சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

எல்லோரும் நல்லா இருக்கீங்கதானே? நான் இங்கே ஏகத்துக்கும் நலமா இருக்கேன்.

சுப்ரமணியன் ஸார் உங்களுடைய பின்னூட்டங்கள் எல்லாமே கிடைச்சுது! எங்க வீட்டுல என்னுடைய செல்லப் பெயர் ‘கரெக்ஷன் காஞ்சனா’. எனக்கு ஹிந்தியும், கன்னடமும் ஓரளவுக்கு பேச வரும். எங்கம்மாவோ, தங்கையோ கன்னடம் (அ) ஹிந்தி வார்த்தைகளை தவறாக உச்சரிக்கும்போது நான் திருத்துவேன். அது மாதிரியான நேரங்களில் என்னை இந்தப் பெயர் சொல்லித்தான் அழைப்பாங்க. உண்மையைச் சொன்னா கலாய்ப்பாங்க. இதை ஏன் நான் இப்ப சொல்றேன்னு மத்தவங்களுக்கு புரியுதோ இல்லையோ நம்ம சுப்ரமணியன் ஸாருக்கு நல்லாப் புரியும்னு நினைக்கிறேன். உங்களையெல்லாம் வந்து அடிக்க முடியுமா ஸார்? (நல்ல வேளை! உங்களுடனோ அல்லது உங்களுக்கு கீழோ நான் பணிபுரியலை. தப்பிச்சேன், பிழைச்சேன். இப்போ நீங்க என்னை அடிக்க வராம இருக்கணும்!) ஏதோ என்னால முடிஞ்சது உங்களுக்கு ஒரு பட்டப்பெயர் வைக்கிறதுதான். உங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு பலமான யோசனையிலிருக்கேன். சீக்கிரமாக நல்ல பெயரா கண்டுபிடிச்சு சொல்றேன். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா உங்களுடைய படைப்புகளைப் படிக்கிறேன் சுப்ரமணியன் ஸார்.

சும்மா (சில்லுனு ஒரு) அரட்டையா தான் போயிட்டு இருந்தது. ‘ஒரு கழுதையின் வயது என்னன்னு?’ கேட்டு அரட்டையை ஆராய்ச்சிக் கூடமா மாத்தினது யாருங்கோ? ‘சந்தேகம் கேக்கறேன் பேர்வழி’ன்னு சொல்லி கேள்வி மேல கேள்வி கேட்டு முடிந்த வரை என்னை கலாய்ச்சது (ரிப்பேர் என்ற வார்த்தையின் அர்த்தத்தை விம், சபீனா எல்லாம் போட்டு சுப்ரமணியன் சார் விளக்கினதுக்கப்புறமா அதை உபயோகப்படுத்த முடியாதே!) யாரு? அப்புறம் அவங்களே இப்படி கேட்கலாமா? பொதுவா அரட்டைன்னு சொல்லும்போது நம்முடைய தினசரி வாழ்க்கையில் நாம் பார்த்தது, சந்தோஷப்பட்டது, நம்மை பாதிச்சது, நம்மை வருத்தமடைய வைத்தது இது மாதிரியான விஷயங்களைத்தானே நாம் பேசுவோம். அப்படி இருக்கும்போது அதுல அழுகையும் அடங்கும் இல்லையா? உண்மையான அழுகையாக இல்லாமல் வம்புக்கிழுத்ததாலே வந்த சும்மா அழுகைதானே. ஆட்டத்துலே சேர்த்துக்கலாம்.. பரவாயில்லை!!

***********
Rain Drops

போன மாதம் முழுக்க எக்கசக்க மழை. ஏகத்துக்கும் மழையை அனுபவிச்சேன் (சூடான உப்புமாவோடதான்). பெரும் மழையா இல்லாம சின்ன சின்ன தூறல்களா தூறிட்டு இருந்த ஒரு நாளில் காரில் போயிட்டிருந்தப்போ, காரின் கண்ணாடியில் படிந்திருந்த மழைத்துளிகள் பார்க்க அருமையா இருந்தது. புகைப்படம் எனக்குப் பிடித்த வகையில் வந்திருக்கு. பனித்துளிகள் மாதிரியே இந்த மழைத்துளிகளையும் நீங்க ரசிப்பீங்கன்னு நினைக்கிறேன்.

************

சின்ன வயசில முதல் முறையாக பாட்டியுடன் சிவன் கோவில் போனபோதுதான் கோவில் பிரகாரத்தில் இருந்த சண்டிகேஸ்வரர் எனக்கு அறிமுகமானார். சிவன் கோவிலில் எப்படி பைரவர் கண்டிப்பாக இருப்பாரோ அதே போல் சண்டிகேஸ்வரரும் கண்டிப்பாக இருக்காரு. சண்டிகேஸ்வரர் சன்னிதானத்தை அடைந்ததும் எங்க பாட்டி கைகளை பலமாகத் தட்டினாங்க. நானும் அவங்களைப் போலவே கைகளை பலமாகத் தட்டினேன். இப்படி கைகளை பலமாக தட்டும் காரணத்தை பாட்டிகிட்ட கேட்டபோது, ‘சண்டிகேஸ்வரர் ரொம்ப வயதானவர். அதனால அவருக்கு காது கேட்காது. நாம கோவிலுக்கு வந்தது அவருக்கு தெரியணும் இல்லையா. அதுக்காகத்தான் இதுபோல் கைகளைத் தட்டுகிறோம்’ அப்படீன்னு சொன்னாங்க. அதுக்கும்மேல கேள்வி எதுவும் கேட்கலைனாலும் அந்த பதில் எனக்கு போதுமானதாயில்லை. இன்னும் சில பேர் தன்னுடைய உடைகளில் இருந்து நூலை எடுத்து அவர் சன்னிதானத்தில் போடுவாங்க. காரணம் கேட்டா அதுமாதிரி செய்யறதாலே புது துணிகள் கிடைக்கும்னு சொன்னாங்க. இது முதலில் சொன்னதைவிட கொஞ்சம் டூமச்சாகவே இருந்தது.

சில வருஷங்களுக்குப் பிறகு மனநிம்மதிக்காகவும், மனநிறைவிற்காகவும் நான் கோவிலுக்கு போகிறேன். சண்டிகேஸ்வரர் ஏன் நான் கோவிலுக்கு வருவதை கணக்கு வெச்சுக்கணும் அப்படீங்கிற சந்தேகம் வந்துது. உண்மையான காரணம் என்னன்னு தேட ஆரம்பிச்சேன். கொஞ்சம் இல்லாம நிறைய தேடலுக்குப்புறம் முழுமையா தெரியலைன்னாலும் சில விஷயங்கள் தெரிய வந்தது. தெரிஞ்ச விஷயங்கள் எந்தளவு உண்மைன்னு தெரியலை. ஆனாலும் ஒத்துக்கொள்ளும்படியா இருக்கு. அதாவது சண்டிகேஸ்வரர் என்பவர் சிவன் கோவிலின் கணக்கு வழக்கை கவனித்துக் கொள்பவராம். கோவிலுக்கு வந்துட்டு போறவங்க கோவிலின் பொருள் எதையும் எடுத்துட்டுப் போகலைங்கிறதை உறுதி செய்யும் விதமாக அவர் முன்னாடி வந்து கைகளைத் தட்டி காண்பிக்கறது வழக்கமாம். (‘சிவன் சொத்து குல நாசம்’ – என்கிற சொல் வழக்கம் இருப்பது பலருக்கு தெரிஞ்சிருக்கலாம்.) இது மாதிரி பக்தி என்கிற பேரில் பல விஷயங்களை தவறாகப்புரிந்து கொள்கிறோமோ? எப்போப் பார்த்தாலும் ஏன், எதற்கு, எப்படின்னு கேள்விகளா கேட்டு தொல்லை செய்யணும்னு சொல்லலை. ஆனா எதையும் கடைப்பிடிக்கும் முன்போ அல்லது செய்யும் முன்போ அர்த்தம் புரிஞ்சுகிட்டு கடைபிடிக்கலாமே? அர்த்தம் புரிஞ்சா செய்யும் விஷயமும் மனசுல இன்னும் நல்லாவே பதியுமில்லையா? என்ன சொல்றீங்க?

***************

ஒவ்வொரு வருஷமும் எனக்கும் எங்க அம்மாவிற்கும் வாக்குவாதம், சண்டை வரும் மாதம் நவம்பர் மாதம். என்னுடைய அப்பா அரசு அலுவலகத்தில் பணிபுரியும்போதே இறந்து போனதால் என்னுடைய அம்மாவிற்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் உயிர்வாழ் சான்றிதழை நாங்கள் தங்கியிருக்கும் ஏரியாவின் கிராம நிர்வாக அதிகாரியிடம் அவர் கைப்பட எழுதி வாங்கி என்னுடைய அப்பா பணிபுரிந்த அலுவலகத்தில் கொடுக்கவேண்டும். சான்றிதழைக் கொடுக்கத் தவறினால் ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்.

கிராம அதிகாரிகிட்ட சான்றிதழ் வாங்குவதில் பிரச்சனை ஆரம்பிக்கும். நவம்பர் முதல் தேதியிலிருந்து ஆரம்பித்து, கொஞ்சமும் சலிக்காது கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்திற்கு இடைவிடாது தொடர்ந்து படையெடுப்போம். பாதி நாள் கிராம நிர்வாக அதிகாரி தன்னுடைய அலுவலகத்தில் இருக்கவேமாட்டார். அவர் இருக்கக்கூடிய மற்றொரு இடமான கலெக்டர் அலுவலத்தில் தேடினாலும் கிடைக்கமாட்டார். அப்படியே தப்பித்தவறி ஏதோ ஒரு அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரி இருந்தாலும் நம்மைப் பார்த்தவுடன் ஏதோ வரக்கூடாத நேரத்தில் வந்தது போல் பார்ப்பார். நேரங்காலம் தெரியாமல் அவரைத் தொந்தரவு செய்வதாகச் சொல்லி மற்றொரு நாள் வரும்படி கூறுவார். அடுத்த நாள் என்ன நடக்கும்? நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். இதையெல்லாம் கூட பொறுத்துக் கொள்ளலாம். கடைசியில் ஒரு வழியாக ஒரு மாத அலைச்சலுக்கப்புறம் கிராம அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் கிடைக்கும். ஆனால் அந்த சான்றிதழுக்காக ரூபாய் 200ல் இருந்து ரூபாய் 300 வரை கப்பம் கட்டுவதுதான் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாத ஒன்று. (கட்டபொம்மன் மாதிரி கப்பம் வசூலிக்கும் கிராம நிர்வாக அதிகாரியை நல்லதா நாலு கேட்கணும் போல இருக்கும். ஆனா என் அம்மா என்னை இழுத்துக் கொண்டு வந்துவிடுவார்.)

லஞ்சம் வாங்குவது மட்டுமில்லாமல் கொடுப்பதும் தவறானது என்று தெரிந்தாலும் தவிர்க்க முடியாது. சான்றிதழ் நம் கைக்கு வரும் முன்னரே அவருக்கு கப்பம் செலுத்திவிட வேண்டும். சரி கப்பம்தான் கட்டியாச்சே.. அதுக்கப்புறமாவது சான்றிதழ் கைக்கு வருமான்னா அதுதான் கிடையாது. (துக்கம்)விசாரிக்கிறேன் பேர்வழின்னு, ‘எங்கே இருக்கீங்க நீங்க? உங்க கணவர் எப்போ இறந்தார்? உடம்புக்கு என்ன ஆச்சு? ட்ரீட்மெண்ட்டுக்கு எவ்வளவு செலவாகியிருக்கும்? எப்படி உங்களாலே சமாளிக்க முடியுது?’ அப்படின்னு ஆரம்பிச்சு கேள்விகள் போய்கிட்டே இருக்கும். அவருடைய விசாரணைக் கேள்விகளுக்கு பதில் சொல்லி முடிச்சப்புறம் போனாப்போகுதுன்னு சான்றிதழ் நம்ம கைக்கு வரும். கப்பம் ஏன் செலுத்தணும்? ஒவ்வொரு வருஷமும் மனசுக்கு வலி தரும் இது மாதிரியான கேள்விகளுக்கு ஏன் பதில் சொல்லணும்? இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கத் தோன்றும். ஆனால் கேள்விகளை கேட்பதால் அம்மாவின் மனம் மேலும் கஷ்டப்படுமேன்னு விட்டுடுவேன்.

கோவைக்கு இந்த வருஷத்தின் ஆரம்பத்தில்தான் அம்மா குடி வந்தாங்க. அதனால் போன வாரம் இந்த ஏரியாவின் கிராம நிர்வாக அதிகாரியைப் பார்த்து, அவரிடம் எங்களுக்குத் தேவையான உயிர் சான்றிதழைப் பற்றி சொன்னோம். அவரும் பொறுமையா கேட்டு சான்றிதழ் அளிக்கத் தேவையான ஆவணங்களைக் கொடுக்கச் சொன்னார். ஆவணங்களை சரி பார்த்துட்டு அடுத்த வாரம் வந்து சான்றிதழ் வாங்கிக்கச் சொன்னார். சரி பத்து வருஷமாக நடக்கும் இழுபறிதானே, இது நமக்கென்ன புதுசா? அப்படீனு நினைச்சுக்கிட்டே வீட்டுக்கு வந்துட்டோம்.

இந்த வாரம் புதன் கிழமை போனபோது, "நான் எல்லா ஆவணங்களையும் சரிபார்த்துட்டேன். எல்லாம் சரியா இருக்கு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியா நிவாரண நிதி மற்றும் உடுப்புகள் வழங்க வேண்டியிருந்ததாலே சான்றிதழ் கொடுக்க தாமதமாச்சு. ஒரு பத்து நிமிஷம் காத்திருங்க. சான்றிதழ் குடுத்திடறேன்" அப்படீன்னு சொன்னாரு அதிகாரி. என்னாலே என் காதுகளையே நம்ப முடியலை. ஒரு கிராம நிர்வாக அதிகாரி தாமதமானதுக்குக் காரணம் சொல்லி விளக்கம்கூடச் சொல்லுவாரான்னு எங்கம்மாவுக்கு ஒரே ஆச்சரியம்.

கொஞ்ச நேரம் கழிச்சு சான்றிதழ் எங்களுடைய கைக்கு வந்தது. சான்றிதழ் எங்களுக்கு தேவையான வகையிலே இருக்கான்னு சரிபார்த்துக்குங்க அப்படீன்னு சொல்லி எங்களுக்கு இன்னொரு அதிர்ச்சியும் கொடுத்தாரு அந்த அதிகாரி. இதையெல்லாம் விட கடைசியா நடந்த விஷயம், பூகம்பம் ஏற்பட்ட அதிர்வை எனக்குக் கொடுத்தது. சான்றிதழ் வாங்கின பிறகு நானும், எங்கம்மாவும் தயங்கிக்கிட்டே நிற்பதைப் பார்த்துட்டு, "மத்தவங்க எப்படீன்னு தெரியாதுங்க. ஆனா நான் எதுவும் வாங்குறதில்லை. அதனால் நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க"ன்னு சொன்னார். அவருக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவிச்சிட்டு வெளியே வந்தா எங்கம்மாவால் எதையுமே நம்பமுடியலை. தான் கனவுலகத்தில் இருப்பதாக முடிவே செய்துட்டாங்க.

எனக்கு அவர் நியாயமான முறையில லஞ்சம் வாங்காம கான்றிதழ் கொடுத்ததில் சந்தோஷம்னா, எங்கம்மாவிற்கு விசாரணை கேள்விகளிலிருந்து விடுதலை கிடைச்சதாலே சந்தோஷம். ரொம்ப நேரம் நடந்ததெல்லாம் உண்மையான்னு அவங்களுக்கு (அம்மாவிற்கு) சந்தேகமாவே இருந்தது. தவறு செய்யும் அதிகாரிகளைத், திட்டறோம், சில சமயங்களில் நாம சபிக்கக் கூட செய்யறோம். அதே மாதிரி ஒரு நல்ல அதிகாரி இருந்தால் அவரைப் பாராட்டணும் இல்லையா? சிறு துளிதானே பெரு வெள்ளமாகும். மற்ற அதிகாரிகள் போல இவரும் மாறக் கூடிய வாய்ப்பிருந்தாலும் இவரைப் பார்த்து இன்னும் சில அதிகாரிகள் மாறுவதற்கான வாய்ப்பும் இருக்கில்லையா? நல்லதையே நினைப்போம், நல்லது நடக்கும் என்று நம்புவோமே? நம்பிக்கைதானேங்க வாழ்க்கை? (இன்னொரு முறை சொல்லுங்க!)

************

சரி.. கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வருவோம். நம்ம ஆபத்பாந்தவன் கூகுளுக்குப் போங்க. அங்கே தேடும் பெட்டியில் (அதாம்ப்பா நம்ம Search Box) ‘Google gravity’ அப்படீன்னு டைப் செய்யுங்க. எப்பவும் போல ஆயிரக்கணக்கான சுட்டிகள் வந்திருக்கணுமே! அதில் முதல் சுட்டியை சொடுக்குங்க. என்ன எப்பவும் வரும் கூகுள் பக்கம் போலதானே இருக்குன்னு யோசிக்கிறீங்களா? சில நொடிகளுக்கப்புறம் என்ன நடக்குதுன்னு நீங்களே பாருங்க. கூகுளுக்கா இப்படி ஒரு கதி? ஹூம்…

சரிங்க… நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author