தெருவெல்லாம் தமிழ் முழக்கம் – சென்னை சங்கமத் திருவிழா!

ஒயிலாட்டம், தேவராட்டம், தப்பாட்டம், கனியன் கூத்து, பறையாட்டம், நையாண்டி மேளம், மரக்கால் ஆட்டம், சிலம்பாட்டம் – இவையெல்லாம் நீங்கள் பார்த்திருக்க வேண்டாம்.. கேட்டாவது இருக்கிறீர்களா?

இதையெல்லாம் சென்னையில் ஜனவரி 11 முதல் 16 வரை நடந்த சங்கமம் திருவிழாவில் மக்கள் கண்டுகளித்தார்கள். சென்னையில் பரவலாக பூங்காக்களில், தெரு முனைகளில், கடற்கரைகளில் மற்றும் மக்கள் கூடும் பல்வேறு இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மக்கள் ஆவலுடன் திரளாகச் சென்று கண்டு மகிழ்ந்தார்கள்.

கவனிக்கப்படாமல் நலிந்து வரும் திறமை வாய்ந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கவும், வழக்கொழிய இருக்கும் நமது பாரம்பரியக் கலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், மூன்றாண்டுகளுக்கு முன் கவிஞர் கனிமொழி மற்றும் தமிழ் மையம் தவத்திரு ஜகத் கஸ்பார் இவர்களின் கருத்தில் உதித்ததுதான் சென்னை சங்கமம் நிகழ்ச்சி. அது இன்று கடல் போல விரிந்து, மூன்றாவது ஆண்டாக வெற்றிகரமாக நமது தெரு விழாவாக மலர்ந்திருக்கிறது.

நிகழ்ச்சிகளைத் தேடி மக்கள் செல்வதற்கு மாறாக நிகழ்ச்சிகளை மக்களுக்கு எடுத்துச் செல்கிறது சங்கமம். மேனாட்டு நடனங்களையும், இசையையும் ரசித்துப் பழகிய இளைய தலைமுறைகளுக்கு, சங்கமத்தின் பண்டைய வீர விளையாட்டுகளும், பறையாட்டம் போன்ற நடனங்களும், நாடோடிப் பாடல்களும் நல்லதொரு மாறுதலாக – நமது பாரம்பரியக் கலைகளை நினைவுபடுத்துவதாக அமைந்தன.

இது தவிர, பெரும் இசை அரங்குகளில் பாடுகின்ற சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, அருணா சாய்ராம், அனுராதா ஸ்ரீராம் மற்றும் பலர், இந்தத் தெரு நிகழ்ச்சிகளில் மக்களோடு மக்களாக ஆர்வமுடன் இணைந்து கலந்து கொண்டது இந்த சங்கமம் நிகழ்ச்சி ஏற்படுத்தியிருக்கும் இனிய பாதிப்பிற்கு சான்று.

நூற்றுக்கும் மேலான கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கங்களும், கருத்தரங்குகளும், கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டிகளும் சங்கமம் விழாவின் சிறப்புக்கு மேலும் மெருகூட்டிய அம்சங்கள்.

இந்த ஆண்டு கூடுதலாக, விழா நடந்த இடங்களில் ருசியும், மணமும் நிறைந்த தமிழ்நாட்டு உணவு தின்பண்ட வகைகள் பரிமாறப்பட்ட‎ன. மொத்தத்தில், சுமார் இராண்டாயிரம் கிராமியக் கலைஞர்களை பல ஊர்களிலிருந்தும் வரவழைத்து அவர்கள் தங்குவதற்கும், உணவுகளுக்கும் வசதி செய்து, அவர்களை நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி ஊக்கமளித்து நமது பாரம்பரியக் கலைகளை வளர்க்கும் தமிழ் மையத்தின், சுற்றுலா கலாசார வாரியத்தின் நல்ல முயற்சிகளை நெஞ்சாரப் பாராட்டலாம்.

இந்த கலாசாரத் தெருவிழா வரும் ஆண்டுகளில் சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் நடைபெற வேண்டுமென்பது நமது கலாசாரத்தின் மீது ஆர்வம் கொண்ட தமிழ் நெஞ்சங்களின் ஆவல்.

About The Author

1 Comment

  1. jothi

    மனசில நினைச்சதை அப்படியே சொல்லிருக்கீங்க சார்… தமிழ்க் கலைகள் மென்மேலும் உலகறியப் பரவணும்.

Comments are closed.