏற்படுதுன்னு புரிஞ்சுக்க முடிஞ்சா, தெரிஞ்சுக்க முடிஞ்சா நல்லா இருக்குமேன்னு நினைச்சுப் பார்க்கிறதுண்டு. என்னதான் புத்தகங்களில், இணையதளங்களில் தேடிப் படித்து தெரிந்து கொண்டாலும், பிரச்சனை எங்கே எதனாலேன்னு பார்த்து தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா தெளிவாகவே புரிந்து கொள்ள முடியுமேன்னு நினைக்கிறதுண்டு. என்னை மாதிரியே இன்னொருத்தரும் யோசிச்சிருக்காரு. யோசிச்சதோடு நிறுத்திடாமல் அதை செயல்படுத்தியும் காட்டியிருக்கார். நெதர்லேண்டில் உள்ள ‘Corpus’ என்னும் கட்டிடம் பற்றிதான் இப்போ நாம பார்க்கப்போறோம்.

Corpus என்றால் ஒரு பொருளை பற்றிய முழுமையான இலக்கியத் தொகுப்பு என்று அர்த்தம். 35 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கட்டிடத்தில் மனித உடலின் நகலை உங்களால் பார்க்க முடியும். வெறும் மனித உடலின் பாகங்கள் உருவமாகவும், அதன் செயல்பாடுகளை அங்கிருக்கும் போர்டுகளின் மூலம் விளக்கமளித்திருப்பாங்கன்னு நீங்க நினைத்தால்….. அதுதான் கிடையாது. உடல் பாகங்களின் உருவம் மட்டுமில்லாமல் அதன் செயல்பாடுகளை பார்க்கமட்டுமில்லாமல், உணர்ந்து, கேட்கவும் முடியுமாம்! இந்த அருங்காட்சியகத்தில் பார்வையாளர்களின் பயணம் மனிதனின் வலது காலில் தொடங்கி தானியங்கி படிக்கட்டின் உதவியுடன் மூளையில் உள்ள நரம்பணுக்களின் துடிப்பு வரை அனைத்தையும் பார்த்து தெரிந்து கொள்ள முடியுமாம். அவைகளின் இயல்பான செயல்பாடுகள் மட்டுமில்லாமல் அவைகளில் கோளாறு ஏற்படும்போது அவைகள் செயல்படும் விதங்களைப் பற்றியும் விரிவாக விளக்கியிருக்காங்களாம். விந்து கரு முட்டையுடன் இணையும் விதத்தை அவர்கள் தரும் 3டி கண்ணாடியின் உதவியுடன் பார்க்க முடிவது இங்கிருக்கும் சிறப்புகளில் ஒன்றாம். இந்த அருங்காட்சியகத்தில் தங்களுக்கு ஏற்படும் அனுபவத்தின் மூலம் பார்வையாளர்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்திடவேண்டும் என்பதற்காகவே இந்த கட்டிடத்தை உருவாக்கியதாக இதன் படைப்பாளிகள் சொல்கிறார்கள்.

இணையத்தில் ஏதோ ஒரு சுவாரசியமான தகவலோ, செய்தியோ உங்களுடைய பார்வைக்கு வருது. ஆனால் அப்போதைக்கு படிக்க நேரமில்லை. சில நேரம் இணையதளத்தில் நாம் ஒரு விஷயம் பற்றின விவரங்கள் தேடும்போது சரியான தகவல் கிடைக்காது. ஆனால் வேறு ஒரு நேரத்தில் ஏதோ ஒரு தேடலின்போது முன்பு நாம் தேடிய விவரங்கள் கிடைக்கும். அந்த பக்கத்தை விட்டு வெளியேறினால் மறந்துவிடுவோமோ என்ற எண்ணமும் தோன்றும். பல நேரங்களில் bookmark செய்யவும் மறந்துபோவதுண்டு. இது மாதிரியான பிரச்சனைகளைத் தவிர்த்து நமக்கு உதவிட வந்திருக்கு இந்த Instapaper இணையதளம். இணையதளங்கள், தகவல்கள், கட்டுரைகள், படங்கள் இப்படி நீங்க பார்த்த, படிக்க விரும்பும் விஷயங்கள் மட்டுமில்லாமல், இந்தத் தளத்தில் உங்களுக்கான பக்கங்களையும் நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம். உங்களுக்கு விரும்பமிருந்தால் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். விருப்பமில்லாதபோது ரகசியமாகவும் தகவல்களை வைத்துக் கொள்ள முடியும்.

http://www.instapaper.com/

60 ஆண்டுகளுக்கும் மேலாக நடன நிகழ்ச்சிகள் நடத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அது மட்டுமில்லாது, நடனப் பயிற்சியாளர் மற்றும் ஆராய்ச்சியாளராகவும் இருக்கும் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்மா சுப்ரமணியம் அவர்கள். இவருக்கு மியூசிக் அகாடமியின் 6வது நடன விழாவில் முதல் ‘நாட்டிய கலா ஆச்சார்யா’ விருது வழங்கப்பட்டது. ஜெர்மனி கூட்டாட்சி குடியரசின் தூதரக பிரதிநிதியான ஸ்டீஃப்ன் வெக்பஷ், பத்மா சுப்ரமணியம் அவர்களுக்கு இந்த விருதினை வழங்கினார். சென்னையில் உள்ள தன்னுடைய தந்தை ஆரம்பித்த ‘நிருத்யோதயா’ என்னும் நடனப் பள்ளியின் இயக்குனராக உள்ள பத்மா சுப்ரமணியம் அவர்கள் தன்னுடைய 14வது வயதில் நடனம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாராம். அவங்களுடைய நாட்டிய த் திறமைப் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். ஆனாம் நம்மில் எத்தனை பேருக்கு அவங்களிடம் இருக்கும் மற்ற திறமைகள் பற்றி தெரியும்?

தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் நடன நிகழ்ச்சிகளுக்கு இவங்களே இசை அமைச்சிருக்காங்க. அது மட்டுமில்லாமல் சிங்கப்பூர் அரசுக்காக நடத்திய நாட்டிய நாடகங்களில் பன்னாட்டு இசைக்குழுவினை உபயோகப்படுத்தியிருக்காங்க. 35 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக புஷ்பாஞ்சலியை ஒரு நடனமாக அறிமுகப்படுத்திய பெருமை இவங்களையே சேரும். அது மட்டுமா? சலில் சவுத்ரியின் வரிகளின் உதவியுடன் முதல் பெங்காலி வர்ணத்திற்கு இசையமைத்த பெருமையும் இவருக்குண்டு. ‘பத வர்ண’ இலக்கணத்திற்கேற்ப ‘மீரா பஜ’னை நாட்டியத்தில் உபயோகித்த முதல் நாட்டியக் கலைஞரும் இவரே. சிறு வயது முதல் நல்ல குரல் வளம் கொண்ட இவர் தன்னுடைய மைத்துனி சியாமளா பாலகிருஷ்ணனுடன் இணைந்து ‘தமிழ்நாட்டின் நாட்டுப்புற இசை’, ‘தெய்வத் தமிழ் இசை’, ஜெயதேவாவின் ‘அஷ்டபதிகள்’ போன்ற பல இசை ஆல்பங்களில் பாடியுள்ளார். சில நேரங்களில் இவர் தன்னுடைய சீடர்களின் நடன நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடுவதுண்டாம்.

சரி… கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். ‘ஏன் மிளகாய் காரமாயிருக்கு?’, ‘வானவில் எங்கே ஆரம்பிக்கிறது?’, ‘பாலே நடனமாடுபவர்கள் ஏன் விரல் நுனியில் நிற்கிறார்கள்?’ இப்படி ஏகத்துக்கும் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்கும் சுட்டிகள் உங்கள் வீட்டில் இருக்காங்களா? பதில் சொல்லிச் சொல்லி நீங்களும் களைச்சுப் போயிட்டீங்களா? அப்போ உங்களுக்கு இந்த இணையதளம் கண்டிப்பாக உதவும். இயற்கை, விலங்குகள், உணவு, உலகம், அறிவியல், மனித உடல், பண்பாடு, உலகின் தற்போதைய நிகழ்வுகள் இப்படி பல துறைகள் சம்பந்தமான கேள்விக்கணைகளுக்கும் இங்கே விடை கிடைக்குது தெரியுமா?

இதன்மூலமா குழந்தைகள் மட்டுமில்லாமல் நீங்களும் உங்களுடைய பொது அறிவை வளர்த்துக்கலாம். ‘என்ன இதிலிருக்கும் கேள்விகள் எல்லாம் ரொம்ப சில்லியாயிருக்கே?’ன்னு யோசிக்கிறீங்களா. அப்போ இப்படி செய்யலாமா? இந்த இணையதளத்தில் இருக்கும் துறைகளில் உங்களுக்கு மிகவும் பழக்கமான ஏதாவது ஒரு துறையைத் தேர்வு செய்து அதிலிருக்கும் கேள்விகளிலே எத்தனை கேள்விகளுக்கு (பதிலைப் பார்க்காமல்) உங்களால் பதில் தர முடியுதான்னு முயற்சி செய்து பாருங்க.

http://whyzz.com/home

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author