பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (7)

ஸிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ்

Six Days Seven Nightsஒரு டூயட், ஒரு சண்டை, ஒரு காமடி. பிறகு இன்னொரு டூயட், இன்னொரு சண்டை என்று இப்படி இரண்டரை மணி நேரம் போய்ய்ய்க் கொண்டே இருக்கும் தமிழ், ஹிந்தி இத்யாதி இந்தியத் திரைப்படங்களைப் பார்ப்போருக்கு வித்தியாசமான படம் ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்றால் 1998ஆம் ஆண்டு வெளியான ‘ஸிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸை’ச் சொல்லலாம்.

ராபின் மன்ரோ ஒரு அழகிய யுவதி. ‘டேஜில்’ என்ற ஃபேஷன் பத்திரிக்கையில் பணியாற்றுபவள். தனது பாய் ஃப்ரண்ட் ப்ராங்குடன் விடுமுறையைக் கழிக்கத் தென் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மகடி என்ற தீவுக்கு வருகிறாள். அங்கு க்வின் என்ற பைலட்டுடன் ஓர் உரசல். இருவரும் விமானத்தில் பறக்க, அது ஆளரவம் அற்ற ஒரு தீவில் க்ராஷ் லேண்ட் ஆகிறது. உடைந்த விமானம். ஒரு பெண். ஒரு ஆண். கதைக்குக் கேட்கவா வேண்டும்! இடையில் கடற்கொள்ளையைப் பார்த்து விட்டதால், உயிருக்கே போராடும் அவர்களை அந்தக் கொள்ளையர் வேறு துரத்துகிறார்கள்.

சண்டையில் ஆரம்பித்த இருவரும் காதல் வயப்பட்டு இறுதியில் இணைகிறார்கள் என்பதை சுவாரசியமாகச் சொல்கிறார் டைரக்டர் இவான் ரெய்ட்மேன்.

விமானியாக ஹாரிஸன் போர்ட். ராபின் மன்ரோவாக அன்னி ஹெச். அளவோடு நடித்துப் பாராட்டைப் பெறுகின்றனர்.
படக் காட்சிகள் கவாய் என்ற இடத்தில் படம் பிடிக்கப்பட்டவை. ஹாரிஸன் போர்ட் விமானம் ஓட்டும் லைசென்ஸைக் கொண்டவர் என்றாலும் படத்திற்காக விசேஷ அனுமதி பெற வேண்டி இருந்ததாம்.

அதே தீவில் முன்னர் ஒரு விமானம் உடைந்து கிடக்க, அதிலிருந்து பாகங்களை எடுத்துத் தனது விமானத்தைப் பழுது பார்த்து விமானி க்வின் தனது தீவிற்கு வந்து சேருகிறார். ஓடும் ஆற்றில் விமான பாகங்களைக் கொண்டு வரும் காட்சி வெகு நேர்த்தி! ஆறு நாட்கள் ஏழு இரவுகளில், தனித்த தீவில், அபாயகரமாக, உயிருக்காகப் போராடும் ஒரு பெண்ணும் ஆணும் மனதால் இணைவதை இயல்பாக யாரும் ஏற்றுக் கொள்ள முடியும்! படத்தில் வரும் நறுக்குத் தெறித்தாற்போல உள்ள சிறு சிறு வசனப் பொறிகள் ஜோர்!

அது சரி, பாய் ஃப்ரண்டுடன் விடுமுறையைக் கழிக்க வந்த ராபின் மன்ரோ க்வின்னுடன் இணைந்து கொண்டால் பாய் ஃப்ரண்ட்டின் கதி என்ன என்ற கேள்வி எழுகிறதில்லையா! அதற்கு ஒரு குட்டிக் கதை இருக்கிறது. பாய் ஃப்ரண்ட் கோ-பைலட்டாக வந்த ஒரு இளம் பெண்ணுடன் உறவு கொள்ள, விஷயம் அவன் மனதையே வருத்துகிறது. இத்தனைக்கும் அவன் மீட்புப் பணியில் மன்ரோவைத் தேடி அலைகிறான்! இறுதியில் அவளிடம் உண்மையைச் சொல்ல, அவன் வழி பிரிகிறது. மன்ரோ க்வின்னுடன் சேர்கிறாள். ஹாலிவுட் மசாலாதான் என்றாலும் களம் புதிது என்பதால் கதையும் புதிது என்பது போல் இருக்கிறது!

படத்தில் வரும் பல காட்சிகளில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்து இணையத்தளத்தில் பகிர்ந்து கொள்ளும் குறும்புக்கார ரசிகர்களை யார் என்ன செய்ய முடியும்! ஹாலிவுட் படத்தில் கூடக் கண்டினியுடி இல்லை!

க்வின்னும் மன்ரோவும் ஒரு குகையிலிருந்து வெளியே வரும்போது மன்ரோவின் தலையில் ஒரு தேள் விழுகிறது. ஆனால் அது ஒரு பொம்மைத் தேள் என்பதை யார் வேண்டுமானாலும் பார்த்துச் சிரிக்கும்படி அது அடுத்த ஷாட்டில் சிறியதாய் இருக்கிறது!

முதலில், விழுந்து நொறுங்கிய விமானம் கடற்கரையிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் பின்னால் வரும் காட்சியில் அது கடலுக்கு மிக அருகில் இருக்கிறது. கண்டினியுடி இல்லை!

முதலில் நல்ல அடர்த்தியான தலை முடியுடன் இருக்கும் கதாநாயகன் கடைசிக் காட்சிகளில் நல்ல ஹேர் கட் செய்தது போல் காட்சி தருகிறார். "ஆள் இல்லாத ஐலேண்டில் எப்படி ஐயா பார்பர் வந்தார்?" என்று ரசிகர்கள் கேட்கின்றனர். இப்படி பல ப்ளாப்!
என்றாலும் படம் சூப்பர் ஹிட்! 70 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட படம் 164 மில்லியன் சம்பாதித்தது!

ஒரே ரீதியிலான படங்களையே பார்த்துப் பார்த்துச் சலிக்கும் தமிழ் உள்ளிட்ட இந்தியத் திரைப்பட ரசிகர்கள் வெவ்வேறு கதைக் களங்களைக் கொண்ட படங்களையும் ஆர்வத்துடன் பார்க்க முன்வந்தால்தான் இந்தியத் திரையுலகம் வளரும். ஆகவே நம் ரஸனை வளரப் பலவித நிலைக்களங்களைக் கொண்ட படங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் இன்றியமையாதது. பழைய படம்தான்! என்றாலும் ஒரு புதிய கதைக் கருவைக் கொண்டது ‘ஸிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ்’. அந்த வகையில் ஜஸ்ட் பாஸ் மார்க் வாங்கிய படம்தான்! பாருங்கள்! ரசியுங்கள்!

*************

அடுத்த வாரம் ‘படித்ததில் பிடித்தது’…

About The Author