பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 20.1

கடவுளைத் தேடி ஒரு பயணம்! – 1

கடவுளைத் தேடி ஒரு பயணம் செய்வது என்பது கேட்கவே அரிதான ஒரு விஷயம். அதை மேற்கொண்டு அதில் தான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் ஒரு புனிதர் என்றால் அது இன்னும் அபூர்வமான விஷயம்.

ஆனால் அப்படி ஒரு புத்தகத்தின் சில பகுதிகளைத்தான் நாம் இப்போது படிக்கப் போகிறோம். புத்தகத்தின் பெயர் ‘IN QUEST OF GOD’

அவர் பெயர் பூர்வாசிரமத்தில் விட்டல் ராவ். வட கேரளத்தில் கன்ஹன்காட் என்ற இடத்தில் 1884ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி அவர் பிறந்தார். அன்று வியாழக்கிழமை, பௌர்ணமி! அது ஹனுமானின் ஜெயந்தியாக வேறு அமைந்திருந்தது. அது மிகவும் பொருத்தமானதுதான். தன் வாழ்நாள் முழுவதும் "ஸ்ரீராம ஜெய்ராம ஜெய்ஜெய ராம ஓம்! ஸ்ரீராம ஜெய்ராம ஜெய்ஜெய ராம ஓம்" என்று இடையறாது சொல்லி வந்த ஸ்வாமி ராம்தாஸ் அவதரிக்க ஏற்ற நாள்தானே அது! தகப்பனார் பெயர் பாலகிருஷ்ண ராவ், தாயார் லலிதா பாய்.

குழந்தை விளையாட்டாகவே வளர்ந்தது. படிப்பில் அவ்வளவாகக் கவனம் இல்லை என்றாலும் கூடப் புத்தகங்கள் அனைத்தையும் படிப்பதில் விட்டல் ராவுக்கு ஆர்வம் அதிகம். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோல்வி. ஓவியப் பயிற்சியில் இறங்கினார் விட்டல் ராவ். பின்னர் பம்பாயில் டெக்ஸ்டைல் என்ஜினியரிங்கில் சேர்ந்தார்.

1908இல் ருக்மாபாயை மணந்தார். 1913இல் ரமாபாய் என்ற பெண் குழந்தையும் பிறந்தது.

வாழ்க்கையின் ஓட்டத்தில் லயித்துச் சென்று கொண்டிருந்த விட்டல்ராவ் 1917இல் மங்களூருக்கு வந்து மாமனாரின் வணிகத்தில் சேர்ந்தார். மெல்ல மெல்ல மனம் ஆன்மிகத்தை நாடியது. சகோதரர் சீதாராம்ராவின் இல்லத்தில் நடந்த பஜனைகளில் கலந்து கொண்டு தன்னை மறந்தார். ராம பக்தி அதிகமாகியது. விட்டல் ராவின் தந்தையார் அவருக்கு ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஜெய் ராம் என்ற மந்திரத்தை உபதேசம் செய்தார்.

ஒரு நாள்…

அனைத்தையும் துறந்து விட்டு ராமனைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆவல் அதிகமாகியது. தன் முன்னே இருந்த Light of Asia என்ற புத்தகத்தின் ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்தார். அதில்

"For now the hour is come when I should quit
This golden prison, where my heart lives caged,
To find the Truth; which henceforth I will seek,
For all men’s sake, until the truth be found."

என்ற வரிகள் இருந்தன!

(இதோ நான் வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தத் தங்கக் கூண்டில் எனது இதயம் பூட்டப்பட்டுள்ளது. எல்லா மனிதருக்காகவும் உண்மை காணப்படும் வரையில் நான் உண்மையைத் தேடுவேன்).

அடுத்து New Testament நூலிலும் ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்தார். அதில் ஏசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் காணப்பட்டன:

"And everyone that hath forsaken houses or brothers or sisters or
father or mother or wife or children or lands for my name’s sake, shall
receive a hundredfold and shall inherit everlasting life."

(எவர் ஒருவர் தங்கள் வீடு, சகோதரிகள் அல்லது தந்தை அல்லது தாய் அல்லது மனைவி அல்லது குழந்தைகள் அல்லது நிலங்களை என் பெயரால் துறக்கிறார்களோ அவர்கள் நூறு மடங்கு அதிகம் பெற்று அழிவில்லாத வாழ்வைப் பெறுவார்கள்).

மனம் மகிழ்வுற்ற விட்டல் ராவ் அடுத்து கீதையையும் அதே போலத் திறக்க அதில்,

"ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ I
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: II"

என்ற வரிகள் காணப்பட்டன!

(எல்லா தர்மங்களையும் துறந்து என் ஒருவனையே சரண் அடை! நான் உன்னை அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே!).

மூன்று பெரும் அவதாரங்கள் – புத்தர், கிறிஸ்து, கிருஷ்ணர்- ஒரே பாதையைக் காண்பித்தது அவருக்கு அதிசயமாக இருந்தது. துறவு! அனைத்தையும் துறந்து விடு! என்ற சந்தேசத்தை விட்டல் ராவ் உளமார ஏற்றுக் கொண்டார். வீட்டை விட்டு வெளியேறினார். எளிய ஓர் ஆடையோடு – உடம்பின் மேலும் கீழுமாக!

இரண்டு கடிதங்களை எழுதினார். ஒன்று தன் அருமை மனைவிக்கு. அடுத்தது ஒரு நண்பருக்கு. உலகியல் ரீதியாக என்னென்ன செய்ய வேண்டும், யாருக்கு எவ்வளவு கடனை அடைக்க வேண்டும் என்ற விவரங்களை அதில் எழுதி இருந்தார்.

ஒருநாள் காலை ஐந்து மணிக்குக் கடவுளைத் தேடி ஒரு மாபெரும் பயணத்தைத் தொடங்கினார். உடல், மனம், ஆன்மா மூன்றையும் ராமனிடம் அர்ப்பணித்து விட்டு அந்த அபூர்வமான பயணம் தொடங்கியது. அதுதான் எவ்வளவு சுவாரசியமான பயணம்! அதில்தான் ராமன் அவருக்கு எவ்வளவு அனுபவங்களைக் கொடுத்தான்!

110 பக்கங்களில் அந்த அற்புதமான கடவுளைத் தேடும் பயணம் விரிகிறது. அதில் சில பகுதிகளைப் பார்ப்போம்!

–தொடரும்…

About The Author

1 Comment

  1. thirupathi

    சிர் ப்ல்ச் சென்ட் கிச் போக்ச் ப்ய் மைல்ட் இட்

Comments are closed.