பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (10.2)

வேதக் கணிதம் கண்ட ஸ்ரீபாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்ய ஸ்வாமிகள் – 2

பனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஜஸ்டிஸ் என்.ஹெச்.பகவதி மற்றும் பிரபல இசை நிபுணரான ஓம்கார்நாத் தாகூர் ஆகியோரின் பெருமுயற்சியால் 1965 ஆம் ஆண்டு (சங்கராசாரியர் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்) ‘வேதக் கணிதம்’ என்ற புத்தகம் அச்சிடப்பட்டு வெளியுலகிற்குக் கிடைக்கப் பெற்றது!

Sankaracharya Swamigal1958ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி, கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கணிதம் பயிலும் மாணவர்களிடையே உரை நிகழ்த்தும்போது பாரதி கிருஷ்ண தீர்த்தர், வேதக் கணிதம் அதர்வண வேதத்தில் உள்ளதாகவும், கணித சூத்ரம் அல்லது சுலப சூத்ரங்கள் என அழைக்கப்படும் சூத்திரங்களில் அனைத்துக் கணித முறைகளும் விளக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சூத்திரங்களை ஆராய்ந்த மேலை நாட்டு அறிஞரான கோல்ப்ரூக்கிற்கு (Colebrook) அவை என்னவென்று புரியவில்லை. இவற்றைப் பற்றி ஆராய்ந்த இன்னொரு அறிஞரான ஹொரேஸ் ஹேமென் வில்ஸனும் (Horace Hayman Wilson) ‘நான்சென்ஸ்’ என்று தனது ‘மேலான கருத்தைத்’ தெரிவித்தார். இவற்றை ஆராய்ந்த இன்னொரு அறிஞரான ஆர்.டி.கிரிப்பித் என்பவரோ ‘சுத்த அபத்தம் – அட்டர் நான்சென்ஸ்’ (Utter nonsense – R.T.Griffith) என்று விமரிசித்தார்.

இவற்றையும் பாரதி கிருஷ்ண தீர்த்தர் சுட்டிக் காட்டினார் தன் உரையில்! சம்ஸ்கிருத பாஷையில் ஒரு தனித் தன்மை உண்டு! ஒரே ஸ்லோகத்தில் பல விதமான பொருள்கள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும். கிருஷ்ணரைப் பற்றித் துதிக்கும் ஸ்லோகத்தில் ‘பை’யின் மதிப்பை 32 இலக்கங்கள் துல்யமாகக் காணலாம். மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் கம்ஸனின் ராஜ்யத்தில் ஆரோக்கியமற்ற சூழ்நிலை நிலவி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதை மட்டுமே நாம் அறிய முடியும். ஆனால் தலைப்பில் கணித சூத்திரங்கள் என்று தலைப்பிடப்பட்டிருக்கும். ஆகவே அந்த சூத்திரங்களில் உள்ளார்ந்த அர்த்தத்தைக் கண்டுபிடிக்கத் தான் முயன்றதாக பாரதி கிருஷ்ண தீர்த்தர் தெரிவித்தார். பழைய அகராதிகளான விக்வ அமர, ஆர்ணவ சப்தகாலபத்ருமம் உள்ளிட்ட பல கோசங்களை அவர் ஆராய்ந்து வெறும் பதினாறே சூத்திரங்களில் கணிதத்தின் பல்வேறு கிளைகளான அல்ஜீப்ரா, ஜாமெட்ரி, ட்ரிக்னாமெட்ரி, ப்ளெயின் மற்றும் ஸ்பெரிகல் ஜாமெட்ரி, கோனிக்ஸ், பிஸிக்ஸ், டிபரன்ஷியல் மற்றும் இன்டெக்ரல் கால்குலஸ், அப்ளைட் மேதமேடிக்ஸ் (டைனமிக்ஸ், ஹைட்ரோஸ்டாடிக்ஸ், ஸ்டாடிக்ஸ், கினமேடிக்ஸ் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படும் சூத்திரங்கள்) உள்ளிட்ட அனைத்தையும் கண்டுபிடித்தார்.

பண்டைய வேத புராண இதிஹாஸங்களில் காணப்படும் ஸ்லோகங்கள் மற்றும் கவிதைகளில் மேலெழுந்தவாரியாகத் தோன்றும் அர்த்தம் ஒன்று உண்டு. ஆழ்ந்து நோக்கினால் புதை பொருளாக அல்லது மறை பொருளாக அவற்றில் பல அர்த்தங்கள் இருக்கும். மறைந்திருக்கும் பல விஷயங்களைக் கொண்டிருப்பதனால்தான் அதை ‘மறை’ என்று அழைத்தனர். உள்ளுணர்வு இருந்தால் மட்டுமே ஒருவரால் அனைத்து அர்த்தங்களையும் அறிய முடியும்! தனது உள்ளுணர்வு மூலம் பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்ய ஸ்வாமிகள் இந்த ஸ்லோகங்களின் உண்மைப் பொருளைக் கண்டறிந்து உலகிற்கு உணர்த்தினார்!

மிக அருமையான, ஆச்சரியம் ஊட்டும் ஒரே ஒரு ஸ்லோகத்தைப் பார்க்கலாம். கிருஷ்ணனையும் சிவனையும் துதிப்பதாக அமையும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை சம்ஸ்கிருதத்தில் இன்றும் வழக்கத்தில் இருந்து வரும் கடபயாதி சங்க்யா முறையில் பார்த்தால் கணிதத்தில் நாம் கூறும் ‘பை’யன் (π) மதிப்பு துல்யமாக 32 இலக்கங்கள் வரை தெரிய வரும்!

3 1 4 1 5 9 2 6 5 3 5 8 9 7 9 3

கோபிபாக்யமதுவ்ரதா ஸ்ரிங்கிசோடதிசண்டிகா

2 3 8 4 6 2 6 4 3 3 8 3 2 7 9 2

கலஜிவிடகடவ கலஹாலாரசந்தரா

மேலே உள்ள இந்த ஸ்லோகத்தைப் பற்றி விளக்கமாக யூ டியூபில்,

http://www.youtube.com/watch?v=n7wCF0e_Nhg&noredirect=1

என்ற தளத்தில் 4 நிமிடம் 34 விநாடிகளில் நன்கு தெரிந்து கொண்டு வியக்கலாம்!

சரி, வேதக் கணிதத்தைப் பயில வேண்டுமே என்று விரும்புவோர் என்ன செய்வது? கவலை வேண்டாம்! முழுப் புத்தகத்தையுமே கீழ்க்கண்ட தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்:

Google Books

ஸ்ரீபாரதி கிருஷ்ணதீர்த்த சங்கராசாரிய ஸ்வாமிகளின் அரிய வரலாற்றையும் வேதக் கணிதம் பற்றி அவர் கண்டுபிடித்த விதம் பற்றியும் முழுதும் அறிய சம்போதி தொகுதி 23ஐத் தரவிறக்கம் செய்து கொண்டு அதில் வேதக் கணிதம் பற்றிப் படிக்கலாம்.
சம்போதி தொகுதி 23ஐத் தரவிறக்கம் செய்ய வேண்டிய தளம் :-

http://www.archive.org/details/sambodhivol23015259mbp

வேதக் கணிதம் பற்றிய யூ டியூப் அறிமுக உரை, வேதக் கணிதப் புத்தகம், அதைக் கண்டுபிடித்தவரின் வரலாறு ஆகிய அனைத்தும் கொண்ட மூன்று இணைய தளங்கள் கிடைத்து விட்டனவே! இனி என்ன, நாம் வேதக் கணித மேதைகள் ஆவது சுலபம் தானே!

**************

அடுத்த வாரம் ‘பார்த்ததில் ரசித்தது’…

About The Author