பாடல் ரசிக்க வாரியளா ? (1)

சங்ககாலப் பாடல்கள், ஆழ்வார்கள் நாயன்மார்கள் இயற்றிய பக்திப் பாடல்கள், தனிப்பாடல்கள், தற்காலப் புதுக்கவிதைகள், ஹைக்கூக்கள் எனப் பற்பல காலங்களில் பற்பல புலவர்கள், கவிஞர்கள் எழுதியவை தமிழ் இலக்கியத்தில் பொக்கிஷங்களாக நிரம்பி இருக்கின்றன. அவற்றிலிருந்து அவ்வப்போது சுவைத்த பாடல்களை -கால வரிசை எதுவும் இன்றி- ‘நிலாச்சாரல்’ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம்.

சொல்லின்பமும், கருத்தாழமும் கொண்ட பாடல்களை வாராவாரம் கேட்க வாரியளா?

இதோ முதலில் ஒரு பாடல் – கம்பர் எழுதியது.
புலவர்களைக் கேலி செய்து!

"புலவர்கள் ஒருவரைப் புகழ்ந்து பேச எண்ணினால் புகழ்வர். அதே நேரம், பொருள் தராவிட்டால் இகழ்ந்து பேசவும் தயங்க மாட்டார்கள். தாங்கள் சொல்லிய கருத்தினை மாற்றியும் கூறுவர். ஆகவே அவர்கள் கொடுமையானவர்கள். எமனை விடக் கொடியவர்கள்" எனக் கம்பர் கூறும் அந்தப் பாடல் இதோ!

போற்றினும் போற்றுவர்; பொருள் கொடாவிடில்
தூற்றினும் தூற்றுவர்; சொன்ன சொற்களை
மாற்றினும் மாற்றுவர்; வன் கணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடியவர் ஆவரே!

நிந்தா ஸ்துதி‘ என்று ஒரு பாடல் வகை உண்டு. இறைவனை நையாண்டி செய்வது போலப் பாடுதல்! அவ்வகையில் காளமேகப் புலவர் எழுதியது இது.

"சிவபெருமான் பிச்சை எடுத்து உண்பவர். அவருக்கு எக்காளம் என்று சொல்லப்படும் ஊது கருவி எதற்கு? யானை எதற்கு? கடல் ஒலி போன்று பேரொலி செய்யும் பேரிகை எதற்கு? குடை, கொடி போன்ற அரசச் சின்னங்கள் எதற்கு" என அமைந்திருக்கும் இப்பாடல், தில்லை நடராஜர் திருவிழாவின்போது நடராஜப் பெருமான் பிச்சாண்டவர் போலக் கோலம் கொண்டு எழுந்தருளியபோது எழுதியது.

நச்சரவம் பூண்ட தில்லை நாதரே, தேவரீர்
பிச்சை எடுத்து உண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்
காளம் ஏன்? குஞ்சரம் ஏன்? கார்கடல்போல் தான் முழங்கும்
மேளம் ஏன்? ராசாங்கம் ஏன்?

–வ.ஜோதி எழுதிய ‘நையாண்டிப் பாடல்கள்‘ தொகுப்பிலிருந்து.

–அடுத்த வாரம்…

About The Author