பாஞ்சாலி சபதம் (6)

முதல் முழக்கம்!

நாட்டைப் பணயம் வைக்கிறான் தருமன். இழக்கிறான். பொங்கி எழுகிறான் பாரதி. அருமையான நெறிமுறையைச் சொல்கிறான். தேசம் என்பது அரசனின் தனிப்பட்ட சொத்தல்ல. அவன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள குடிமக்களைப் பாதுகாக்க வேண்டியது அவன் கடமை. குடிபுறம் காத்தோம்பல் அல்லவா மன்னர் கடன்? காந்திஜி சொல்லும் தர்மகர்த்தா தத்துவமல்லவா பாரதியின் வழியாக வெளிப்படுகிறது?

உண்மை காட்டும் நூல்கள் பல இருந்தாலும், மனிதர்கள் ராஜ நீதியை நன்கு செய்யாமல் விட்டுப் போய் விட்டார்கள். நாட்டு மாந்தர் எல்லாம் தம் போல் நரர்கள் எறு கருதார்; ஆட்டு மந்தை என்று எண்ணி விட்டார்கள்! ஓரம் செய்திடாமல், தருமத்து உறுதி கொன்றிடாமல், பிறரைத் துயரில் வீழ்த்திடாமல், உலகை ஆளும் முறைமை, உலகில் ஓர் புறத்தும் இல்லை! பின் நாம் பேசுவது எல்லாம் சாரமில்லாத வெட்டிப் பேச்சு! ஆயிரம் நீதி உணர்ந்த தருமன் என்ன செய்தான்? கோவில் பூஜை செய்வோன் சிலையைக் கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து நிற்போன் வீட்டை வைத்து இழத்தல் போலும் இப்படி ஒரு காரியம் செய்து விட்டானே? அவனைப் பற்றி முடிந்த முடிவாக பாரதி சொல்லும் வார்த்தை, “சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்!”

தருமன் அடுத்தடுத்து ஒவ்வொரு தம்பியாக வைத்து இழக்கிறான். அடுத்து, தன்னையே பணயம் வைக்கிறான். தோற்றுப் போகிறான்!

துரியோதனன், “பாண்டவர்களின் ராஜ்யம், நிதி எல்லாம் இனி நம்மைச் சார்ந்தது. இதை எங்கும் முரசறைந்து சொல்லுவாய்!” எறு தம்பிக்குக் கட்டளை இடுகிறான். ”

இந்த சந்தர்ப்பத்தில் வஞ்சகச் சகுனி நல்லவன் போல நியாயம் பேசுகிறான். “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா? இந்தப் பாண்டவர்களை உன் தந்தை கண்ணுக்குக் கண்ணாகக் கருதவில்லையா? இவர்கள் உங்கள் சகோதரர்கள்தாமே? இவர்களை நாணி வெட்கப் பட வைக்கலாமா?” என்று கடிந்து கொண்டு விட்டுச் சொல்லுவான்:

“மின்னும் அமுதமும் போன்றவள்-இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால்-அவள்
துன்னும் அதிட்டம் உடையவள்-இவர்
தோற்றதனைத்தையும் மீட்டலாம்!”

இது கேட்டு துரியோனனுக்குப் பெரு மகிழ்ச்சி. தேன் கலசத்தினை எண்ணி நாய் வெறு நாவினை எச்சில் ஊறச் சுவைத்து மகிழ்வது போல !

தருமன் பாஞ்சாலியைப் பணயம் வைக்கிறான்; இழக்கிறான்!

இது குறித்து கெளரவர் கொண்ட மகிழ்ச்சி பாரதியின் வார்த்தைகளிலேயே:

திக்குக் குலுங்கிடவே-எழுந்தாடுமாம்
தீயவர் கூட்டமெல்லாம்!
தக்குத்தக்கென்றேஅவர்-குதித்தாடுவார்
தம்மிரு தோள் கொட்டுவார்!
ஒக்கும் தருமனுக்கே-இஃதென்பரோ!
ஒ!வென்றிறைந்திடுவார்,
குக்குக்கென்றே நகைப்பார்-’துரியோதனா
கட்டிக்கொள் எம்மை’ என்பார்.”’

அவர்களின் ஆர்ப்பாட்டத்தை விவரிக்க இதற்கு மேலும் தன்னிடம் வார்த்தை இல்லை என்கிறான் பாரதி!

துரியோதனன் விதுரனை அழைத்து திரௌபதியை தன் அவைக்கு அழைத்து வரச் சொல்கிறான். என்ன ஆணவம்!

இந்த சந்தர்ப்பத்திலும் விதுரன் நீதி சொல்ல முனைகிறான்

“ ஐவர் சினத்தின் அழலை வளர்க்கின்றாய்,
தெய்வத் தவத்தியை சீர்குலையப் பேசுகிறாய்;
நின்னுடைய நன்மைக்கிந் நீதியெலாம் சொல்லுகிறேன்!
என்னுடைய சொல் வேறெவர் பொருட்டும் இல்லையடா!
பாண்டவர் தாம் நாளைப் பழியிதனைத் தீர்த்திடுவார்.
மாண்டு தரைமேல் மகனே, கிடப்பாய் நீ”
என்கிறான்.

‘ஆண்டவரே! நாங்கள் அறியாமையால் செய்த
நீண்ட பழி இதனை நீர் பொறுப்பீர்” என்று கேட்டுக் கொள்ளச் சொல்கிறான்.

நன்றாய்க் கேட்பானே துரியோதனன்!

“சீச்சீ, மடையா, கெடுக!” என்று சிற்றப்பாவை சபித்து விட்டு தேர்ப்பாகனை இந்தப் பணிக்கு அனுப்புகிறான். தேர்ப்பாகனிடம் பாஞ்சாலி பேசுவது அக்கினி புத்திரியின் உரிமைக் குரல். பரதப் புதுமைப் பெண்ணின் புரட்சிக் குரல்! மனித உரிமை, பெண்ணுரிமை இவற்றின் முதல் முழக்கம்.

“நல்லது; நீ சென்று நடந்த கதை கேட்டு வா,
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர் தாம்
என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே
முன்னம் இழந்து முடித்தென்னைத் தோற்றாரா?
சென்று சபையில் இச் செய்தி தெரிந்து வா!”

என்று அனுப்பிய பின்னும் மனம் பதைத்து அமர்ந்திருக்கிறாள்.

தேர்ப்பாகன் இந்தச் செய்தியை சென்று துரியோதனனிடம் சொல்கிறான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த பாண்டவர்கள் நொந்து போய் ஒன்றும் நுவலாது இருந்து விட்டார்கள்.

துரியோதனன் பேசுவான்! என்ன பேசுவான்?

அடுத்த வாரம் வரை பொறுத்திருங்கள்.

About The Author

1 Comment

Comments are closed.