பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 21

செக்ரடேரியேட்

Secratariat

செக்ரடேரியேட் என்பது ஒரு குதிரையின் பெயர்! ஒரு குதிரைப் பந்தயத்தை வைத்து 123 நிமிடங்கள் ஓடக்கூடிய சுவையான ஒரு படத்தை எடுப்பது சாத்தியமா? செக்ரடேரியேட் படத்தைப் பார்ப்பவர்கள் அது சாத்தியம்தான் என்று கூறுவதோடு எப்படி இப்படி அருமையான ஒரு கதைக் களத்தை அமைத்து, அதில் குணச்சித்திரப் பாத்திரங்களைப் படைத்து, அத்தோடு குதிரையையும் ‘நடிக்க’ வைத்தார்கள் என்று வியந்து கூறுவர். வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் எடுத்த படம் என்பதை நிரூபிக்கும் இந்தப் படத்தை இயக்கியவர் ராண்டால் வாலஸ். 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதி இந்தப் படம் வெளியிடப்பட்டது.

அருமையான கதை! பென்னி செனரி ஒரு சாதாரண இல்லத்தரசி. அவருடைய தந்தை வர்ஜினியாவில் குதிரைப் பந்தயத்தில் ஊறியவர். குதிரைப் பந்தயத்திற்காகக் குதிரைகளை வளர்ப்பவர். ஆனால் இப்போதோ வயதாகி உடல் தளர்ந்து வாடுகிறார். அவர் கம்பெனியோ தள்ளாடுகிறது. தனது தாயார் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டுத் தான் இளமைப்பருவத்தில் வாழ்ந்த தனது வீட்டிற்கு வந்த பென்னி, தந்தையின் நிலையைக் கண்டு வருந்துகிறார். அவரது செக்ரட்டரி திருமதி ஹாம், பென்னிக்கு ஆறுதல் அளிக்கிறார். ஆண் ஆதிக்கம் நிறைந்த குதிரைப் பந்தய உலகில் துணிந்து இறங்கித் தன் நிறுவனத்தைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார் பென்னி. இறுதிச் சடங்கிற்கு வந்த ஹாங்காக்கும் அவர் மகனும் நஷ்டத்தில் இருக்கும் கம்பெனியைத் தூக்கி நிறுத்த முயலும் பென்னிக்கு உதவ முன்வருகின்றனர். தவறான பேரத்தில் ஈடுபட்ட தனது குதிரைப் பயிற்சியாளரை முதலில் வேலையை விட்டு நீக்குகிறார் பென்னி. புதிய ட்ரெயினராக ல்யூசியன் லாரின் என்ற ஒருவரை அறிமுகப்படுத்துகிறார் ஹாங்காக். இங்குதான் கதை சூடுபிடிக்கிறது. குதிரை செக்ரடேரியேட் பந்தயத்தில் களம் இறங்குகிறது. ஆனால் நான்காம் இடத்தைத்தான் பிடிக்கிறது.

இதற்கிடையில் பென்னியின் தந்தை மரணமடையவே செக்ரடேரியேட்டை வாங்க 60 லட்சம் டாலரைத் தரப் போட்டியாளர் முன்வருகிறார். எஸ்டேட் டாக்ஸைக் கட்ட அந்தப் பணம் அவசியம் தேவை. என்றாலும் பென்னி செக்ரடேரியேட்டை விற்க மறுக்கிறார்.

தன் குதிரையின் மீது அபார நம்பிக்கை கொண்ட பென்னி, ட்ரிபிள் க்ரௌனில் செக்ரடேரியேட் ஜெயிக்கும் என்று நம்புகிறார். 25 வருடங்களில் எந்தக் குதிரையும் அப்படி ஒரு வெற்றியைப் பெற்றதில்லை.

பென்னியின் நம்பிக்கையைக் குதிரை வீண் போக்கவில்லை. டெர்பி மற்றும் ப்ரெக்னெஸில் வெற்றி பெற்று பெல்மாண்டிலும் 82 கஜம் முன்னே சென்று குதிரை வென்று ட்ரிபிள் க்ரௌனை அடைகிறது! குதிரைப் பந்தயக் காட்சிகள் அருமையாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன! பென்னியாக டயானா லேன் அருமையாக நடித்துள்ளார்! வெவ்வேறு முக பாவங்களைக் காட்ட வேண்டிய பாத்திரமாக அமைவதால் அதில் வெற்றி பெறுவது என்பது சற்று கஷ்டமான காரியம் ஆகும். ஆனால் டயானா அனாயாசமாக நடித்துள்ளார்! குதிரை ட்ரெய்னர், செக்ரட்டரி ஹாம் போன்ற பாத்திரங்களில் நடிப்போரும் தங்கள் பங்கிற்கு அளவாக நடித்துப் படத்திற்கு மெருகேற்றுகின்றனர்.

வில்லியம் நெக் என்பவர் எழுதியுள்ள ‘செக்ரடேரியேட் : தி மேகிங் ஆஃப் எ சாம்பியன்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஆலோசகராகவும் அவர் பணியாற்றினார். பல குதிரைகள் இந்தப் படத்தில் நடிக்க வைக்கப்பட்டன. செக்ரடேரியேட் குதிரையின் வரலாறு 1973இல் ட்ரிபிள் க்ரௌனை வென்ற குதிரையின் வரலாறு ஆகும்.

வெளியிட்ட அன்றே 40 லட்சம் டாலரை வசூலில் அடைந்து சாதனை படைத்தது இந்தப் படம்! அது ஓடிய நாட்களில் வந்த மொத்த வசூல் 6 கோடி டாலர்கள்!

குதிரையைப் பற்றிய பல நுணுக்கமான விவரங்களை இந்தப் படம் பார்ப்பவர்கள் அறிய முடியும். ஒரு பந்தயத்தில் செக்ரடேரியேட் ஏன் தோற்றது என்பதை ஆராயப் போனபோது அதன் வாயில் இருந்த ஒரு சிறு கட்டி அதன் சக்தியைப் பாதித்ததை அறிகின்றனர். உடனே அது குணமாக்கப்பட்டவுடன் இழந்த வலிமையைப் பெறுகிறது. குதிரை ப்ரீடிங், பயிற்சியாளர்களின் திறமை, ஜாக்கிகளின் நிபுணத்துவம் அனைத்தையும் அறிய வித்தியாசமாக இருக்கும் ஒரு படம் செக்ரடேரியேட்.

டி.வி.டி-யிலும் வந்திருப்பதால் பார்ப்பது சுலபம்தான்!

அடுத்த வாரம் ‘படித்ததில் பிடித்தது’…

About The Author

1 Comment

Comments are closed.