பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – (18.2)

இசைப் பேரரசியின் வாழ்வில் ஒரு சம்பவம்! – 2

M.S.Subbulakshmiஒரு முடிவுக்கு வந்த பிரசாத் நேராகக் காஞ்சிபுரம் சென்றார். பரமாசார்யாளைத் தரிசனம் செய்த அவர் தனது எண்ணத்தை அவரிடம் விவரிக்கலானார்.

"ஸ்வாமி, தங்கள் தந்தியைப் படித்ததும் மிகவும் வருத்தம் அடைந்தோம். வெங்கடேஸ்வரனைப் பிரார்த்தித்தேன். கோவிலின் கர்ப்பக்ரஹத்திலிருந்து வெளியே வரும்போது பஜனைக் குழு ஒன்று பிரதான வாயிலின் எதிரே உட்கார்ந்து கொண்டு அன்னமாசார்யரின் கீர்த்தனைகள் சிலவற்றைப் பாடிக் கொண்டிருந்தது. அவர்களின் பக்திக் கீர்த்தனைகளைக் கேட்டு மெய்மறந்து நின்றேன். ஓர் எண்ணம் அப்போது எனக்கு உதித்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த அன்னமாசார்யர், வெங்கடேஸ்வரரின் மீது பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். அவற்றில் பல அருமையான கீர்த்தனைகள் இன்னும் பிரபலமாகவில்லை. திருமலா தேவஸ்தானம் சிறிய அளவில் ஏதோ செய்திருந்தாலும் இன்னும் பெரிய அளவில் எதையாவது இது பற்றிச் செய்ய வேண்டும். ஆகவே எம்.எஸ் அம்மாவை (அவரை அம்மா என்றே அனைவரும் அன்புடன் அழைப்பது வழக்கம்) சந்தித்து அந்தக் கீர்த்தனைகளை டி.டி.டி-க்காக (டிடிடி- திருமலா திருப்பதி தேவஸ்தானம்) பாடுமாறு வேண்டிக் கொள்ளலாம் என்பது எங்கள் எண்ணம். இதுவரை அம்மா தியாகராஜர் கீர்த்தனைகளை மட்டுமே பாடியுள்ளார். அன்னமாசார்யர் கீர்த்தனைகளைப் பாடியதில்லை. ஆகவே அவற்றைப் பாடச் சொல்லிக் கேட்டால் அவர் மறுக்க மாட்டார். டி.டி.டி இவற்றை ரிகார்டுகளாக வெளியிடும்; லட்சக்கணக்கானோர் வாங்குவர். டி.டி.டி-க்கும் பெரிய வருவாய் வரும். எம்.எஸ் அம்மாவுக்கும் விற்பனை மூலமாக வரும் தொகையில் உரிய பங்கு கிடைக்கும். இதன் மூலம், எம்.எஸ் அம்மாவுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையும் தீர்ந்து விடும்."

காஞ்சி பரமாசார்யாள் சந்தோஷத்துடன், "பிரசாத்! கடவுள், தான் இருப்பதைப் பல வித ரூபங்களில் காண்பிக்கிறார். பல மர்மமான வழிகளில் தனது வருகையை அவர் வெளிப்படுத்துகிறார். நீ கோவிலின் முன் வாயிலில் பார்த்ததாகச் சொன்னாயே, அந்த ஏழை பஜனைப் பாடகர்கள் ரூபத்தில் வெங்கடேஸ்வரனே வந்து விட்டான் போலும்! ஒருவேளை அவர்கள் மானுட ரூபத்தில் வந்த கந்தர்வர்கள்தானோ என்னவோ! அவர்கள் அன்னமாசார்யரின் கீர்த்தனைகளைப் பாடியது, உனக்கு எம்.எஸ் அம்மா விஷயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்கத்தானோ என்னவோ! உன் ஒருவனால்தான் ஒருவேளை அவர்கள் பார்க்கப்பட்டிருக்கக் கூடும்! அவர்களைப் பார்த்து நீ புன்னகை செய்து அங்கிருந்து நகர்ந்தவுடன் அவர்கள் மறைந்து விட்டார்களோ என்னவோ! யாருக்குத் தெரியும்?"

பரமாசார்யாள் எதைச் சொல்ல வேண்டுமென்று அதைச் சொன்னாரோ, அதன் உள்ளர்த்தத்தை (வந்தது கந்தர்வர்களே என்பதை) உணர்ந்த பிரசாத் பேச்சின்றி அப்படியே உறைந்து விட்டார்.

பரமாசார்யாள் தொடர்ந்தார் : "பிரசாத்! இந்த உலகில் ஒவ்வொரு விஷயமும், ஒவ்வொரு உலக நடப்பும் இயற்கையின் தெய்வீகத் திருவிளையாடலின்படியே நடக்கிறது. நல்லதோ, கெட்டதோ அதற்குப் பின்னர் தெய்வீக நோக்கம் ஒன்று இருக்கிறது. தனக்குப் பல்லாண்டுகளாகச் சேவை செய்த ஒருவர் துன்பத்தால் துடிக்கிறார் என்றால் கடவுள் சும்மா இருப்பார் என்று நினைக்கிறாயா? அவரே நேரில் நம் முன் தோன்ற முடியாது என்பதால், அவர் உன்னையும் என்னையும் கருவிகளாகக் கொண்டு தான் செய்ய நினைத்ததைச் செய்கிறார். கடவுளுக்கு அவரது வேலை என்ன என்று நன்கு தெரியும். அறியாதவனாக இருக்காதே! அவரை எதற்கும் குறை சொல்லாதே!"

பரமாசார்யாள் சொன்னதைக் கேட்டு விதிர்விதிர்த்துப் போன பிரசாத்தால் என்ன நடக்கிறதென்றே நம்ப முடியவில்லை. சிவனின் அவதாரம் என்று பக்தர்களால் போற்றப்படும் அவரது காலடிகளில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார்.

பரமாசார்யாள் மேலும் தொடர்ந்தார்:

"உனது யோசனை பிரமாதமானது. எம்.எஸ்-ஸுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சங்கடமான தருணத்தில் உதவுவதற்கு அவர்கள் ஓடோடி வருவார்கள். ஆனால் எம்.எஸ்.சுப்புலெக்ஷ்மியும் சதாசிவமும் மிக அபாரமான சுயகௌரவமும் சுயமதிப்பும் கொண்ட, உதவி எதிர்பார்க்காத தம்பதிகள். இதுவரை அவர்கள் தாங்கள் எப்படி வாழ வேண்டுமென்று நினைக்கிறார்களோ அப்படியே வாழ்ந்து வருபவர்கள். கடவுளிடமிருந்து கூடத் தாங்கள் கேட்காத எந்த உதவியையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஆகவே ஜாக்கிரதை! நீ பண உதவி செய்வதற்காகத்தான் வந்திருக்கிறாய் என்று அவர்கள் நினைத்து விடக் கூடாது! அப்படி நினைத்து விட்டால் நீ சொல்வதை அவர்கள் நிராகரித்து விடுவார்கள். இது நுட்பமான விஷயம். ஆகவே ஜாக்கிரதையாகப் பார்த்து நடந்து கொள்! கடவுள் உனக்குத் துணை புரிவாராக!"

அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் வேகமாக நிறைவேறலாயின. அன்னமாசார்யர் ம்யூசிக் ஆல்பம் திட்டத்திற்குத் தேவையான அனுமதியை டி.டி.டி போர்டிலிருந்து பிரசாத் உடனடியாகப் பெற்றார்.

டி.டி.டி போர்டின் அன்றைய சேர்மன் ரமேசன் தனது எக்ஸ்கியூடிவ் ஆபீசர் சொன்ன யோசனையால் அகமிகமகிழ்ந்து போனார். டி.டி.டி போர்டுக்கு ஒரு பிரமாண்டமான இசை மேதைக்குச் சங்கடமான ஒரு தருணத்தில் உதவும் வாய்ப்பும் கிடைக்கிறது. அத்தோடு மறைந்திருக்கும் அன்னமாசார்யரின் கீர்த்தனைகள் பிரபலமாகவும் வழி வகுக்கிறது.

அடுத்தது என்ன? ஒருநாள் காலை…

பிரசாத்தும், ரமேசனும் இன்னும் சில அதிகாரிகளும் வெங்கடாசலபதியின் பெரிய திருவுருவத்துடன் சென்னையில் உள்ள எம்.எஸ் அம்மாவின் சிறிய வாடகை வீட்டின் முன்னால் வந்து நின்றார்கள்.

(தொடரும்)

About The Author