பாஞ்சாலி சபதம் (2)

துரியோதனின் பொறாமை

காவியத்தில் முதலில் நகர வருணனை. அத்தினாபுரத்தை வருணிக்கப் போகும் பாரதிக்கு, கண் முன் பண்டைய பாரத நகரங்களின் சிறப்புதான் கண் முன் விரிகிறது. வருணிக்கத் தொடங்குகிறான். ஒன்றிரண்டு பாடல்கள் மட்டும் மாதிரிக்கு.

"நல்லிசைமுழக்கங்களாம்-பல
நாட்டிய மாதர்தம் பழக்கங்களாம்
தொல்லிசைக் காவியங்கள்-அருந்
தொழிலுணர் சிற்பர் செய் ஓவியங்கள்
கொல்லிசை வாரணங்கள்-கடுங்
குதிரைகளொடு பெரும்தேர்களுண்டாம்!
மல்லிசைப் போர்களுண்டாம்;-திரள்
வாய்ந்திவை பார்த்திடு வோர்களுண்டாம்!
எண்ணரும் கனிவகையும் –இவை
இளகி நல் ஒளிதரும் பணி வகையும்
தண்ணறும் சாந்தங்களும்-மலர்த்
தார்களும் மலர்விழிக் காந்தங்களும்
சுண்ணமும் நறும் புகையும்-சுரர்
துய்ப்பதர்குரிய பல்பண்டங்களும்
உண்ணநற் கனிவகையும்-களி
உவகையும் கேளியும் ஓங்கினவே!"

கவிஞன் வாழ்ந்த காலத்தில் வணிகர்களும் பணக்காரர்களும் அரசுக்கு, அதிகாரிகளுக்கு, கள்வர்களுக்கு அஞ்சி வாழ வேண்டியிருந்தது. பண்டைய பாரதத்தில் எப்படி?

"தவனுடை வணிகர்களும்-பல
தன்னுடைத் தொழில் செயும் மா சனமும்
எவனுடைப் பயமும் இலாது-இனிது
இருந்திடும் தன்மையது எழில் நகரே!"

துரியோதனன் அவை. எப்படிப்பட்டவன் அவன்? "நெஞ்சத் துணிவுடையன். முடி பணிவு அறியான். கரி ஓர் ஆயிரத்தின் வலி காட்டிடுவான்." இப்படிப்பட்டவன் பொறாமை, பேராசை மற்றும் காமவயப்பட்டு எப்படி நிலை தடுமாறி, சின்னக்குழந்தை போல் அழுது பரிதவித்து இரங்கி நிற்கின்றான் என்பதை எல்லாம் பின்னால் பார்க்கப் போகிறோம்.

அவையில் உள்ளவர்களை அறிமுகப் படுத்துகிறான் பாரதி. எப்படி?
இதோ பீஷ்மன். அந்தம் இல் புகழுடையான்; ஆரிய வீட்டுமன். அறம் அறிந்தோன்.

வித்தியாசத்துக்கு விதுரனைப் பற்றி என்ன சொல்கிறான் என்று பார்ப்போம், "மெய்ந்நெறி உணர் விதுரன்"

பீஷ்மருக்கு எல்லா நியாயமும் தெரியும். அறிவது வேறு, அதை உள்வாங்கிகொண்டு செயல்படுத்துவது வேறு. திட்ட வட்டமாகச் செயல் பட வேண்டிய நேரத்தில் வெறும் விஷய அறிவு படைத்தவன் எப்படி நடந்து கொள்வான்? நெறி உணர்ந்தவன் எப்படி நடந்து கொள்வான்? இந்த வித்தியாசத்தை பீஷ்மன் , விதுரன் பற்றிய ஒற்றை வரி அறிமுகத்தில் தெளிவாகக் கொண்டு வந்து விடுகிறான் கவிஞன்.. கதை மேற்கொண்டு செல்லும் போது இந்த விளக்கம் எவ்வளவு பொருத்தமானது என்று பார்க்கத்தானே போகிறோம்?

எவ்வளவு செல்வமும் வளமும் இருந்த போதிலும் மற்றவர்களது வளங்களோடு ஒப்பிட்டுக் கொள்ளும்போது மனது கோப வசப்படுகிறது. ஆத்திரம் உண்டாகிறது. எண்ணாத எண்ணம் எல்லாம் எண்ணி எண்ணி ஏங்குகிறது. செல்வனும் மனத்தளவில் ஏழையாகிப் பரிதவிக்கிறான்!

பொறாமையினால் என்ன ஆகும்? "நெஞ்சத்துள்ள பொறாமை எனும் தீ நீள்வதால் உள்ளம் நெக்குருகிப்" போகும். ஆண்மை, மறம், திண்மை, மானம், வண்மை யாவும் மறந்து போகும். பஞ்சையாமொரு பெண் மகள் போலும்,பாலர் போலும் பரிதவிப்பார்கள்! பாதகரோடு கூடி உறவெய்தி நிற்பார்கள்! இதுதான் நிகழ்கிறது, துரியோதனன் விஷயத்தில்.

அவன் புலம்பலைக் கேளுங்கள்:-

பாண்டவர் முடி உயர்த்தே-இந்தப்
பார்மிசை உலவிடு நாள் வரை, நான்
ஆண்டதொர் அரசாமோ?-எனது
ஆண்மையும் புகழும் ஓர் பொருளாமோ?

"எப்படிப் பொறுத்திடுவேன்?" என்று அரற்றுகிறான்.

"தந்தத்தில் கட்டில்களும்-நல்ல
தந்தத்தில் பல்லக்கும், வாகனமும்,
தந்தத்தில் பிடிவாளும்-அந்தத்
தந்தத்திலே சிற்பத் தொழில் வகையும்
தந்தத்தில் ஆசனமும்-பின்னும்
தமனிய மணிகளில் இவை அனைத்தும்
தந்தத்தைக் கணக்கிடவோ??-முழுத்
தரணியின் திருவும் இத் தருமனுக்கோ?"

என்று இவ்வாறு ஏழையாகி இரங்குகின்றான்.

"எப்படிப் பட்ட துரியோதனன்?" "அவன் திறத்தொரு கல் எனும் நெஞ்சன்.வானம் வீழினும் அஞ்சுதல் இல்லான்." எப்படி ஆகி விட்டான் பாருங்கள்!

"யாது நேரினும், எவ்வகையானும், யாது போயினும், பாண்டவர் வாழ்வைத் தீது செய்து மடித்திடுவது" என்று தீர்மானம் செய்து விட்டான்!

வேள்வியில் துரியோதனை வெதுப்பிய செயல்கள் வேறு சிலவும் உண்டு. கண்ணைப் பறித்திடும் இள மங்கையர்களை, மன்னர்கள் வாழ்த்தி அளித்தனர் பாண்டவர்கட்கு. முதல் உபசாரம்,யாதவர் குலக் கோன் கண்ணனுக்கு, துரியோதனனுக்கு அல்ல. இவையெல்லாம் போக, தடுமாறி அவன் விழுந்தபோது "ஏந்திழையாளும்" அவனைப் பார்த்து நகைத்து விட்டாள்!

இத்தனையையும் மாமன் சகுனியிடம் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறான் துரியோதனன். மாமன் என்ன செய்கிறான்?

அடுத்த வாரம் பார்ப்போம்!

About The Author

1 Comment

  1. P.Balakrishnan

    பொம்பள சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு – என்னும் பழமொழிக்குப் பாஞ்சாலியின் சிரிப்பு காரணமாக இருந்திருக்குமோ!

Comments are closed.