படித்ததில் பிடித்தது (2)

ஒரு ஓஷோ ஜோக்

பாதிரியார் ஒருவர் ஒரு ஆளைப் பார்த்து "உங்க அப்பா எப்படி இருக்கார்" என்று கேட்டார்.
"அதை ஏன் கேட்கறீங்க ரொம்பவே மோசமாத்தான் இருக்கார்"……"கஷ்டமா இருக்கு” என்றான்.
பாதிரியார், "நோய் என்பது மனத்தில்தான்… நான் உனக்கு கிறித்துவ அறிவியலின் படி ஒரு யோசனை சொல்கிறேன். தனக்கு நோய் இருப்பதாக அவர் நம்புகிறார்.. அவ்வளவு தான்! அவரிடம் போய் "எனக்கு எதுவும் இல்லை.. நான் நன்றாக, ஆரோக்யமாக இருக்கிறேன்" என்று திடமாக நம்பும்படி சொல். நம்புதல்தான் இங்கே முக்கியம் என்று சொன்னார்.

ஒரு வாரம் கழித்து பாதிரியார் அந்த ஆளை மீண்டும் சந்தித்தார். என்னப்பா! என் யோசனை வேலை செய்கிறதா? என்றார்.

அதற்கு அவன் "நன்றாகவே செய்கிறது. இப்போது அவர் தான் இறந்துவிட்டதாக நம்புகிறார்"

நம்பிக்கையின் வார்த்தைகள்

சுவாமி விவேகானந்தர் இமயமலையில் நீண்ட மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மலைச்சரிவில் மேற்கொண்டு ஏற முடியாமல் களைத்துப் போய் அமர்ந்திருந்தான் இளைஞன் ஒருவன். அவனைப் பார்த்ததும் அங்கே சென்றார் விவேகானந்தர்.

"நான் மிகவும் சோர்ந்து போய்விட்டேன். இந்தப் பாதையை இனி எப்படி கடக்கப் போகிறேன்! இனிமேல் என்னால் நடக்க இயலாது. என் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது" என்று அவரிடம் புலம்பினான் அந்த இளைஞன்.

அதற்கு விவேகானந்தர், "இளைஞனே! சற்றுக் கீழே பார். காலுக்கு கீழே நீண்டு தெரிகின்ற அந்த பாதை முழுவதும் உன்னால் கடக்கப்பட்டதுதான். இன்னும் கொஞ்சம் நடந்தால் போதும். முன்னால் தெரிகின்ற பாதையும் விரைவில் உன் காலுக்கு கீழே வந்துவிடும்" என்றார்.

அவரது நம்பிக்கையளிக்கின்ற இந்த வார்த்தைகளைக் கேட்டதும், சோர்ந்து போய் இருந்த இளைஞன் துள்ளியெழுந்தான். நடக்க ஆரம்பித்தான். மலையின் உச்சியை அடைந்தான்.

உருக வைத்த திருவாசகம்

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜி.யு.போப். தமிழ்நாட்டுக்கு வந்த இவர் தமிழ் மொழியால் கவரப்பட்டார். தமிழைக் கற்றுத் தேர்ந்தார். தமிழ் மொழியில் இருந்த திருவள்ளுவரின் திருக்குறளையும், மாணிக்கவாசகரின் திருவாசகத்தையும் கற்றார். கற்றதோடு நின்றுவிடாமல் அவற்றை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் செய்தார்.

மதுரை வைத்தியநாத அய்யர் என்பவர்தான் ஜி.யு.போப்புக்கு குருவாக இருந்தார். இவர்தான் ஜி.யு.போப்புக்கு தமிழைக் கற்றுக்கொடுத்தார்.

தமிழ்நாட்டுக்கு வந்த பணி முடிந்ததும் தாய்நாட்டிற்குத் திரும்பினார் ஜி.யு.போப். தாய்நாட்டுக்குச் சென்றாலும் அங்கிருந்தபடியே தனது குருவுடன் கடிதத் தொடர்பை தொடர்ந்தார்.

ஒரு முறை அவர் வைத்தியநாத அய்யருக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில் ஆங்காங்கே தண்ணீர் துளிகள் சிதறி எழுத்துக்களை கலைத்திருந்தன. அந்தக் கடிதத்தில், திருவாசகத்தின் மீது தனக்கு இருந்த ஈடுபாட்டை உள்ளம் நெகிழ குறிப்பிட்டு இருந்தார்.

கடிதத்தின் முடிவில்,"இக்கடிதத்தின் சில இடங்கள் நீர்க்கோலமிட்டு இருப்பதை பார்த்திருப்பீர்கள். அது வேறு ஒன்றுமில்லை.. என் கண்ணீர் துளிகள்தான். திருவாசகத்தை நினைத்தாலே என் உள்ளம் கசிந்து உருகுகிறது. என்னால் இந்த நெகிழ்ச்சியைத் தவிர்க்க முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்…" என்று எழுதி இருந்தார் ஜி.யு.போப்.

திருவாசகத்திற்கு உருகாதவர் வேறு எந்த வாசகத்திற்கும் உருக மாட்டார் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த உதாரணம்.

– நெல்லை விவேகநந்தா.

About The Author