பாஞ்சாலி சபதம் (4)

போச்சுது நல்லறம்!

துரியோதனன் சொன்ன தீமொழிகளைக் கேட்டு திரிதராட்டிரன் தன்னைத் தானே நொந்து கொள்கிறான். "பேயெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன்!". என்றாலும் உபதேசமும் செய்கிறான். செல்வம் பெற்றதற்கு இலக்கணம் என்ன என்று இங்கு திரிதராட்டிரன் வாயிலாக பாரதி வரையறுத்துக் கூறுகிறான்:

"தம் ஒரு கருமத்திலே, நித்தம் தளர்வறு முயற்சி;
மற்றோர் பொருளை இம்மியும் கருதாமை;
சார்ந்திருப்பவர் தமை நன்கு காத்திடுதல்."

இவை எல்லாம் கொடிய மகன் காதில் விழுந்தால்தானே? தன் கருத்தையே திரும்ப திரும்ப வலியுறுத்திச் சொல்கிறான். ஒத்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை தந்தைக்கு.

"விதி!விதி!விதி! மகனே-இனி
வேறெது சொல்லுவன் அடமகனே!"

என்று சொல்லி ஓய்ந்து விடுகிறான்.

தொடர்ந்து தம்பி விதுரனை அழைத்து, பாண்டவர்களை அழைத்து வர அனுப்புகிறான். ”அழகான மணிமண்டபம் ஒன்று அமைத்துள்ளோம்; அதற்கு உங்களை அழைத்து விருந்து தர வேண்டும் என கூடும் வயதில் கிழவன் விரும்பிக் கூறினன்” என்று சொல்லச் சொல்கிறான். அதனோடு, விதுரனிடம் தனியாக ஒரு சங்கதியும் சொல்கிறான், ”பேச்சின் இடையில், சகுனி சொல் கேட்டு, பேயெனும் பிள்ளை கருத்தினில் கொண்ட தீச் செயல் இது என்று குறிப்பால் செப்பிடு” என்றும் சொல்லி அனுப்புகிறான்.

இதைக் கேட்டு விதுரன் புலம்பும் புலம்பலில், பாரதியின் குரலும் சேர்ந்து ஒலிக்கிறது,

"போச்சுது! போச்சுது பாரத நாடு!
போச்சுது நல்லறம்! போச்சுது வேதம்"

விதுரன் தூது செல்கிறான். அவன் போகும் வழியை விவரிக்கும் முகத்தான், பண்டைய பாரதத்தின் வளத்தைச் சொல்கிறான் கவிஞன். மாதிரிக்கு ஒரே ஒரு பாடல்.

"பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கும் நாடு,
பெண்களெல்லாம் அரம்பையர் போல் ஒளிரும் நாடு,
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
வேள்வி எனும் இவை எல்லாம் விளங்கும் நாடு!"

விதுரன் பாண்டவர்களிடம் சென்று செய்தி சொல்கிறான். திரிதராட்டிரன் சொல்லி வைத்த எச்சரிக்கையையும் சொல்கிறான். கடைசியாக, "சொல்லிய குறிப்பறிந்தே நலம் தோன்றிய வழியினைத் தொடர்க!" என்று முடித்து விடுகிறான்.

அழைப்பை ஏற்பதற்கு தம்பியர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் தருமன் அவர்களை ஏற்க வைத்து விடுகிறான்.

"மருமங்கள் எவை செயினும்-மதி
மருண்டு அவர் விருந்து அறம் சிதைத்திடினும்
கருமம் ஒன்றே உளதாம்-நங்கள்
கடன்: அதை நெறிப் படி புரிந்திடுவோம்"

என்று கூறி விடுகிறான். "ராமன் கதை தெரியாதா? தந்தை வரப் பணித்தான்; சிறு தந்தையும் தூது வந்து சொல்லி விட்டான். பணிவது நம் கடமையல்லவா?" என்கிறான்.

மேலும் இங்கு ஒரு பெரிய தத்துவம் வெளியிடப் படுகிறது. "Task on hand" என்பதுதான் சுதர்மம். பல பட யோசித்து அவ்வப்போது செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் விடக்கூடாது.

"சேற்றில் உழலும் புழுவிற்கும்-புவிச்
செல்வமுடைய அரசர்க்கும்-பிச்சை
ஏற்று உடல் காத்திடும் ஏழைக்கும்-உயிர்
எத்தனை உண்டு? அவை யாவிற்கும்-நித்தம்
ஆற்றுதற்குள்ள கடமைதான் முன்வந்து
அவ்வக் கணம்தொறும் நிற்குமால்-அது
தோற்றும் பொழுதில் புரிகுவார்-பல
சூழ்ந்து கடமை அழிப்பரோ?"

வழி நடக்கிறார்கள். பின்னணியில் பாரதி சோகக் குரல் கொடுக்கிறான்;

"நரி வகுத்த வலையினிலே தெரிந்து சிங்கம்
நழுவி விழும்; சிற்றெறும்பால் யானை சாகும்,
வரி வகுத்த உடற் புலியைப் புழுவும் கொல்லும்;
வருங்காலம் உணர்வோரும் மயங்கி நிற்பார்!"
மாலை நேரத்தில் சந்தியாவந்தனம் செய்கிறார்கள் பாண்டவர்கள். காயத்ரி மந்திரத்தை இங்கு தமிழில் தருகிறான் பாரதி.

"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்-அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!"

கால இடம் பற்றிய சிந்தனைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு பாரதியின் மாலை நேர வருணையை இங்கு கொஞ்சம் தொட்டுச் செல்வோம். வெறுமனே கதை கேட்டுப் போகிற ஆசாமிகளா நாம்? கவிதையையும் கொஞ்சம் ரசிப்போமே?

"கணம்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்;
கணம்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்
கணம் தோறும் நவநவமாம் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?"

அடிவானத்தே அங்குப் பரிதிக் கோளம்
அளப்பரிய விரைவினோடு சுழலக் காண்பாய்

இடிவானத்தொளி மின்னல் பத்துக் கோடி
எடுத்தவற்றை ஒன்றுபட உருக்கி வார்த்து
முடிவான வட்டத்தைக் காளி ஆங்கே
மொய்குழலாச் சுற்றுவதன் மொய்ம்பு காணாய்!

பார்;சுடர்ப் பரிதியைச் சூழவே படர்முகில்
எத்தனை தீப்பட்டெரிவன!ஓகோ!
என்னடீ இந்த வண்ணத்தியல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
……….

நீலப் பொய்கையில் மிதந்திடும் தங்கத்
தோணிகள்!சுடரொளிப் பொற்கரையிட்ட
கருஞ்சிகரங்கள்!காணடி,ஆங்குத்
தங்கத் திமிங்கிலம் தாம் பல மிதக்கும்
இருட்கடல்!-ஆஹா! எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்!ஒளித்திரள்! வன்னக்களஞ்சியம்!

எங்கும் திகழும் இயற்கையின் காட்சியில் இன்புற்று, சுடர் மங்கிடும் முன்பு வந்தார்கள், பாண்டவர்கள். எங்கே? ஒளி மங்கும் நகருக்கு!

அங்கே….

அடுத்த வாரம் பார்ப்போம்.

About The Author