பாஞ்சாலி சபதம் (1)

(சென்னை காந்தி கல்வி மையத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின் எழுத்து வடிவம்)

இயல்-1 : தோரண வாயில்

எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தந்து தாய்மொழிக்குப் புத்துயிர் தர விழைந்த பாரதியின் உணர்ச்சிக் காவியம்தான் பாஞ்சாலி சபதம். ஓரிரண்டு வருடத்து நூற்பழக்கம் உள்ள தமிழ் மக்கள் எல்லாருக்கும் பொருள் நன்கு விளங்க வேண்டும். அதே நேரத்தில் காவியத்துக்குள்ள நயங்கள் குறையக் கூடாது. இந்த வேட்கையுடன் ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக இந்தக் காவியத்தை இயற்றியுள்ளதாக பாரதி சொல்கிறான்.

பாஞ்சாலி சபதம் வியாசர் எழுதிய மகாபாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டுள்ளது. திருதராஷ்டிரன் உயர்ந்த குணங்கள் உள்ளவன்; சூதில் விருப்பமில்லாதவன்; துரியோதனனிடத்தில் வெறுப்புள்ளவன் என்றெல்லாம் பாரதி சித்திரித்திருப்பது வியாச பாரதத்தின் அடிப்படையிலேயே. பருந்துப் பார்வையில் பாஞ்சாலி சபதத்தின் பின்புலமான வியாச பாரதத்தைப் பார்ப்போம். நமக்கு ஆதாரம் ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து.

விசித்திரவீர்யன் என்ற மன்னனுக்கு பாண்டு, திருதராஷ்டிரன் என்று இரண்டு மகன்கள். திருதராஷ்டிரன் பிறவியிலேயே கண் பார்வை அற்றவன். பாண்டு அரச பதவி ஏற்றான். பின்னர் வனத்துக்கு தவம் செய்யப் போய் அங்கேயே வசித்தான். பாண்டு மைந்தர்கள் யெளவனப் பருவம் எய்தியதும் அவர்களை ரிஷிகள் பீஷ்மரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் வேத வேதாந்தங்கள், மற்றும் க்ஷத்திரியர்களுக்கு வேண்டிய கலைகளைப் பயின்று தேர்ச்சி பெற, திருதராஷ்டிரன் மைந்தர்களான கெளரவர்களுக்கு அவர்களிடம் பொறாமை உண்டாயிற்று. பல தீங்குகள் செய்தனர். குலகுரு பீஷ்மரின் சமாதானத்தின் பேரில் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்திலும் கெளரவர்கள் ஹஸ்தினாபுரத்திலுமாக தனியாக ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள்.

பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் சூதாட்டம் நடை பெற, கெளரவர்களுக்காக ஆடிய சகுனி பாண்டவரில் மூத்தவரான யுதிஷ்டிரரைத் (தரும புத்திரர்) தோல்வி அடையச் செய்து அதன் பலனாகப் பாண்டவர்கள் 13 ஆண்டுகள் வனவாசத்திலும், 12 ஆண்டுகள் ஆரண்யத்திலும், 13ம் ஆண்டு தலைமறைவாகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை. அதன் பிறகும் சொத்தை அபகரித்துக் கொண்டிருந்த துரியோதனன் அதைக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. அதன் பேரில் யுத்தம் நடந்தது. பாண்டவர்கள் துரியோதனாதியரைக் கொன்று சாம்ராஜ்யத்தை அடைந்தார்கள். இதற்கு மேல், பாண்டவர்கள் 36 ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்தார்கள். பிறகு பேரன் பரீக்ஷித்துக்குப் பட்டம் சூட்டி விட்டு, பாண்டவர்களும் திரெளபதியும் மர உரி தரித்து வனம் சென்றார்கள்.

இந்தப் பின்னணியில் பாஞ்சாலி சபதப் பகுதியைப் பார்ப்போம்.

அத்தினாபுரத்தை ஆண்டு வந்த துரியோதனுக்கு பாண்டவர்கள் மீது பொறாமை ஏற்பட்டது. அதிலும் பாண்டவர்கள் நடத்திய வேள்விக்கு பன்னாட்டு மன்னர்கள் வந்து பரிசில்களைக் கொட்டியது, அவன் தடுமாறி விழுந்தபோது திரெளபதி நகைத்தது, கண்ணனுக்கு முதல் மரியாதை அளித்தது ஆகியவை அவன் கோபத்தையும் பொறாமையையும் தூண்டி விட்டன.

மாமன் சகுனியின் உதவியுடன், தந்தை திருதராஷ்டிரனின் அனுமதியை வற்புறுத்திப் பெற்று தருமபுத்திரர் சகோதரர்களை விருந்துக்கு அழைக்கிறான். விருந்துக்கு வரும் அவர்களை சூதுக்கு அழைத்து வஞ்சகமாக வென்று, அவர்களது அனைத்து சொத்துக்கள், ராஜ்யம், சகோதரர்கள், பின்னர் தருமபுத்திரர் தம்மையே இழக்க வைக்கிறான். இறுதிக் கட்டமாகப் பாஞ்சாலியையும் சூதில் வென்று அரசவைக்கு அவளை இழுத்து வந்து, துகில் உரிய வைத்து அவமானப்படுத்த முனைகிறான்.

பாஞ்சாலி நீதி கேட்டும் பயனில்லாத நிலையில் கண்ணனிடம் சரணாகதி அடைய, அவளது சேலை இழுக்க இழுக்க வளர்ந்து கொண்டே போகிறது. வேறு வழியின்றி துகிலுரியும் முயற்சியை துச்சாதனன் கைவிட, பீமனும் அருச்சுனனும் இந்தக் கொடுமைக்குப் பழி வாங்கப் போவதாகச் சூளுரைக்கிறார்கள். துரியோதனன், துச்சாதனன் இவர்களது குருதியைக் குழலில் பூசி நறுநெய்யிட்டுக் குளித்த பிறகே கூந்தலை முடிப்பேன் என்று பாஞ்சாலி சபதம் இடுகிறாள்.

பாஞ்சாலி சபதத்தை, கள்ளையும் தீயையும் சேர்த்து, காற்றையும் வானவெளியையும் சேர்த்து பாரதி ஆக்கிய தீஞ்சுவைக் காவியம் என்று திண்ணமாகச் சொல்லலாம். அவனது தலை சிறந்த காவியம் என்று இதைச் சொல்ல முடியும். கவிச்சுவை "நனி சொட்டச் சொட்ட"க் கிடைக்கிறது. பாரதியின் மூச்சுக் காற்றான பாரத தேசத்துப் பற்று காவியம் முழுவதும் விரவிக் கிடக்கிறது. பண்டைய நிலையைச் சொல்லிப் பரவசமும், இன்றைய நிலையை எண்ணி ஏக்கமும் நெஞ்சு பொறுக்காத கோபமும் வெளிப்படுகின்றன.

தீங்கு கண்டு வாய்ப்பேச்சில் "த்சொ, த்சொ," சொல்லி அத்தோடு கடமையை முடித்துக் கொள்கிற சாதாரணர்களின் பால் அவனுக்குள்ள ஏளனம் வெளிப்படுகிறது. இவர்களே தேவலை, தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்தச் சக்கரவட்டமாகப் பேசுகிற அறிவு ஜீவிகளை மோதி மிதித்து விட வேண்டும் போல் அவனுக்கு ஏற்படுகிற ஆக்ரோஷம் நம்மைத் தாக்குகிறது. அரச நீதி, ஜனநாயக நெறி, செல்வந்தர்களின் கடமை, பொறாமையும் காமமும் இட்டுச் செல்லும் அழிவுப் பாதை போன்ற நன்னெறிகளும் இந்தக் காவியத்தில் பாரதி வாயிலாக வெளிப்படுகின்றன.

வாருங்கள், காவியத்துக்குள் நுழைவோம்

(தொடரும்)

About The Author

5 Comments

  1. Dr. S. Subramanian

    >>13 ஆண்டுகள் வனவாசத்திலும், 12 ஆண்டுகள் ஆரண்யத்திலும், 13ம் ஆண்டு தலைமறைவாகவும்

  2. kamesh

    தமிழில் ஒரு கட்டுரை பொல் எழுதியிருந்தல் படிக்கும் குழந்தை கழில் ப்ரொஜெcட் செய்யும் குழந்தைகழுக்கு மிகவும் உபயொகமக எருந்திருக்கும்.

  3. k.viji

    பஞலை சபதம் ச்டொர்ய் இச் வெர்ய் இன்டெரெச்ட்

Comments are closed.