பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (9)

தி டேகிங் ஆஃப் பெல்ஹாம் 123 (The Taking of Pelham 123)

2009ஆம் ஆண்டு வெளியான ‘தி டேகிங் ஆஃப் பெல்ஹாம் 123’ அருமையான ஒரு ஹாலிவுட் படம். அது என்ன 123 என்று கேட்பவர்களுக்கு, ஒரு மணி 23 நிமிடத்திற்கு கிளம்பும் சப்-வே ரயிலை அது குறிக்கிறது என்பதே பதில். 106 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் டென்ஸல் வாஷிங்டன் அற்புதமாக நடித்துள்ளார். இவரை பயமுறுத்தும் கேரக்டராக நடித்துப் பாராட்டுப் பெறுபவர் ஜான் ட்ரவோல்டா.

The Taking of Pelham 123மார்டன் ஃப்ரீட்குட் (ஜான் காடே என்ற புனைபெயரில் எழுதியது) எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. 1974இல் ஒருமுறை வெளிவந்தது. பின்னர் தொலைக்காட்சிக்காக இன்னொரு முறை 1998இல் தயாரிக்கப்பட்டது. மூன்றாவது ரவுண்ட் இது!

ரைடர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவன் (ஜான் ட்ரவோல்டா) மூன்று சகாக்களுடன் பெல்ஹாம் பே பார்க் ஸ்டேஷனிலிருந்து ஒரு மணி இருபத்தி மூன்று நிமிடத்திற்குக் கிளம்பிய ரயிலைப் பயணிகளுடன் கடத்துகிறான். நூறு லட்சம் டாலர் பணத்தை ஒரு மணி நேரத்திற்குள் தர வேண்டும் என்பது ரைடரின் கட்டளை. இல்லையேல் பயணிகளைக் கொல்வேன் என்கிறான். அலறிப்போன நிர்வாகம் பணத்தைத் தயார் செய்கிறது. ரைடர் பேச்சுவார்த்தை நடத்தும் ஒரே நபர் வால்டர் கார்பர் (டென்ஸல் வாஷிங்டன்). வால்டரைச் சீண்டி சீண்டி ரைடர் நடத்தும் சம்பாஷணை நம்மை வெகுவாக ஈர்க்கிறது.

ரயிலில் இருந்த ஒரு லாப்டாப் மூலம் தன் காதலியை ஒருவன் தொடர்பு கொள்ள, அதன் மூலம் நிகழ்ச்சி லைவ் ஆக அனைவருக்கும் தெரிய வருகிறது. வால்டரை பேச்சுவார்த்தையிலிருந்து விடுவித்து நியூயார்க் எமர்ஜென்ஸி சர்வீஸ் யூனிட் ஆணையிட, இதை அறிந்து கொண்ட ரைடர் கோபம் கொண்டு ரயிலின் மோட்டார்மேனைச் சுட்டுக் கொல்கிறான். வால்டர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர, ரைடர் வால்டரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் குடைந்து 35,000 டாலர் லஞ்சம் வாங்கியது உண்மையா என்று கேட்கிறான். இந்தச் சம்பவத்தால் அவன் பதவியில் கீழ் நிலைக்குத் தள்ளப்படுவதும் அதைக் குழந்தையின் டியூஷனுக்காக வாங்கியதாக வால்டர் சொல்வதும் மனித உணர்வுகளைத் தூண்டி விடும் காட்சிகளாக அமைகின்றன.

நியூயார்க் மேயர் பெடரல் ரிஸர்விலிருந்து பணத்திற்கு ஏற்பாடு செய்ய, பணம் அவசரம் அவசரமாகக் கொண்டு வரப்பட, அதை வால்டரே கொண்டு வர ஆணை பிறப்பிக்கிறான் ரைடர். இதற்கிடையே, ரைடர் பத்து வருட தண்டனை பெற்ற குற்றவாளியான டென்னிஸ் ஃபோர்ட் என்பதை அனைவரும் அறிகின்றனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட ரைடர் சாமர்த்தியமாகத் தப்புகிறான். வால்டர் அவனைத் துரத்த, இறுதியில் தன்னைப் போலீஸ் கைது செய்வதற்கு முன்பாகப் பத்து விநாடிகளுக்குள் சுட்டுக் கொல்லுமாறு வால்டரை ரைடர் வேண்டுகிறான். வால்டர் டிரிக்கரை அழுத்த ரைடர் இறக்கும்போது வால்டரிடம் நீதான் எனது ஹீரோ என்று சொல்லி இறக்கிறான். மேயர், வால்டரிடம் அவனைப் பற்றிய விசாரணையில் அவனுக்கு ஆதரவு தருவதாக உறுதி அளிக்கிறார், மனைவி கேட்ட அரை காலன் பாலை வாங்கிக் கொண்டு வால்டர் வீடு திரும்புவதுடன் படம் முடிகிறது.

படத்தில் தொடர்ந்து வரும் சம்பாஷணைகள் அனைத்துமே நறுக்குத் தெறித்தாற் போல உள்ளன.

மாதிரிக்கு ஒன்று:

ரைடர்: I talked to God.
வால்டர்: That’s good, what did he say?
ரைடர்: He said I should trust in Him, all others pay cash. How soon can you get it down here?

இந்த அருமையான படத்தை இயக்கியவர் டோனி ஸ்காட். டோனி ஸ்காட்டின் அகால மரணம் இந்தப் படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஞாபகத்தில் வராமல் இருக்காது. 2012 ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி லாஸ் ஏஞ்சலீஸ் வின்செண்ட் தாமஸ் பாலத்திலிருந்து 185 அடி கீழே குதித்து அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யமுடியாத கொடிய மூளைப் புற்றுநோய் என்று வதந்தி பரவவே சோகமும் அதிகமானது; பரபரப்பும் அதிகமானது. ஆனால் அவர் மனைவி இதை மறுத்தார்.

ரயிலை வைத்து எடுத்த படங்களில் சாண்ட்ரா புல்லக் நடித்த ஸ்பீட் குறிப்பிடத்தகுந்த ஒன்று. 50 மைல் வேகத்தில் செல்லும் பஸ் ஒன்றில் குண்டு ஒன்று வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட த்ரில்லர் படமான ஸ்பீட் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து அதே வில்லன் ரயிலில் குண்டு வைப்பதைச் சித்தரித்து வெற்றி பெற்ற படம் ஸ்பீட்-2. ஆனால் தி டேகிங் ஆஃப் பெல்ஹாமில் மனித உணர்வுகளைத் தூண்டி விடும் விதமாக டென்ஸல் வாஷிங்டன் நடித்திருப்பதால் ஒரு மாற்று தூக்கலாக இந்தப் படம் உள்ளது.

(இருமுறை எடுக்கப்பட்ட) பெல்ஹாம் படம் மற்றும் ஸ்பீட் ஆகிய மூன்று படங்களைத் தவிர ரயிலை வைத்து எடுக்கப்பட்ட டாப் டென் படங்களில் உள்ள இதர ஏழு படங்கள்: 1) Runaway Train (1985), 2) Silver Streak (1976), 3)Spider-Man 2 (2004), 4) The General (1927), 5) Money Train (1995), 6) Broken Arrow (1996), 7) Unstoppable (2010) .
அனைத்துமே அருமைதான்!

அடுத்த வாரம் ‘படித்ததில் பிடித்தது’…

About The Author