பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – புன்னகை ரிஷி! (2)

ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்
 
(பிறருக்காக உயிர் வாழ்பவனே உயிர் வாழ்பவன்; மற்றவன் செத்தவருடன் வைத்து எண்ணப்படுவான்!)
-திருக்குறள்: 214 (ஒப்புரவறிதல்)

தீக்ஷித்தின் அதிசய வாழ்க்கை!

அற்புதமான சில மனிதர்களைப் படைத்து அவர்களின் வாழ்க்கை மூலமாகத்தான் இறைவன் நமக்கு உத்வேகத்தை ஊட்டுகிறான்.

Dr. Sharath Kumar2011, நவம்பர் 18ஆம் தேதி, கல்கத்தாவிலிருந்து வெளிவரும் ;தி டெலகிராப்’ எனும் இதழில் வெளியிடப்பட்டு, மீண்டும், அதே கல்கத்தாவிலிருந்து வரும் ‘ட்ரூத்’ எனும் வார இதழிலும் வந்த கட்டுரை, ‘படித்ததில் பிடித்த’ ஒன்று!

சக்கர நாற்காலியில் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை! இரண்டு முறை மாரடைப்பு. நாக்கு குளறும் என்பதால் பேசவும் முடியாது! வாழ்க்கையில் பேச்சும் செயலும் இழந்த நிலையில் ஒருவர் வேறு என்ன செய்ய முடியும் என நினைப்பவர்கள் டாக்டர். ஷரத்குமார் தீக்ஷித்தின் அதிசய வாழ்க்கையைப் பற்றி நிச்சயமாக அறிந்து கொள்ள வேண்டும்!

இலவசமாக இரண்டரை லட்சம் ஆபரேஷன் செய்த டாக்டர்

நாற்பது ஆண்டுகளில் தீக்ஷித் இரண்டரை லட்சம் ஆபரேஷன்களை இலவசமாகச் செய்துள்ளார்! கடந்த 2011 நவம்பர் வரை இந்த இலவசச் சேவை தொடர்ந்தது. கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி, ப்ரூக்ளினில் தனது 81ஆம் வயதில் அவர் மறைந்தார்.

தீக்ஷித்துக்கு இரண்டு திருமணங்கள் மூலமாக இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறந்தனர். ஆனால் நிலைக்கவில்லை. ஆனால் ஏராளமான குழந்தைகள் அவரைத் தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர். பிளவு உதடுகள், கோணல் கண்கள் என்று ஆயிரக்கணக்கானோர் – இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் –சிரிக்க முடியாமல் வெம்பி மனம் புழுங்கி அவரிடம் வருவார்கள். தீக்ஷித்தின் கை அவர்கள் முகத்தில் பட்டவுடன் உதடுகள் நேராகும்! கண்கள் மலரும்! அத்தோடு அவர்கள் முகத்தில் அழகுப் புன்னகை மிளிரும்! இப்படி ஆயிரக்கணக்கானோருக்குப் புன்னகையைத் தந்தவர் என்பதால் அவரைப் ‘புன்னகை ரிஷி’ எனக் கூறி மகிழ்கின்றனர்.

இந்தியாவில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் வசித்துத் தன் மருத்துவச் சேவையை அவர் செய்து கொண்டிருந்தார். 1968ஆம் ஆண்டு இந்தியாவிற்குக் குளிர் காலத்தில் வந்தவர் ஆறு மாதம் தங்கி ஓர் இலவச மருத்துவ முகாமை நடத்தினார். அந்த இலவச மருத்துவ முகாமுக்கு வந்தோர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஒரே நிமிடத்தில் ஒரு நோயாளியின் பிரச்சினையை அவர் இனம் கண்டு கொள்வார். உடனே அறுவைச் சிகிச்சைக்கு ஒரு தேதியைக் குறிப்பிட்டுக் கொடுப்பார். ஒரு நாளைக்கு ஒன்பது மணி நேரம் அறுவை மருத்துவப்பிரிவில் பணியாற்றுவார். நாளொன்றுக்கு 50 அறுவைச் சிகிச்சைகளைச் செய்வார். அதாவது ஐம்பது முகங்களை மலர வைப்பார்! கோணலான, பிளவுடைய உதடுகளைச் சரி செய்ய அவருக்கு 15 முதல் 20 நிமிடங்கள்தான் தேவை! இமைகளைச் சீராக்க அவர் எடுத்துக் கொள்ளும் நேரம் 5 முதல் 10 நிமிடங்கள்தான்! 1968ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்தியா வர அவர் தவறியதே இல்லை. மருத்துவ முகாமில் பல ஆண்டுகள் அவர் மட்டுமே சேவை ஆற்றி வந்ததை அறிந்து கொண்ட அமெரிக்க மருத்துவர்கள் பலர் உத்வேகம் பெற்றுத் தாங்களும் தங்கள் பணத்தைச் செலவழித்து விமானத்தில் வந்து தீக்ஷித்துடன் இணைந்து சேவை செய்ய ஆரம்பித்தனர்.

ஃப்ளையிங் ஆன் ஒன் என்ஜின்

"தனது கைகளைப் பிறர் மகிழப் பயன்படுத்தியோர் உலகில் வெகு சிலரே" என்று அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரான ஜோஷுவா வெய்ன்ஸ்டீன் இவரைப் போற்றிப் புகழ்ந்தார். ‘ஃப்ளையிங் ஆன் ஒன் என்ஜின்’ என்று இவரைப் பற்றி ஓர் ஆவணப் படமும் எடுத்தார். (இதை யூ ட்யூபில் அனைவரும் காணலாம்!).

2001ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்குத் பத்ம ஸ்ரீ பட்டம் வழங்கிக் கௌரவித்தது. நோபெல் பரிசுக்கும் இவர் பெயர் நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் தீக்ஷித்தோ, "எனக்குத் தெரியாமல் என் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. நோயாளிகளின் மலர்ந்த புன்னகையை விட எனக்கு வேறு எந்தப் பரிசு வேண்டும்?" என்றார்.

1930ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி வார்தா மாவட்டத்தில், அஞ்சல் அலுவலர் ஒருவருக்கு, ஆறு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர் தீக்ஷித். நாக்பூரில் மருத்துவம் பயின்றார். பின்னர்ச் சிறிது காலம் இராணுவத்தில் பணி புரிந்தார். 1959ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று வாழலானார். ஆப்தமாலஜிஸ்டான அவர் ஒட்டறுவை மருத்துவத்தில் (பிளாஸ்டிக் சர்ஜரியில்) ஆர்வம் கொண்டு நியூயார்க்கில் மௌண்ட் சினாய் மெடிகல் சென்டரில், சீரற்ற முக அமைப்பால் வாடி வருந்துவோரைக் கண்டு அவர்களின் துயரை நீக்கும் பணியில் ஈடுபட்டார்.

சோதனை மேல் சோதனை

1978க்கு முன்னர் ஸ்கையிங் செய்வார், டென்னிஸ் விளையாடுவார், வானொலியில் பாடவும் செய்வார். ஆனால் அந்த ஆண்டு அலாஸ்காவில் நடந்த ஒரு கார் விபத்தில் அவரது வலது பக்கம் இயக்கமற்றுப் போனது. மனம் சோராத தீக்ஷித் தனது இடது கையால் அறுவை மருத்துவம் செய்யக் கற்றுக் கொண்டு வல்லுநராகவே திகழ்ந்தார்.

1982இல் அவருக்குக் குரல்வளையில் (larynx) புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. ஆறு மாதமே உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் அவர் கீமோதெரபியை எடுக்க மறுத்து விட்டார். இழந்த குரலை ரேடியேஷன் சிகிச்சை மூலம் ஐந்து ஆண்டுகள் கழித்துச் சிறிது திரும்பப் பெற்றார். ஒரு குரல் கருவி மூலமாகவே வாழ்நாள் இறுதி வரை பேசி வந்தார்.

1994இல் அவருக்கு மாரடைப்பு வேறு வந்தது. அனைவரும் அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தினர். 2002இல் இன்னொரு மாரடைப்பு. ஆனால் அப்போதும் தன் சேவையை அவர் நிறுத்தவில்லை.

தொண்டு மூலம் இறைவனைக் காண முடியும்

சிறு குழந்தையாக இருக்கும்போது மகாத்மா காந்திஜியை அவர் சேவாகிராமில் தரிசித்திருக்கிறார். "’மனிதனுக்குச் செய்யும் தொண்டே இறைவனுக்குச் செய்யும் தொண்டு" என்று அவர் கூறியதை என்னால் அந்தச் சிறு வயதில் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இறைவனைத் தேவாலயத்திலோ கோயிலிலோ காண முடியாது; தொண்டின் மூலம்தான் உணர முடியும் என்பதை வயதானபோது என்னால் அறிய முடிந்தது" என்று கூறி நெகிழ்ந்தார்.

"ஒவ்வொரு முறை இந்தியா செல்வதும் எனக்குப் புனிதப் பயணம்; அங்கு அறுவை மருத்துவப்பிரிவே எனக்கு ஆலயம். அங்குள்ள நோயாளிகளிடம் நான் இறைவனைக் காண்கிறேன்" என்று கூறும் அவரைக் குணமடைந்தோர் காலில் பணிந்து தெய்வமாக வணங்கும்போது "ஓ! இறைவனே! இவை அனைத்தையும் உனக்கே அர்ப்பணிக்கிறேன்!" என்பார். தினசரி பூஜை, கீதை பாராயணம். கையில் ஜோதிர்லிங்க கீரீசனின் படம். அறுவை மருத்துவப்பிரிவே அவருக்கு எல்லாம். இதுதான் அவரது வாழ்க்கை முறை!

சேரும் பணம் தொண்டுக்கே!

15 லட்சம் டாலருடன் ஓர் அறக்கட்டளையையும் தனது ஆயுள் காப்பீட்டின் மூலமாக அவர் நிறுவினார். ஓர் ஆண்டுக் காப்பீட்டிற்கு அவர் செலுத்த வேண்டிய தொகை 45,000 டாலர். அதை அவர் உரிய முதலீட்டில் செலுத்தவே ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் டாலருக்கும் மேலாகக் கிடைத்தது. அதை அப்படியே அறுவைச் சிகிச்சைக்காகச் செலவழித்தார். ஊசி, மயக்க மருந்து போன்ற அறுவைச் சிகிச்சை பொருட்களுக்காக ஆண்டு ஒன்றுக்கு 50,000 டாலர் அவருக்குத் தேவையாக இருந்தது. "சீக்கிரமே மரணம் வந்து சேரும் என்ற நினைப்பே என்னை எல்லாப் பணத்தையும் செலவழிக்கத் தூண்டியது" என்றார் அவர்.

ஒவ்வோர் ஆண்டும் கூடுதலானோருக்குப் புன்னகை தர வேண்டும் என்ற அவர் லட்சியம் ஆண்டுதோறும் நிறைவேறி வந்தது – சென்ற ஆண்டு (2011) தவிர. ஆண்டுதோறும் இந்தியா வந்தவர் சென்ற ஆண்டு மட்டும்தான் வரவில்லை. வழக்கமாக டிசம்பர் 13ஆம் தேதி அவர் பிறந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஏராளமான குழந்தைகள் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அவருக்காகக் குழுமி இருந்தாலும், வர முடியாத உயரத்திற்கு அவர் சென்று விட்டார். அவருக்காக அழும் குழந்தைகளுக்குப் புன்னகையை யார்தான் தர முடியும்? ‘புன்னகை ரிஷி’தான் இல்லையே – இந்தப் பூவுலகில்!

‘படித்ததில் பிடித்ததை’ இந்த வாரம் படித்தீர்கள். உங்களுக்கும் பிடிக்கிறது இல்லையா? அடுத்த வாரம் ‘பார்த்ததில் ரசித்தை’ப் பகிர்ந்து கொள்வோம்!

About The Author