பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! (5) – ஹோம் அலோன்

வீட்டில் தனித்து லூட்டி!

"If I had no sense of humor, I would long ago have committed suicide." – MAHATMA GANDHI

"நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையெனில் நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்றார் மகாத்மா காந்தி. வாழ்வின் கஷ்டமான தருணங்களைத் தாண்டுவதற்கும் சுகமான தருணங்களை அனுபவிப்பதற்கும் நகைச்சுவை உணர்வு இன்றியமையாதது.

இந்த உணர்வை நகைச்சுவைக் கார்ட்டூன்கள், கட்டுரைகள், கதைகள் திரைப்படங்கள் உள்ளிட்ட ஏராளமான வழிகள் மூலம் நாம் பலவிதங்களில் பெற முடியும். ஹாலிவுட் படங்களில் ஏராளமான முழு நேர நகைச்சுவைப் படங்கள் உண்டு. அனைத்தையும் பார்த்து வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்.

இந்த வரிசையில், வீட்டில் தனித்து விடப்பட்ட எட்டு வயதுச் சிறுவன் அடிக்கும் லூட்டியைப் பார்க்க ‘ஹோம் அலோன்’ திரைப்படத்தை அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

படத்தின் கதை, ஒரு சிறிய கருவை மையமாகக் கொண்டது. அவசரத்தில், பையனை மறந்து விட்டுவிட்டுப் பாரிஸ் செல்கிறது ஒரு குடும்பம். ஜாலியாகக் கழிய வேண்டிய உல்லாசப் பயணத்தில் பையன் இல்லை என்பதைக் கண்டுபிடித்ததும் அம்மா படும் பாடு எப்படி இருக்கும்! பையனோ, தான் விரும்பியபடித் தனியாக இருப்பது ஜாலியாக இருக்கும் என்றுதான் நினைக்கிறான். ஆனால், இரு கொள்ளையர் வீட்டைக் கொள்ளையடிக்கும்போதுதான் உண்மை புரிகிறது. ஆனாலும் தன் சாமர்த்தியத்தைக் காட்டிக் கொள்ளையரை அசர வைக்கிறான். நம்மை விலாப்புடைக்கச் சிரிக்க வைக்கிறான்.

மக் கலிஸ்டர் குடும்பம் சிகாகோவிலிருந்து பாரிஸ் செல்கிறது. கெவின் என்கிற எட்டு வயதுப் பையன் தனியே விடப்படுகிறான். பஜ் என்கிற தன் அண்ணனுடன் ஒரு குட்டி விவாதம் வரவே மேல் மாடியில் படுத்துத் தூங்கியவன், குடும்பத்தினரால் மறக்கப்படுகிறான். ஏனெனில், அலாரம் தவறாக அடிக்க, அதிக நேரம் தூங்கிய குடும்பத்தினர் பிளேனுக்கு லேட்டாகி விட்டது என்று அலறிப்புடைத்துக் கிளம்ப வேண்டியதாகிறது. கெவின் கூட வரவில்லை என்பதை அறிந்த தாய் துடிக்கிறாள்.

காலியாக இருக்கும் வீடுகளில் கொள்ளை அடிப்பதை வழக்கமாகக் கொண்ட ஹாரி லைம் மற்றும் ஆர்வ் மெர்சண்ட்ஸ், கெவின் வீட்டைக் குறி பார்த்து வருகின்றனர். அந்த இருவரையும் கெவின் எப்படி எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் முக்கிய அம்சம். இத்தோடு, கதையின் சுவையைக் கூட்ட அடுத்த வீட்டு, வயதான மெர்லியும் கதை ஓட்டத்துடன் இணைகிறார்.

1990ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த அமெரிக்கத் திரைப்படத்தின் வசூல் சாதனை சுமார் 20 வருடங்கள் முறியடிக்கப்படவில்லை என்பது சாதாரண சாதனை இல்லை அல்லவா!

இது பெற்ற வெற்றியைத் தொடர்ந்து ‘ஹோம் அலோன்’ வரிசையில் ஹோம் அலோன் – 2, ஹோம் அலோன் – 3, ஹோம் அலோன் – 4 வெளிவந்து ரசிகர்களைப் பரவசப்படுத்தின. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி! அடுத்து 2012 இறுதியில் ஹோம் அலோன் – 5 வெளியாகப் போகிறது.

குழந்தைகளும் பெரியவர்களும் சேர்ந்து பார்க்க நல்ல காமடிப் படம் வேண்டுமென்று எவரேனும் ஆலோசனை கேட்டால், உடனடியாக ஹோம் அலோன் சீரீஸ் படங்களைச் சொல்லி விடலாம்.

மக்காலே கல்கின் என்னும் சிறுவன் கெவினாக வந்து கலக்குகிறான்! உடன் வரும் அனைத்துப் பாத்திரங்களிலும், தேர்ந்த நடிக – நடிகையர் நடிக்கின்றனர். செட்டுகளோ பிரம்மாண்டம்! சிகாகோவில் பெரும்பாலும் படமாக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் அலங்காரம், அதையொட்டிய பாட்டு எனப் படம் குதூகலத்தையும் தருகிறது.

"This is my house, I have to defend it" எனக் கெவின் கூறுவதிலிருந்து, ஏராளமான வசனங்கள் ரசித்து மகிழக் கூடியவை. படம் வெளியானதிலிருந்து, குறும்பான ரசிகர்கள் அதில் வந்துள்ள சீன்களில் உள்ள சின்னச் சின்னத் தவறுகளை எல்லாம் பட்டியலிட்டு அனைவருடனும் பகிர்ந்து மகிழ்கிறார்கள். அதாவது, ஒவ்வொருவரும் பலமுறை இந்தப் படத்தைத் தவறாமல் பார்க்கிறார்கள் என்றுதானே அர்த்தம்!

நீங்களும் குடும்பத்துடன் இதைப் பார்த்து மகிழலாம். முதலில் உங்கள் குழந்தை பக்கத்தில் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள்! மடியில் தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்! அது இன்னொரு ‘ஹோம் அலோனை’ உங்களிடம் உருவாக்கி விடக் கூடாது பாருங்கள்?!

(அடுத்த வாரம் ‘படித்ததில் பிடித்தது’. உங்கள் பின்னூட்டத்தைப் பதிவு செய்யுங்கள்)

**************

About The Author